June 25, 2015

ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டினால் மீனவர்களுக்கு நன்மை!

ஐரோப்பிய ஒன்றியம் தமது மீன்பிடி வாழ்வுக்கு அளப்பரிய சேவையினை ஆற்றியுள்ளதாக மட்டக்களப்பு, காத்தான்குடி அல் அக்ஸா மீனவர் கூட்டுறவுச்சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் மட்டக்களப்பு,காத்தான்குடியில் வாவியினை ஒட்டியதாக படகு இறங்குதுறை மற்றும் மீன் ஏலவிற்பனை நிலையம் அமைக்கப்பட்டுவருகின்றது.
நேற்று  மாலை அப்பகுதிக்கு ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் அப்பகுதிக்கு சென்று வேலைத்திட்டங்களை பார்வையிட்டனர்.
காத்தான்குடி,ஆரையம்பதி,படுவான்கரை மற்றும் நொச்சிமுனை ஆகிய பகுதியில் உள்ள களப்பு மீன்பிடியாளர்களின் நன்மை கருதி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் காத்தான்குடியில் படகு இறங்குதுறை மற்றும் மீன் ஏலவிற்பனை நிலையம் என்பன சுமார் 13மில்லியன் ரூபா செலவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுவருகின்றது.
கடந்த கால வெள்ள அனர்த்தம் காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் எங்களுக்கு இந்த நிலையம் மூலம் சிறந்த எதிர்காலம் ஏற்படும் என நம்புவதாக அல் அக்ஸா மீனவர் கூட்டுறவுச்சங்க செயலாளர் எம்.யு.முகமட் ரபீக் தெரிவித்தார்.
தமது பகுதி மீனவர்களின் எதிர்காலம் தொடர்பில் தாங்கள் பெரும் கவலையில் இருந்தபோது ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை தங்களுக்கு பாரிய சந்தோசத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் தினந்தோறும் பிடிக்கும் மீன்களை விற்கமுடியாத நிலையில் அவற்றினை சேமிக்க இடம் இன்றி சிலவேளைகளில் மீன்களை வீசும் நிலை இருந்துவருகின்றது.இந்த வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்தால் இந்த நிலையத்திலேயே மீன்களை பழுதாகாமல் பாதுகாக்கமுடியும் என குறித்த மீனவ சங்கத்தின் உறுப்பினரான யு.எம்.அப்துல் ரசாக் தெரிவிக்கின்றார்.
இப்பகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களும் மீன்கள் பிடிப்பதனால் இரு இனத்தவர்களும் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பமும் தமக்கு கிடைத்துள்ளதாக அல் அக்ஸா மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் ஏ.சி.ஜவ்பர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின்போதும் கடும் காற்று வீசும்போது படகு கட்டுவதற்கான இறங்குதுறை இல்லாத காரணத்தினால் பெரும் இன்னல்களை இப்பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுவந்தனர்.ஆனால் இந்த இறங்குதுறை பூர்த்தியாகும்போது அந்த நிலை மாற்றமடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த இறங்குதுறை இல்லாத காரணத்தினால் கடந்த காலத்தில் படகுகள் காணாமல்போய் சேதமடைந்த நிலைகள் இனிவரும் காலத்தில் உருவாகாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் இந்த மீன் ஏல விற்பனை நிலையத்தில் வியாபாரிகளை ஒருங்கிணைத்து மீன்களை விற்பனைசெய்யும் வகையில் இந்த நிலையம் எதிர்காலத்தில் செயற்படவுள்ள காரணத்தினால் களப்பு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவோர் எதிர்காலத்தில் இலாபம் ஈட்டக்கூடிய நிலையேற்படும் என அல் அக்ஸ்ரா மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் பொருளாளர் எம்.யு.வெல்லத்தம்பி தெரிவித்தார்.
பல இடங்களில் மீன்களை பிடிக்கும் மீனவர்கள் தமது மீன்களை இந்த ஏல விற்பனை நிலையத்தில் வைத்து வியாபாரிகளுக்கு விற்பனைசெய்யமுடியும்.விற்பனை செய்ய முடியாத மீன்களை பதனிட்டு பாதுகாத்து மறுதினம் விற்பனை செய்வதற்கான வசதிகளும் இந்த நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ளமையானது வறிய மீனவர்களுக்கு வரப்பிரசாதம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment