July 22, 2016

மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லட்டும்! பேரறிவாளன் டயரி! தொடரும் வலி!- பாகம் - 10!

வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14. உண்மையில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது தானா என்பது, சாமான்ய இந்தியனின் கேள்வியாக எப்போதுமே இருந்து வருகிறது.

மறைந்த மனித உரிமைப் போராளியும் நீதியரசருமான திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பொன்றில், சிறைகள் வெறும் செங்கற்களால் கட்டப்பட்டதல்ல எனக் குறிப்பிட்டார். மூடாத கல்லறையில் நடமாடும் பிணங்களடா என கவிஞர் ஒருவர் சிறைவாசிகளின் வலியைப் பதிவு செய்தார்.

கொலைக் குற்றம் என்பதற்கு இந்தியா முழுமையும் ஒரே சட்டம்தான் உள்ளது. ஆயுள் சிறை என்பதற்கான பொருளும் ஒன்றுதான். ஆனால், அவர்களின் முன்விடுதலை மட்டும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

ஒருமுறை எங்கள் சிறையைப் பார்வையிட வந்த அகில இந்திய சிறை அதிகாரிகளுக்கான பயிற்சி மைய இயக்குநர், 20 ஆண்டுகளுக்கு மேலும் சிறைவாசம் அனுபவிக்கும் எங்கள் வழக்கினர் தவிர்த்து வேறு சிலரையும் பார்த்துவிட்டு வியந்துபோய், எங்கள் ஆந்திர சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர்கூட இல்லை என்றார்.

கர்நாடக மாநில அரசு, கடந்த 07.01.2014 அன்று அரசு ஆணை ஒன்றை வெளியிட்டது. அதாவது, அந்த மாநிலத்தில் தண்டனைக் கழிவுடன் 14 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தண்டனை அனுபவிக்கும் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது என முடிவெடுக்கிறது.

அதன்படி, 2016-ல் மட்டும் ஏறத்தாழ 600-க்கும் அதிகமான ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். கேரள மாநிலத்தில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று 8 ஆண்டுகள் முடித்த நன்னடத்தை ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்று மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் நிலையைக் களையத்தான், 20.10.1999 மற்றும் 26.09.2003 ஆகிய தேதிகளில் கூடிய தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டல் நெறிமுறைகளுடன் கூடிய பரிந்துரையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்தது.

ஆணையத்தின் அந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்றுக்கொண்டு நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் Model Prison Manual என ஒன்றைத் தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது.

நடுவண் அரசின் பரிந்துரையின்படி எந்தச் சிறையிலும் தண்டனைக் கழிவுடன் 25 ஆண்டுகளுக்கும் மேல் எந்த ஆயுள் சிறைவாசியும் சிறையில் இருக்கக் கூடாது. நாங்கள் தண்டனைக் கழிவே இல்லாமல் 25 ஆண்டுகளை முடித்துவிட்டோம்.

எங்கள் வழக்கில் நடுவண் அரசு உரிமை கொண்டாடச் சட்டப்படி கூறும் ஒரே காரணம் வழக்கை விசாரித்தது நடுவண் புலனாய்வுத் துறை (CBI) என்பது மட்டுமே.

ஆனால், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் நிலை என்ன? அதனை விசாரித்ததும் CBI அமைப்புதான். ‘தடா’ சட்டப்படி வழக்கு நடந்து, உச்ச நீதிமன்றம் ‘தடா’ பிரிவுகளில் தண்டனையை உறுதி செய்தது.

நடிகர் சஞ்சய்தத் அந்த வழக்கில் இந்திய ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளில் 5 ஆண்டு தண்டனை பெற்றார்.

‘தடா’ சட்டமும், இந்திய ஆயுதச் சட்டமும் நடுவண் அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட சட்டங்கள் என்பதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Cr.P.c.) பிரிவு 435 (2)-ன்படி நடுவண் அரசுதான் எந்தத் தண்டனைக் கழிவையும் வழங்க முடியும் என்கிறது டிசம்பர் 2, 2015 அன்று வழங்கப்பட்ட எங்கள் விடுதலையை எதிர்த்துப் போடப்பட்ட, வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.




இருப்பினும், 8 மாதங்கள் தண்டனைக் கழிவு பெற்று முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் நடிகர் சஞ்சய்தத்.அவரை யார் விடுதலைசெய்து ஆணை பிறப்பித்தது என்பதுதான் எனது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பம்.

அதற்கு இன்றுவரை பதில் இல்லை. அவரை விடுதலை செய்ய நடுவண் அரசின் முன்அனுமதி பெறப்பட்டதா? குறைந்தபட்சம் நடுவண் அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா? எதற்கும் விடை இல்லை. அவரது தண்டனைக் காலத்தில் ஆண்டுக்கு 28 நாட்கள் என ஏறத்தாழ 84 நாட்கள் Furlough என்ற விடுப்பில் சென்று திரும்பினார்.

இந்த நாட்கள் தண்டனைக் காலமாகக் கருதப்படும். இவையில்லாமல் தண்டனைக் காலத்தில் கணக்கில் வராத பரோல் விடுப்புகளில் சென்றால், அவர் தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியிடமிருந்து ஒரு AK47, ஒரு கைத்துப்பாக்கி ஆகியன வாங்கிய குற்றத்துக்காகத் தண்டனை பெற்றிருந்தார்.

அப்போது அவரது வயது 32. சிறைக்குள் வானொலி வர்ணனையாளராக இருந்த அவரது நன்னடத்தையை நான் கேள்வி எழுப்பவில்லை. அதனால் அவருக்குக் கிடைத்த முன்கூட்டிய விடுதலையை மறுத்தலிக்கவில்லை.

ஆனால் அதே அளவுகோள், சட்ட நிலைப்பாடு எனது வழக்கில் ஏன் இல்லாமல் போனது என்பதே எனது கேள்வி?

‘தடா’ சட்டம், வெடிபொருள் சட்டம், ஆயுதச் சட்டம் என நடுவண் அரசின் மொத்த ஆளுகைக்குட்பட்ட சட்டப் பிரிவுகளில் ஆயுள் தண்டனை பெற்ற தனது மாநிலத்தைச் சேர்ந்த காலிஸ்தான் இயக்கத்தைச் சார்ந்த 13 சிறைவாசிகளை முன்விடுதலை செய்யக் கோரி பஞ்சாப் மாநில அரசு நடுவண் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

அவர்களில் 1990-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு ‘தடா’ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்று 25 ஆண்டுகள் 8 மாதங்கள் தண்டனையைக் கழித்து விட்டு உத்தரப் பிரதேச சிறையில் இருந்த வார்யாம் சிங் (Waryam Singh) என்ற சிறைவாசியை நடுவண் உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களின் பரிந்துரையின் பேரில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் திரு.அகிலேஷ் யாதவ் இந்த ஆண்டின் முற்பகுதியில் விடுதலை செய்துவிட்டார்.

அந்தப் பட்டியலில் மேலும் மூவரின் முன்விடுதலைக்கு நடுவண் அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் எனது விடுதலையிலும் கருத்தில் கொள்ளப்படுமா? இவர்கள் அனைவருமே சிறை நன்னடத்தைக்காக முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்கள் எனில், எனது நன்னடத்தை குறித்து நான் சொல்வதைக் காட்டிலும் சிறையில் என்னைப் பராமரிக்கும் சிறை அதிகாரிகளும் உடன் வாழும் சிறைவாசிகளும்தான் கூற வேண்டும்.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் எனக்கு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற சிறைத்துறை துணைத்தலைவர் (DIG OF PRISONS) திரு.ராமச்சந்திரன் அவர்கள் இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டி தந்துள்ளார்.

உள்ளபடியான இந்தப் பாகுபாடுகளை உச்ச நீதிமன்ற பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கடந்த 08.01.2016 அன்று புனே, எர்வாடா சிறைக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்தேன்.

30 நாட்கள் கழித்தும் அங்கிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில் 01.03.2016 அன்று அந்தச் சிறையின் முறையீட்டு அலுவலருக்கு (First Appllate Authority) மனு செய்தேன். 21.03.2016 அன்று ‘‘நீங்கள் அனுப்பிய 10 ரூபாய்க்கான Indian Postal Order 3.11.2011-ல் எடுக்கப்பட்டதால் காலாவதியாகிவிட்டது. எனவே மனு நிராகரிக்கப்படுகிறது என பதில் அனுப்பினர்.

இதைக் கண்டுபிடிக்க சிறை அதிகாரிகளுக்கு இரண்டு மாதங்கள் தேவைப்படுகிறது.நானும் சலிப்படையவில்லை. மீண்டும் மார்ச், 2016 மாதத்தில் புதிய Postal Order பெற்று 24.3.2016 அன்று புதிய விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பினேன்.

எனது விடாமுயற்சியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும். இதற்கும் 30 நாட்களில் எந்தப் பதிலும் வரவில்லை. மீண்டும் நான் 04.05.2016 அன்று மேல்முறையீடு செய்தேன். அதன்பின் விழித்துக்கொண்ட எரவாடா சிறையின் தகவல் அலுவலர் 18.05.2016 தேதியிட்டு எனக்கு ஒரு பதில் அனுப்பினார்.

அதில் நான் கேட்ட தகவல் மூன்றாம் தரப்பினர் தகவல் (Third Party Information) என்பதால், தர இயலாது எனக் குறிப்பிட்டிருந்தார்.எனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இதைவிட எவராலும் கேலிக்குரியதாக்க முடியாது.

இனி ஓர் அரசு நிறுவனத்தில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு (Tenders) அதில் ஒருவருக்கு அனுமதியும் மற்றவர்களுக்கு மறுப்பும் தெரிவிப்பர் எனில், மறுக்கப்பட்டவர் எவரும் எப்படி அந்த ஒருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது எனக் கேள்வி கேட்க முடியாது.

நல்ல மதிப்பெண் எடுத்த எந்த மாணவரும் ஒரு பொறியியல் கல்லூரியில் தன்னைவிடக் குறைவான மதிப்பெண் எடுத்தவரை அனுமதித்தது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில், அவையெல்லாமும் மூன்றாம் தரப்புத் தகவலாகிவிடுகிறது.

இந்த நிலையில்தான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான எனது போராட்டத்தில் முதல் முறையாக மேல்முறையீட்டு அலுவலர் எனது சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைக்கும்படி அனுமதிக் கடிதம் அனுப்பினார்.

28.06.2016 அன்று எனது சார்பில் மும்பை வழக்குரைஞர் திரு.நிலேஷ் என்பவர் எரவாடா சிறையின் மேல் முறையீட்டு அலுவலர் முன்பு ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை முன்வைத்திருக்கிறார். மேல்முறையீட்டு அலுவலரின் பதில் இன்னமும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.

ஒருபுறம் பதவி, செல்வாக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிறை சலுகைகளைக் கேள்வியே எழுப்ப முடியாமல் இருப்பதும், மறுபுறம் 25 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் மாநில அரசே முடிவெடுத்து விடுதலை அறிவித்தாலும் எவர் வேண்டுமானாலும் கேள்வி எழுப்ப முடியும் எனில், எங்கள் வழக்கு அரசியல் சாசனத்தின் பிரிவு 14-க்கு அப்பாற்பட்டதா? -

மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லட்டும்.

(வலிகள் தொடரும்)

No comments:

Post a Comment