April 27, 2015

பவானி சிங் நியமனம் செல்லாது : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வைகோ கருத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கி உள்ள தீர்ப்பின் ஒவ்வொரு வரியும் ஊழல்வாதிகள் மீது விழுந்துள்ள சவுக்கடிகள் ஆகும்.

“எந்த ஒரு ஊழல் வழக்கையும் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது. ஊழல்வாதிகள் பெற்ற ஆதாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமுதாயத்தை ஊழல் பாதித்துள்ளதை அறிந்து செயல்படுவது அவசியம். நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்” என்று கூறியுள்ள நீதிபதிகள், பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது விஷத்தைப் பாய்ச்சும் செயல் என்று கடுமையாகச் சாடி உள்ளனர்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ‘நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு அளிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கோரி உள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பு, பொதுவாழ்வில் ஊழலில் ஈடுபடுவர் எவராக இருந்தாலும் நீதி தேவனை வளைக்க முடியாது; நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

‘தாயகம்’    வைகோ
சென்னை - 8    பொதுச்செயலாளர்
27.04.2015    மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment