June 11, 2015

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை வெளியிட முடியாது - ஜெயநாத் ஜெயவீர!

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். பலாலியில் நேற்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வடக்கில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த காலத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு எண்ணிக்கையை தெரிவிக்கின்றனர். ஊடகங்களிலும் பல்வேறு வகையில் செய்திகள் வெளியாகின.

ஆனால் இவர்கள் கூறும் தொகையிலான இராணுவம் இன்று வடக்கில் இல்லை.

போர் முடிவடைந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் தொகையிலான இராணுவத்தினர் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எனவே, இப்போது வடக்கில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை வெளியிடமாட்டோம்.

வடக்கின் பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டே இந்த தகவலை வெளியிடாமல் இருக்கிறோம்.

அத்துடன் இந்த தகவல்களை அரசாங்கத்தின் அனுமதி இல்லாது எம்மால் வெளிப்படுத்தவும் முடியாது.

தகவல்களை வெளியிட எமக்கு அனுமதி வழங்காதவரையிலும் நாம் வடக்கில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒருபோதும் வெளியிடமாட்டோம்.

வடக்கில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஊடகங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அமைச்சரவை பேச்சாளரிடம் கேட்டுத் தெரித்து கொள்ள முடியும்.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவரும் இந்தக் கேள்விக்கான பதிலை புறக்கணித்தே சென்றுள்ளார்.

ஆகவே பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இந்தத் தகவலை தர மறுக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் வடக்கில் இருந்து இராணுவம் முழுமையாக அகற்றப்பட வாய்ப்புகள் இல்லை. ஏனைய பகுதிகளைப் போல் வடக்கிலும் இராணுவத்தின் பாதுகாப்பை பலப்படுதியுள்ளோம்.

வடக்கிற்கு மட்டும் தனியாக இராணுவக் குவிப்போ அல்லது வடக்கை இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை.

கடந்த காலத்தில் வடக்கில் இருந்த இராணுவத்தினரில் அரைவாசிக்கும் அதிகமான படையினரை நாம் வேறு இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளோம்.

வடக்குக்கு தேவையான இராணுவம் மட்டுமே இன்று வடக்கில் உள்ளது. அவர்களையும் வெளியேற்ற முடியாது.

அதேபோல் வடக்கில் பாதுகாப்பு வலயங்களை பலப்படுத்துவதும் அகற்றுவதும் அரசாங்கத்தின் செயற்பாடாகும். நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்படும் போது பாதுகாப்பு வழங்குவதே எமது கடமையாகும்.

இப்போது அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு பகுதிகளை அகற்றி பொதுமக்களுக்கு தமது நிலங்களை வழங்குகின்றோம்.

எஞ்சியுள்ள நிலத்தையும் வழங்கக் கோரி அரசாங்கம் தெரிவிக்குமானால் அந்த சந்தர்ப் பத்தில் நிலைமைகளை பொறுத்து நாம் நடவடிக்கை எடுப்போம்” எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment