எமது நோக்கம் நிறைவேறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு ரெஜி கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
.நீண்ட காலமாக எதுவித அபிவிருத்திகளும் அற்ற நிலையில் இருக்கும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், எமது உறவுகள் எந்த நோக்கத்திற்காக இந்த மண்ணில் அவர்களின் உயிரை தியாகம் செய்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை அல்லது அதற்கான அடித்தளம் அமைக்கப்படும் வரை நாம் மத்திய அரசில் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் ஏற்கப்போதில்லை என.
எமது மட்டக்களப்பு மாவட்டமானது இலங்கையில் 19.4 வீதம் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளது. இலங்கையில் வறுமைக் கோட்டில் இருக்கும் மாவட்டங்களில் மிகவும் முக்கியமான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது.
இந்த மாவட்டத்தில் மிகவும் வறுமைக் கோட்டில் இருக்கின்ற பிரதேசமாக கிரான் பிரதேசம் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 1 தொடக்கம் 8 வரை வறுமைச் சுட்டியை இப்பிரதேசம் பெற்றுள்ளது. இதனால் தான் பல தொண்டு நிறுவனங்கள் இந்தப் பிரதேசத்திற்குச் சேவையாற்ற வந்திருக்கின்றன.
எனவே இப்பிரதேச மக்களின் வறுமையைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமை சகலருக்கும் இருக்கின்றது. கடந்த மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் எங்களது பகுதிகள் பலவாறு புறக்கணிக்கப்பட்டன.
ஏனெனில் கிழக்கின் உதயம் என்பது கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்து அதன் வறுமையை ஒழிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த செயற்பாட்டின் மூலம் 250 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தும் இதில் ஒரு சதம் கூட கிரான் பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கப்படவில்லை.
நாம் நாடாளுமன்றத்திலும் மாவட்ட பிரதேச அபிவிருத்திக் கூட்டத்திலும் குரல் கொடுத்தோம். உண்மையில் அந்த நிதி அதிகப்படியாக செலவழிக்கப்பட வேண்டிய பிரதேசம் இந்தக் கிரான் பிரதேசமே. கடந்த காலத்தில் நிலவிய கொடூரமான ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் கடந்த ஐனவரி 8ம் திகதி மைத்திரி ஆட்சிக்கு வாக்களித்திருந்தனர்.
அதில் பெரும் பங்காற்றியபெருமை வடக்கு கிழக்கு தமிழ் மக்களைச் சாரும். அவர்களது வாக்குகள் மகிந்த பக்கம் திரும்பி இருந்தால் இன்றும் சர்வாதிகார ஆட்சியே இங்கு இடம்பெற்றிருக்கும். இந்தப் பெருமை தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இருக்கின்றது.
பலவாறு கஷ்டப்பட்டு இந்த ஆட்சியை நாம் மாற்றினோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம் நூறு நாள் வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கிடைக்கவிருந்த அமைச்சுப் பதவியையும் மறுத்தோம்.
அந்த வகையில் மட்டக்ளப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சராக அமீர் அலி இருக்கின்றார்கள். அவரது வருகையில் எமது பங்களிப்பும் இருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போதைய செயற்பாடுகள் எங்களது மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது.
இதிலும் கூடுதலான நிதி எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அதனைப் பிரயோசனமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த சமூர்த்தி கடன் தொகையானது உங்களது வைப்புப் பணம்.
நீங்கள் வைப்பிலிட்ட நிதி இது இன்னும் அதிகமாக இருந்திருக்கும் ஆனால் கடந்த அரசாங்கம் அதனைச் மோசடி செய்து விட்டது. உங்களது வைப்புப் பணங்களை மோசடி செய்தமையினால் தான் முன்னாள் ஜனாதிபதியின் தம்பி தற்போது சிறையில் இருக்கின்றார்.
ஆனால் இன்று உங்களது பணம் நீங்கள் சேமித்த பணம் உங்களுக்கு கடனாக வழங்கப்படுகின்றது. இதனை நீங்கள் திரும்ப செலுத்தும் போது அது மீண்டும் உங்கள் கணக்கில் தான் வரவிடப்படும். எமது மக்களிடம் ஒரு பண்பு இருக்கின்றது. இலவசமாக கிடைப்பதில் கரிசனை காட்டுவதில்லை. பணம் பெறுகின்ற போது இருக்கின்ற ஆர்வம் பணத்தைக் கட்டும் போது இருப்பதில்லை.
இன்று வழங்கப்படுகின்ற நிதியினை ஒழுங்காகக் கட்டும் பட்சத்தில் அடுத்த தடவை கூடுதலான நிதி வழங்கப்படலாம். எனவே மக்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment