June 16, 2015

'கடல் குதிரைகள்' திரைப்படப் பாடல் வெற்றி தமிழீழ விடுதலைப் போராட்டம் உயிரோடு இருக்கின்றதற்கான சான்று! - காசிஆனந்தன்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தொடர்ந்து தனது திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
பேசாத திரைப்படங்கள் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம் தமிழீழ மக்கள் தங்களுக்கென்று திரப்படம் தயாரித்ததில்லை.

தமிழ்நாட்டில் உருவாகும் திரைப்படங்களையே அவர்கள் பார்த்து வருகின்றார்கள். பல்லாயிரம் கோடி பணத்தை இதுவரை அவர்கள் தமிழ்நாட்டு திரைப்பட உலகத்திற்குத் தந்திருக்கின்றார்கள்.

ஆனால் தமிழீழ மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்கள் பட்ட கொடுமைகளை துயரங்களை திரைப்படமாக்க தமிழ்நாட்டு திரைப்பட உலகம் பெரியளவில் முன்வரவில்லை.

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தன்னை முழுமையாக இப்பணியில் ஈடுபடுத்தி வருகின்றார். அவருக்கு தமிழீழம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றது.

நான் திரைப்படங்களுக்கு என்றும் பாடல்கள் எழுதுவதில்லை. ஆனால் தமிழீழ போராட்டம் பற்றிய இரண்டு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொடுத்திருக்கின்றேன். ஒன்று உச்சிதனை முகர்ந்தால் அடுத்தது இப்போது கடல் குதிரைகள்.

புகழேந்தி தங்கராஜ் அவர்களின் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தில் நான் எழுதிய 'இருப்பாய் தமிழா நெருப்பாய்...' பாடலுக்கு பாசத்திற்குரிய தம்பி இமான் மிகச்சிறப்பாக இசையமைத்து இருந்தார்.

இன்று இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் உருவாக்கியிருக்கும் கடல் குதிரைகள் திரைப்படத்தில் நான் எழுதிய 'கூண்டுக்குள்ளே விடுதலையை அடைக்க முடியுமா?' பாடலுக்கு என் இனிய நண்பர் தேவேந்திரன் அவர்கள் உணர்ச்சியோடு நெஞ்சை உசுப்பும் வகையில் இசையமைத்திருப்பதை நான் பார்த்தேன்.

தமிழீழ விடுதலைப் பாடல்கள் பல முன்பே இசைக் கலைஞ்ஞர் தேவேந்திரன் அவர்களால் இசையமைக்கப்பட்டதையும் அப்பாடல்கள் விடுதலைப் போராளிகளுக்கு உணர்வூட்டியதையும் உரமூட்டியதையும் நான் அறிவேன்.

தமிழீழ விடுதலைப் போராட்ட உணர்வோடு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ஒரு பாடலைப் பாடி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த கனடாவில் வாழும் சின்னம்சிறு இசைக் குயில் ஜெசிகா ஜூட் கடல் குதிரைகள் திரைப்படத்தில் என் பாடலைப் பாடியுள்ளார்.

கடல் குதிரைகள் திரைப்படத்தில் நான் எழுதி தேவேந்திரன் இசையமைத்த பாடலின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கனடாவில் நடைபெற்றது. பின்பு அது இணையத்தளத்தில் வந்த போது ஒரு லட்சத்து பதினையாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கேட்டதை அறிந்து நான் மனம் நெகிழ்ந்தேன்.

இப்பாடல் உருவாக்கத்திலும் இத்திரைப்பட உருவாக்கத்திலும் புகழேந்தி தங்கராஜ் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய கலைஞர்கள் அத்தனைபேரையும் இத்தருணத்தில் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

'கூண்டுக்குள்ளே விடுதலையை அடைக்க முடியுமா?' பாடலுக்கு உலகளவில் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும் இத்திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் உரித்தானது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் உயிரோடு இருக்கின்றது என்பதுதான் இதன் பொருள். தமிழ்த் திரைக் கலையை நொந்து போன நொடிந்து போன தமிழீழ அடிமைகளின் விடுதலைக்காக பயண்படுத்தும் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களுக்கு தலைவணங்குகின்றேன்.

'கடல் குதிரைகள்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'கூண்டுக்குள்ளே விடுதலையை அடைக்க முடியுமா?' பாடல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது குறித்து அந்தப் பாடலை எழுதிய உணர்ச்சிக் கவிஞ்ஞர் காசி ஆனந்தன் அய்யா அவர்கள் தனது கருத்துக்களை இவ்வறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment