July 24, 2015

விடுதலைப் புலிகளே தமிழினத்தின் ஏகபிரதிநிதிகள் என்பதை அகிலமெங்கும் நியாயப்படுத்தியவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம்!

மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் யார் என்பதற்கான விடையினை மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் அரசியலை புரிந்துகொள்ள விரும்பாதவர்களுக்கும் அவரின் அரசியல் ஆழத்தினை அறியவிரும்பாத தமிழர்களுக்கும் கூட அவர் மறைவு தெட்டத்தெளிவாக புரியவைத்திருக்கின்றது.

அவரது தமிழின உணர்வை, தன்மான உணர்வை தமிழன் எனும் துணிவை அவரது மறைவிற் தான் தமிழினம் குறிப்பாக தலைநகர் வாழ் தமிழினமும் தமிழ்தாயகம் வாழ் தமிழினமும் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் சிங்களத் தேசியத்தின் இனவாதக் கும்பல்கள் அவர் மறைவிற்கு முன்னரே அதீதமாக புரிந்து கொண்டிருந்ததால்தான் குமார் பொன்னம்பலம் அவர்களை ஒரு புலமைமிக்க தமிழ்த்தேசியவாதியாக, வல்லமைகொண்டவராக அடையாளம்கண்டு அவரின் மறைவினை சிங்கள இனவாதம் உறுதிசெய்து கொண்டது, அவரது கொலைக்கு காரணமாக அமைந்தது. அந்த வகையில் அந்த மாமனிதனாம் எம் தலைவன் தன் தலைவிதியைப் புரிந்து கொண்டுதான் தமிழன் என்று சொல்லித் தலைநிமிர்ந்து நிற்கவேண்டிய தன்மையைக் கடைப்பிடித்து அஞ்ஞாதவாசம் செல்லும் நிலையை நிராகரித்து தமிழ் தேசிய தலைமையின் குரலை, தேவையை, அரசியல் தன்மையை தலைநகரில் நின்று உரக்கக் கூறி நியாயப்படுத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழினத்தின் ஏக பிரதிநிதிகள் எனப் பலர் சொல்ல வருவதற்கு முன்னரே, அகிலமெல்லாம் சென்று தனது இந்த அரசியல் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தியவர் அவர். அந்த வகையில் அவரது அரசியல் சிந்தனையில் ஊறித்திழைத்த ஒருவன் எனும் வகையில் அமரர் குமார் அண்ணனின் அரசியல் பாதையில் தீர்க்க தரிசனத்தைக் காண்கின்றோம்.
2000 ஆம் ஆண்டில் அவர் எம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார், பறிக்கப்பட்டார். ஆனால் 1981ஆம் ஆண்டில் தென்னிலங்கையின் மாத்தறை ரோட்டரிக் கழக கூட்டத்தில் பேச்சாளராக அழைக்கப்பட்டபோதே தமிழினத்தின் சுய நிர்ணய உரிமையையும் தமிழீழக் கொள்கை நிலைப் பாட்டினையும் வலியுறுத்திப் பேசினார். அந்த வகையிலும் கூட இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே தீர்க்க தரிசனத்தோடு இனப்பிரச்சினையை நோக்கியவர் மறைந்த குமார் பொன்னம்பலம் அவர்கள்.
அது மட்டுமல்ல, தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தை, தாயக பூமியின் சுதந்திரத் தேவையை, அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாக மிகு போராட்டத்தின் நியாயப்பாட்டினை சிங்களத் தேசத்திற்கு தெட்டத் தெளிவாக, அக்கு வேறு ஆணி வேறாக இடித்துரைத்து தனது மனிதாபிமான சிங்கள தார்மிக நட்புகளைக் கூட கசப்பாக்கிக் கொண்டவர் குமார் அவர்கள். அப்படிப்பட்ட நட்பினைவிட தமிழனாக இருப்பதில் பெருமை கொண்டவர்.
அந்த வகையிற்தான் திம்புக் கோட்பாட்டின் உருவாக்கத்தில் திட்டமிட்டு இந்தியாவினாற் தவிர்க்கப்பட்ட தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராக, முதல்வராக இருந்தும் இறுதி வரை தமிழினத்தின் ஏகோபித்த கோட்பாடான திம்புத் தீர்மானங்களை நியாயப்படுத்தி வலியுறுத்தியவர் குமார். அவர் எப்பொழுதும் கூறுவதொன்று அரசியலிலும் எமக்கு நேர்மை வேண்டும். அந்த வகையில் அரசியற் சுயலாபங்களுக்கெல்லாம் அப்பால் நின்று சுயநலன்களுக்கெல்லாம் அப்பால் நின்று, தன்மானத் தமிழனாக, நேர்மையாளனாக, துணிவு மிக்க தமிழனாக, அந்த வகையில் தலைநகரில் இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயப்படுத்திக் கொண்டிருந்தவர் குமார் பொன்னம்பலம்.
மனிதவலுவுக்கும் மேலாய், இறைசித்தத்தில் அசைக்க முடியாத ஏன் பிடிவாதமான நம்பிக்கை கொண்டவர். கொண்ட கொள்கைகளில் தளர்வற்ற தற்துணிவுமிக்க பிடிப் பினைக் காட்டிக் கொள்வதனால் அரசியல்வாதியும் ஆன்மீகவாதியும், ஒருவர் போன்றே ஆகின்றார்கள். வரித்துக் கொண்ட தனது கொள்கை கோட்பாடுகளுக்கெதிராக, பயமுறுத்தல்கள், மிரட்டல்கள் எத்தனை எத்தனையோ பேரினவாதிகளிடமிருந்து வந்தபோதும் அதனை எதிர்கொண்டு ஓர் ஆன்மீகவாதிக் குரிய மனப்பாங்குடன் அதாவது துறவுள்ளத்துடன் தலைபணிய மறுத்தார். சுவண்டறை பொய்கையும் போன்றதே என்கிற நிலைப்பாட்டை நெஞ்சிருத்திக் கொண்டார்.
கொள்கை வயப்பட்ட போராளியொருவருக்குரிய நிலையிது என்றும் கருதலாம். உள்ளுணர்வு உயிர்ப்பயத்தை உணர்திய போதும் கவனத்திற் கொள்ளாத தளர்வுறாநிலையைப் பேணிக் கொண்டார். எனது உயிருக்கு எப்போதோ குறிவைக்கப்பட்டு விட்டது…,இரண்டாயிரம் ஆண்டு முடிவடையும் வரை என்னை உயிருடன் விட்டுவைப் பார்களோ, சந்திரிக்கா அரசு எனது இரத்தத்திற்காகக் காத்திருக்கிறது… இவ்வாறான உள்ளுணர்வு உணர்த்தல்களை பகிரங்கமாகக் கூறிக் கொண்டவராகவே, மரணிக்க மூன்று நாட்களுக்கு முன்னர் நாளிதழொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இந்த நாட்டின் அதி உயர் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான கருத்துக்களை மிகக் காரசாரமாகவும், வெளிப்படையாகவும், வழங்கினார். இத்தகைய துணிவுமிக்க மாமனிதர் வரித்துக் கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, தமிழினத்தின் இலட்சியபுருஷரானார்.
அராஜகத்திற்கும், அநியாயத்திற்கும் எதிராக எந்த நிலையிலும் போர்தொடுத்தார். மனித உரிமைகளைக் காக்க இவர் போராடியது போன்று யாருமே சமகாலத்தில் போராடியதில்லை எனத் துணிந்து குறிப்பிடலாம். இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமைமீறல்களை சர்வதேச அரங்குகளில் குறிப்பாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னும் (1997, 1999 ஜெனீவா உரை) ஜரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னும் (1998 பெல்ஜியம் உரை) உரையாற்றினார். செம்மணியில் நடந்த படுகொலைகளும், புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்பின் மேலாய் நடந்த விமானக்குண்டு வீச்சுக்களும், கொக்கட்டிச் சோலையில் நடந்த மனிதப் படுகொலைகளும், மன்னார் தேவாலயத்தில் நடாத்தப்பட்ட குண்டு வீச்சுக்களும் இந்த உரைகளில் கோர்வையிட்டும் காட்டப்பட்டது.
இலங்கையில் நடைபெறும் அராஜகத்தை உலகம் அறிந்தது. தூதராலயங்கள் அராஜக அரசின் கொடுமைகளை குமார் வழியாகச் சேகரித்துக் கொண்டன. ஈழத்தமிழர் பிரச்சினை புதிய பரிணாமத்தை அடைந்தது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் முன் தாயக மக்களின் அடிமை வாழ்வின் கோரம் எடுத்துச் சொல்லப்பட்டு, அடிமைத்தளையறுக்க அவர்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் குறித்து குமாரால் எடுத்துச் சொல்லப்பட்டது. தமிழ்பேசும் மக்களின் ஏகப்பிரதிநி தியாக விளங்கக்கூடிய தாரண்மியமும், தார்மீக வருமமும் கொண்டவர்கள் விடுதலைப் புலிகளே, அவர்களால் தான் தமிழர் வாழ்வுவிடிவு பெறும். தமிழர் தாயகம் உருவாகும் எனப்பட்டவர்த்தனமாக பாரெல்லாம் சென்று முழங்கியவர் மாமனிதரே.
மாறி மாறி ஆட்சிக்குவந்த அராஜக அரசுகள் பயங்கரவாதச் சட்டத்தையும், அவசரகாலச் சட்டத்தையும் பயன்படுத்தி வகை தொகையில்லாமல் தமிழ் இளைஞர்களையும், யுவதிகளையும் ஆர்வலர்களையும் சிறையிலும், தடுப்புக்காவல் முகாம்களிலும் அடைத்துச் சித்திரவதை செய்தபோது நீதித்துறை வல்லுணர்களை நிறையவே கொண்டிருந்த தமிழ் பேசும் இனத்திலிருந்து குரல் கொடுக்க எவரும் முன்வரவில்லை. கண்டும் காணாதது போல் இருந்து விட்டார்கள். தாமுண்டு தம் குடும்ப முண்டு என்கிற குறுகிய வட்டத்துக்குள் வாழ்வை வளைத்துக் கொண்டார்கள் இந்த நிலையில் இவர்கள் சார்பாக வேதனமின்றி ஆஜராகி பலரைச் சிறை மீட்ட பெருமை மாமனிதரைச் சாரும். இலங்கைச் சட்டமா அதிபர் அலுவலகச் செய்திக குறிப்பொன்றின் பிரகாரம் எண்பது வீதமான வழக்குகளில் குமார் பொன்னம்பலம் அவர்களே ஆஜரானார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. யாவற்றிற்கும் மேலாய் அமரர் மருணித்தபோது சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளின் குமுறல், கதறல், கண்ணீர் அவர்களது அநாதரவான நிலையையும், குமாரின் சேவையையும், தேவையையும் உணர்த்துகிறது.
தமிழ்த்தேசியத்தை, தமிழர் தாயகக்கோட்பாட்டை, தன்னாட்சி உரிமையை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தவாறாய் வரும் அரசாங்கத்தோடு தான் தமிழினம் பேச்சு வார்த்தை நடாத்தும் தமிழர் பிரச்சினை விடுதலைப்புலிகளுடன் பேசித்தான் தீர்வு காணப்படவேண்டும் என்கின்ற அமரரின் தீர்க்கதரிசன கருத்துக்கள் இன்று அனைத்துத் தரப்புக்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டியதொன்று என்ற குரல் ஓங்குகிற போது அமரரின் குரலும் அங்கு ஒலிக்கின்றது குமாரின் குரல் ஓயவில்லை. எமது காலத்தில் வாழ்ந்த மாட்டின் லுதர்கிங் என சாள்ஸ் கிறேப்ஸ் அமரரைப்பாராட்டியதை நினைவிருத்தி மாமனிதர் காலத்தில் வாழ்ந்தோம் என்கிற பெருமிதத்துடன் அவர்களது அரசியல் அபிலாசைகள் நிறைவுபெற தொடர்ந்தும் ஒருமுகமாய் செயல்படுவோமாக.
அந்த மாமனிதனின் நினைவுகள் நிலைக்கும் வரை, தியாக பிரம்மங்களின் சுடர் தீபங்கள் உள்ளங்களில் சுடர் விடும் வரை, இயற்கை அனர்த்தங்களுக்கும் அப்பால் எமது தீர்க்கதரிசனங்கள், தியாகங்கள் “தமிழன் என்றே தலை நிமிர்ந்து” விலை போகாது திகழும் என்பதில் ஐயமில்லை.
உலகத்தமிழர் பத்திரிகை(கனடா)

No comments:

Post a Comment