எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துகொள்கிறோம்.
இன்று மனித வாழ்வில் ஊடகம் இரண்டறக் கலந்துள்ளது. பத்திரிக்கை‚
தொலைக்காட்சி‚ வானொலி‚ இணையத்தளம் போன்ற பல்வேறு தொடர்பு சாதணங்கள் ஊடாக ஊடகவியலாளர்கள் தகவல்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். இவர்கள்தான் ஒரு இனத்தின் புரட்ச்சிகர மாற்றத்தை உண்டுபண்ணக் கூடியவர்கள் என்பது வரலாற்றுப் பதிவாகும். ஒர் இனத்தின் எழுச்சி எப்போதும் பாவலர்கள்‚ ஊடகவியலாளர்கள் சார்ந்ததாகவே இருக்கும். எந்த ஒரு விடுதலை போராட்டமும் ஊடகவியலாளர்கள் பங்கு இல்லாமல் இருந்ததே இல்லை. மனித உரிமைகளில் முக்கியமாக மதிக்கப்படவேண்டிய உரிமை – கருத்துச் சுதந்திரமாகும். ஏனைய உரிமைகளுக்கு அடிப்படையாகவும் பேருதவியாகவும் இருப்பது ஜனநாயகமான அடக்குமுறையற்ற சுதந்திர ஊடகமாகும். ஏனெனில் சுதந்திர ஊடகங்கள் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். அதுவே மனித சமுதாயத்தில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. போர் சூழ்ந்த பிராந்தியத்திலும், நெருக்கடியில் தவிக்கும் நாடுகளிலும் ஏற்படும் தவறுகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஊடக சுதந்திரமாகும். இவ்வுரிமை மனித உரிமைகளின் அடிப்படையாகவும் திகழ்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை நிறுவணங்களில் ஒன்றான கல்வி, அறிவியல், பண்பாடு என்பவற்றுக்குப் பொறுப்பான யுனெஸ்கோ (UNESCO) உலகமெங்கும் சுதந்திரமான பத்திரிக்கை ஊடகங்களை கட்டியமைக்கவும் புதிய பத்திரிக்கைகளைப் ஊக்கிவித்து பாதுகாக்கவும் முயற்ச்சித்து வருகின்றது. மோதல்கள் நடைபெறும் இடங்களில் பாக்கசார்பற்று செயலாற்றும் ஊடகங்களுக்கு இவ்வமைப்பு உதவி வருகின்றது.
1991ல் ஐக்கிய நாடுகள் சபையில் ஊடக சுதந்திர தினம் கடைப்பிடிப்பது பற்றி யுனெஸ்கோ நிறுவனத்தார்களால் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1993 டெசம்பர் 20 ம் திகதி மே 3ம் திகதியை சர்வதேச ஊடக சுதந்திர தினமாக உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் 1994 ம் ஆண்டு மே 3ம் திகதிமுதன்முதலாக ஊடக சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 1997ல் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பு „யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருதை” (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும், பத்திரிகை தர்மத்திற்காகவும், பல இன்னல்களைத் தாங்கி போராடிய ஊடகவியலாளர்களிற்கு வழங்கி வருகின்றது.
இன்று பல நாடுகளில் ஊடக சுதந்திரம் மதிக்கப்படுவதில்லை. ஜனநாயக அடக்குமுறை இருக்கும் இடங்களில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கமுடியாது. தகவல் பரப்புரையும் செய்யமுடியாது. ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்கின்றார்கள். இன்னும் சில நாடுகளில் ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரைப் பணயமாக வைத்து ஊடக பணி புரிகின்றார்கள். இன்றும் பல நாடுகளில ஊடகங்கள் அரசியல்மாயமாக்கப்படுவது மட்டும் இன்றி, ஊடகவியலாளர்கள் தண்டித்தல், அச்சுறுத்தல், கடத்தல், கொலை போன்ற பல சொல்லெனா இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள்.
அவ்வாறு இலங்கையிலும் ஊடக சுதந்திரம் மதிக்கப்படுவதில்லை. ஊடக தர்மத்திற்கு இனங்கி இலங்கை நாட்டில் பத்திரிக்கையாளர்களால் ஒரு சம்பவ இடத்துக்குச் சென்று சுதந்திரமாக செய்திகளை சேகரிக்கவோ, நிகழ்வு நடந்த இடதுக்குச் சென்று உண்மை நிலவரத்தை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் உரையாடி உண்மைகளை கேட்டறியவோ முடியாத நிலைமையே உள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதமானது ஊடகத்தின் மீதான அடக்குமுறையினூடாக தமிழீழ மக்களின் கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் வெளியுலகம் அறியமுடியாத நிலைமையை உருவாக்கி வருகின்றது. தமிழர்கள் தமது தாய்நாட்டில் வாய் பேசா மௌனிகளாகவே வாழ்ந்து வருகின்றார்கள். போரினால் இடம்பெயர்ந்து இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களை ஆயுத முனையில் அரசாங்கம் அச்சுறுத்தி, அவர்களை பயண்படுத்தி போலியான காட்சிப்படுத்தல்களின் மூலம் தமிழரது நலன்களுக்கு எதிரான கருத்துக்களையும், பொய் கூற்றுக்களையும் பரப்புரை செய்து வருகின்றது. அத்தகைய செய்திகளை வெளியிட மறுக்கும் ஊடகங்கள் குறிப்பாக தமிழர்களால் நடாத்தப்படும் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகுகின்றன.
ஊடகவியலாளர்களை எச்சரிக்கும் முகமாக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் கைது, காணாமல் போதல், கொலை செய்தல் போன்றவை இன்றும் தொடர்கின்றன. கொலை செய்யப்படும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதனால் உயிர் அச்சுறுத்தல்களின் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் தங்கள் உயிரைத் துச்சமாக எண்ணிச் செயலாற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசின் தலையாய கடமையாகும். அனால் சிறிலங்கா அரசானது இவ் கடைமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. ஊடகவியலாளர்களின் கொலைகளுக்காகவோ, காணமல் போகடிக்கப்பட்டமைக்காகவோ இதுவரையில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். ஆகவே சர்வதேச சமூகத்தினரை சிறிலங்காவில் நடைபெறும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக குரலெழுப்புமாறும், ஊடவியலாளர்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறும் தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி இவ்வறிக்கையின் ஊடாக கேட்டுக்கொள்கிறது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
No comments:
Post a Comment