நீதிக்காக ஏக்கத்தோடு காத்திருப்பவர்களுக்கு இந்த நாள் ஒரு சோகம் மிகுந்த நாள்.உயிர்கள் மரணித்த இடம் முள்ளிவாய்க்கால், நீதி மரணித்தது ஐ.நாவிலா என்ற கேள்வியோடு இருள் சூழந்தது நேற்று.
ஐ.நாவின் அறிக்கை வெளிவருவது ஆறு மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது என்ற செய்தியே நீதிக்காக ஏங்கியோரின் நெஞ்சுகளை உலுக்கியது. தாமதத்தினால் நீர்த்துப் போன நீதி இனி உள்நாட்டுப் பொறிமுறைக்குள் சிக்குமானால், மறுக்கப்பட்ட நீதிக்கு சமன்.
நம்பியிருத்தலினதும் காத்திருத்தலினதும் விளைவை எமது தேசம் மீண்டுமொருமுறை எதிர்கொள்கிறது. எதிர்பார்ப்புகளும் வாக்குறுதிகளும் எமக்கானதை எமக்கு தராது என்பதனை கசிந்துள்ள ஐ.நா அறிக்கை தொடர்பான செய்திகள் நிரூபிக்கின்றன.
குருதியும் மரணமும் நிறைந்த எமது தேசத்தின் நீதிக்கான போராட்டத்தை தமது அரசியல் இருப்பிற்காக பயன்படுத்திய அரசியல்வாதிகளை ஆண்டவனுக்கு கண்ணிருந்தால் கவனிக்கட்டும்.
இது தேர்தலோடு மட்டும் தேங்கி நிற்கக்கூடிய விடயமல்ல. மாறாக, நீதி கிடைக்கும் வரை ஓயக்கூடாத பயணம்.
சர்வதேசமயப்படுத்தப்பட்ட தமிழர்களின் நீதிக்கான போராட்டம், மென்சக்தியால் வல்லரசுகளை வளைத்ததாகக் கூறிக்கொண்டோரின் உடந்தையால் உள்நாட்டுக்குள் முடக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
மரணித்தோரே எம்மை மன்னிக்குக! நீதிக்காய் காத்திருப்போரே எம்மை மன்னிக்குக! வல்லமை தாரீர் எம் மீதிப் பயணத்தைத் தொடர…
ஆறுதல் சொல்லிட சொற்களில்லை..ஆயினும் பேரிடர் வரினும் உங்கள் பாரத்தை நாங்கள் சுமப்போம்…
எதிர்காலம் இனியில்லையென்ற போது, இருள் அகற்றிய அனுபவமுண்டு.
எழுந்திட மாட்டோம் என்றெண்ணியிருக்க, வீழ்ந்தவரை நினைத்து துடித்தெழுந்து பணி தொடர்ந்த வரலாறு எமக்குண்டு.
அடங்காத அழுகை ஒலிகளும், இறுதி நேரக் கதறல்களும் எம் இதயங்களில் இடியாக வீழ்கிறது.
விடை காணும் வரை முடியாதென்று சொல்லி நாம் ஒதுங்கப் போவதில்லை.
விதியென்று சொல்லி நாம் விலகப் போவதில்லை, புதிய வழியொன்று உருவாக்குவோம்!
No comments:
Post a Comment