July 15, 2015

ராஜீவ் கொலை, 7 தமிழர்களின் விடுதலைக்கான தடை நீடிப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை
21ஆம் திகதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் இன்று அறிவித்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவர்களின் கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்திற்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரித்ததால், குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இதனால், அவர்கள் ஏழு பேரை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகளான இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திரகோஸ், அபய் மனோகர் சப்ரே, உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த மனுக்களை விசாரித்தது.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் மரண தண்டனைக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீதும் விசாரணை நடைபெறும் என தெரிவித்தனர். அத்துடன், ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களின் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

No comments:

Post a Comment