June 16, 2015

மணிவண்ணன் தமிழ் மக்களுக்காக வீரத்துடன் குரல் கொடுத்த மாமனிதன் - யாழ்ப்பாண மக்கள் பேரவை!

தமிழ்த் தேசிய உணர்வாளரும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரும் தமிழ் மக்களில் அக்கறையுடையவருமான மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தி யாழ்.குடாநாட்டு மக்களை ஆழ்ந்த துயரமடைய வைத்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. 


தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்காக வீரத்துடன் குரல் கொடுத்த மாமனிதன் ஒருவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை என்பதை நினைக்க எங்கள் உள்ளம் அழுகிறது. இவரின் இழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழ் மக்களுக்காக இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் குரல் கொடுத்த மணிவண்ணன் அவர்களுக்கு தமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குவதாக தெரிவித்துள்ள குடாநாட்டு மக்கள் பேரவை, அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரத்தில் தாங்களும் பங்கெடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் அன்னாரின் இழப்பால் ஆழ்ந்த கவலையடைந்திருக்கும் திரை ரசிகர்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் யாழ்ப்பாண மக்கள் பேரவை தமது அனுதாபங்களையும் தெரிவித்திருக்கின்றது.

மணிவண்ணன் மரணித்த செய்தி அறிந்த யாழ்ப்பாண மக்கள் பேரவை அவருக்கு வணக்கம் தெரிவித்து நேற்று சனிக்கிழமை இரவு வெளியிட்ட அஞ்சலிச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்கள இனவெறியர்களின் கடும்போக்குவாதத்திற்குள் சிக்கித் தவித்த தமிழ் மக்களை சிங்களத்தின் பிடியிலிருந்து மீட்க வேண்டுமென்று பெரும் விருப்பு கொண்டு செயற்பட்ட அமரர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மரணமடைந்த செய்தியானது எங்களை ஆழ்ந்த கவலையடைய வைத்துள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த மாமனிதன் ஒருவர் இன்று எங்கள் மத்தியில் இல்லை என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்த போதிலும் சினிமாவிற்கு அப்பால் ஈழத்தமிழ் மக்களை நேசித்த பெருமனிதன். தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழ் மக்கள் சிங்களவர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டமை கண்டு அவர் பொங்கியெழுந்தார். தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டுமென்று உரத்த குரல் எழுப்பினார்.

மணிவண்ணன் அவர்களின் சிந்தனைகள் ஏனையோரை விட அவரை வித்தியாசமான மனிதனாக மாற்றியது. அவர் எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார். தமிழ் மக்களைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர் ஆழமாக நேசித்தார். தான் இறந்தால் தனது உடலுக்கு தமிழீழ தேசியக் கொடியாகிய புலிக்கொடி போர்த்துமாறு அவர் புலம்பெயர் சமூகத்தினர் முன் உரையாற்றும் போது உணர்ச்சிப் பெருக்கோடு கூறியமையானது அவரின் போராட்ட ஆதரவையும் தமிழ் மக்கள் மீதான அன்பையும் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த வேளையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் எங்களை விட்டுப் பிரிவது எங்களுக்கு பெரும் இழப்பாகும். அதிலும் மணிவண்ணன் அவர்களின் இழப்பானது அவரின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் போன்று தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

மணிவண்ணன் அவர்கள் எந்த இலட்சியத்தை நேசித்தாரோ, அவர் தமிழ் மக்கள் தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரோ அந்த இலட்சியங்களையும் அவரின் சிந்தனைகளையும் நிறைவேற்றுவதே நாம் அவருக்கு செய்கின்ற இறுதி வணக்கமாகும்.

"இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை. தமிழரின் போராட்டம் தோற்பதுமில்லை"

தமிழ் மக்கள் பேரவை.
யாழ்ப்பாணம்.
15.06.2013

No comments:

Post a Comment