வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன பொதுமக்கள், பெற்றோர், பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டவர்கள் காணாமல் போன தங்களது பிள்ளைகளை, கணவன்மாரை, சகோதர, சகோதரிகளை, தந்தையை மீட்டுத்தாருங்கள் எனக்கோரி கண்ணீர்விட்டு கதறி அழுதவாறு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.போராட்டத்தின் முடிவில் அனைவரும் இணைந்து மாவட்ட செயலகத்திற்குச் சென்று தங்கள் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிய மகஜரை ஜனாதிபதிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக வடக்கு மாகாண ஆளுநரிடமும் முதலமைச்சரிடமும் சென்ற அவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை நேரில் கையளித்திருந்தனர்.
தமது கவளயீர்ப்பு தொடர்பான ஆர்ப்பாட்த்தில் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் குறித்த ஆர்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என அதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகளை ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் சேகரித்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்ட மகஜர் கையளிப்பின் போது அவற்றையும் இணைத்து மேலதிக ஆவணமாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment