June 16, 2015

வலி.வடக்கு- கால்நூற்றாண்டு அகதிகள்!

வலி வடக்கு மக்களின் வேர்கள் பிடுங்கப்பட்டு இன்றுடன் கால் நூற்றாண்டுகள் கடந்து விட்டன. திடீரென ஒரேநாளில் சொந்த இடங்களிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட அந்த மக்கள் கூட்டம், சொந்த ஊரின்
வாசனையை நினைவில் சேமித்தபடி, திரும்பிச் செல்லும் ஒருநாளிற்காக காத்திருக்கிறார்கள். அவர்களின் காத்திருப்பு பலனளிக்குமா? கானல்நீராகுமா? யாராலும் விடை சொல்ல முடியாத கேள்வியிது.
உலகின் சக்திமிக்க நாடுகள் மற்றும் அமைப்புக்களினாலேயே அதனை அறுதியிட முடியாதுள்ளது. இலங்கை தொடர்பான ஒவ்வொரு பேச்சிலும் மீள்குடியேற்றத்தை அவர்கள் வலியுறுத்துகின்ற போதும், மாறிமாறி வரும் எந்த சிங்கள அரசும் அவர்களை சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கவில்லை.
வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேறிய யாருமே மனம் விரும்பி அங்கிருந்து மூட்டை, முடிச்சை கட்டிக் கொண்டு புறப்பட்டவர்கள் அல்ல. முன்னேறிவரும் இராணுவத்திடமிருந்து உயிரைப்பாதுகாத்து கொள்ள அங்கிருந்து தப்பி வந்தவர்கள். தமது சொந்த இடங்களிற்கு திரும்பும் உரித்து அவர்களிற்குள்ளது. சொந்த நிலத்திலிருந்து மக்களை விரட்டிவிட்டுத்தான் ஒருநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமென்றால்- அந்த பாதுகாப்பும், அரசும் யாருக்கும் வேண்டியதில்லை.
மக்களிற்கு இல்லாத பாதுகாப்பு நிலத்திற்கு எதற்கு?
எனினும், வடக்கு, கிழக்கின் துயரக்கதை இதுதான். வலி.வடக்கிலிருந்து சம்பூர் வரையும் இதுதான் மாற்றமில்லா கதை.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் செல்வம் கொழிக்கும் நிலப்பகுதிகளில் வலி வடக்குப் பிரதேசமும் ஒன்று.
மீன்பிடி, விவசாயம் என்பன இந்தப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் தொழில்கள் ஆகும்.
செல்வம் கொழிக்கும் இந்த நிலத்திலிருந்து அதன் மக்கள் துரத்தப்பட்டு இன்றோடு 25 வருடங்கள் கடந்துவிட்டன.
வலி வடக்கு பிரதேசத்தின் மக்கள் இன்று உக்கிப்போன அகதிக்கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 34 அகதிமுகாங்களில் சுமார் 1600 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
கால் நூற்றாண்டு அகதிவாழ்வு, நிலத்திற்கான போராட்டம், என பெரும் நெருக்கடிகளைக் கடந்தும் தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாய் வாழ்கின்றனர் வலி வடக்கு மக்கள்.
புதிய அரசாங்கத்தினாலாவது மீள்குடியேற்றப்படுவோம் என்று எதிர்பார்த்த மக்கள் தொடர்ந்தும் அகதி வாழ்வுக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
வலி வடக்கில் 1000 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரச மற்றும் இராணுவத் தரப்புக்கள் குறிப்பிடுகின்றபோதும் வெறும் 570 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்பட்டிருப்பதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழு குறிப்பிடுகிறது.
26ஆவது வருடத்தில் அகதிகளாக வாழத் தொடங்கியுள்ள வலி வடக்கு மக்களை சொந்த நிலத்தில் மீள்குடியேற்றி அவர்களின் அகதிவாழ்வை முடிவுக்குக் கொண்டுவர அரசு முன்வரவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment