March 10, 2015

மோடிவருகையினில் வவுனியாவினில் ஆர்ப்பாட்டம்!

நரேந்திர மோடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்ற நிலையினில்; போரால் பாதிப்புற்ற மக்களுக்காக இந்திய அரசின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் அநீதிகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கக்கோரியும் நாளை வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இடம்பெறவுள்ளது.

மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் இணைந்து இந்தக் கவனயீர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.    இந்தக் கவனயீர்ப்புப் பேரணி நாளை காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆரம்பித்து மாவட்ட செயலகத்தைச் சென்றடையுமென அறிவிக்ப்பட்டுள்ளது.

இந்தக் கவனயீர்ப்புப் பேரணி குறித்து மீளக்குடியமர்ந்தோர் நலன்பேணும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,   "போரால் பாதிப்புற்று - பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து - பல்வேறு அழுத்தங்களின் மூலம் மீளக்குடியேறிய மக்களுக்குத் தமது காணிகளில் சொந்தவீடு கட்டிக்கொண்டு வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக இந்திய அரசு 50ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்தது.      ஆரம்பத்தில் இறுதியாக நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்டு மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கே அந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்திருந்தது.     மேலும் இந்த நிலையில் முன்னைய கால மகிந்த அரசு தனது இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் அதனை நாடு முழுவதிலுமுள்ள பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க இந்திய அரசை இணங்கவைத்தது.    இதன் மூலம் இலங்கை அரசு வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்ட சேதத்தைக் குறைத்துக் காட்ட முயற்சித்தது. அவ்வாறு வழங்கப்பட்ட வீடுகளும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாமல் அரசியல் தலையீடுகளின் மூலம் தடையேற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த நிலைமை தொடர்வதற்கு நாம் தொடர்ந்து இடமளிக்கமுடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment