June 16, 2015

தாய், தந்தை, சகோதரியை கொன்று பிணையில் வந்தவர் போதைப்பொருளுடன் கைது!

வத்தளை பிரதேசத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதி சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றிலிருந்து மற்றுமொரு வாகனத்திற்கு போதைப் பொருளை மாற்றும் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது 24 இலட்சத்திற்கும் அதிகமான பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள் 300 இலட்சம் பெறுமதி வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹெரோய்ன் போதைப்பொருள் மாற்றப்பட்ட இரு வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த சந்தேகநபர் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வௌ்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் உள்ள வீடொன்றினுள் தாய்,தந்தை மற்றும் சகோதரி ஆகியோரை கொலை செய்த குற்றத்தில் கைதான குமாரசாமி பிரஷான் ஆவார்.
சிறைச்சாலையில் இருந்த சமயத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அதன் மூலம் பிரபல போதைப்பொருள் வியாபாரியான குடு லலித் என்பவரின் கீழ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். கொலை வழக்கில் பிணையில் வெளிவருவதற்கும் குடு லலித்தே இவருக்கு உதவியுள்ளார்.
பிணையில் வெளிவந்ததன் பின்னர் அவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
1231

No comments:

Post a Comment