June 3, 2015

சாவகச்சேரியில் தன்னை பொலிஸ் எனக் கூறிய நபர் பொதுமக்களால் நையப்புடைப்பு !

தென்பகுதியில் இருந்து கொண்டு வந்த கார் ஒன்றை போலி ஆவணங்களைக் காட்டி சாவகச்சேரிப் பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார் கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்.இவ்வாறு விற்பனை செய்த
காருக்கான பணத்தின் அரைவாசிப் பகுதியைக் கொடுத்து காரை வாங்கிய நபர் அக் காரினுடைய ஆவணங்கள் போலியானவை எனத் தெரிந்ததும் மீதிப் பணத்தை கொடுக்காது விட்டுள்ளார்.

இதனால் காரை விற்றவர் காரை வாங்கியவரை அச்சுறுத்தி மிகுதிப் பணத்தை பெற முடிவு செய்துள்ளார்.

தனக்கு தெரிந்த நபர் ஒருவரை கொழும்பில் இருந்து வந்த புலனாய்வுப் பொலிஸ் என தெரிவித்து அவரைக் கொண்டு தொலைபேசியில் காரை வாங்கியவரை அச்சுறுத்தியுள்ளார்.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் மிகுதிப் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இல்லாது விடில் பொலிஸ் உன்னைக் கைது செய்யும் என தொலைபேசியில் குறித்த நபரும் வெருட்டியுள்ளார்.

தொலைபேசியில் வெருட்டிய சம்பவத்தை சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் சர்வாவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் காரை வாங்கிய நபர்.

இதனையடுத்து தகவல் அறிந்த பொதுமக்கள், பொலிஸ்நிலையத்திற்கு அருகில் பணத்தைக் கொடுப்பது போல் சென்று அந் நபரைப் பிடித்துள்ளனர் . பிடித்து அவரை நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment