March 7, 2015

ஆட்சி மாறியபின்பும் தமிழர்களுக்கான அடக்குமுறை குறையவில்லை: தடுத்து நிறுத்த சர்வதேசம் முன் வர வேண்டும்! பா.அரியநேத்திரன்!

ஆட்சி மாறிய போதும் தமிழ் மக்களுக்கான கெடுபிடிகள் கைதுகள் அச்சுறுத்தல்கள் இன்னும் குறையவில்லை இதை சர்வதேச சமூகம்
கவனத்தில் எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
புதிய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பதவியேற்ற பின் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு நிம்மதி ஏற்படும் என எதிர்பார்த்த போதும் அது எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வேலைவாய்புக்காகவும் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் சுதந்திரமாக கட்டுனாயக்கா விமானநிலையம் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய நாடுகளில் வேலைவாய்புக்காக சென்றவர்களும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் கடந்ந மகிந்த அரசுபோல் மைத்திரி அரசிலும் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டு 4 ஆம் மாடியிலும் ஏனைய சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் மத்தியநாட்டில் வேலை வாய்ப்புக்காக சென்று விடுமுறையில் நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுமாக ஏறக்குறைய (9) ஒன்பது இளைஞர்கள் கட்டுனாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் பிறான்ஷில் இருந்து இலங்கைக்கு வருகைதந்து தமது உறவினர்களை கிளிநொச்சியில் பார்வையிட்டு செல்லும்போது 41வயதான முருகேசு பகிரதி எனும் தாயும் அவரின் 8 வயதுடைய சிறுமியும் கட்டுனாயக்கா விமானநிலையத்தில் மீண்டும் பிரான்ஸ் செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கு இலங்கை அரசுகூறும் காரணம் அந்த தாயார் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கடல்படையில் இருந்த்தாகவும் அதற்காக விசாரிப்பதற்காகவும் கைது செய்ததாக கூறுகின்றனர்.
உண்மையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின் தமக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கையில் இவ்வாறு வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்களை திட்டமிட்டு அவசரகால சட்டத்தை வைத்துக்கொண்டு கைது செய்வதானது கண்டிக்கதக்க விடயமாகும். தொடர்ந்தும் அவசரகாலச் சட்டத்தை வைத்துக் கொண்டு நல்லாட்சியைப்பற்றியும், இணக்கஆட்சியைப் பற்றியும், தேசிய ஆட்சியைப் பற்றியும், கூட்டாச்சியைப் பற்றியும், பேசுவதும் முழுஉலகத்தையே ஏமாற்றும் செயலாகும்.
இதைவிட வவுனியாவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படியான சம்பவங்களை பார்க்கும் போது தொடர்ந்தும் அவசரகாலசட்டத்தை வைத்துக் கொள்ளவதற்காக இவ்வாறான சம்பவங்கள் சர்வதேசத்துக்கு காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல் ஹுசெய்ன் அவர்கள் கடந்த 28வது அமர்வில் உரையாற்றும் போது இலங்கை அரசு கடந்தகாலங்களில்விட்ட தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
ஆனால் இலங்கை அரசு அரசுத்தலைவர் மாறினாலும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் மாறவில்லை என்பதை இந்த சம்பவங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.
எனவே புலம்பெயர் எமது சமூகம் எப்படி இலங்கைக்கு வருகைதந்து முதலீடுகள் செய்யமுடியும்.
இவ்வாறுதான் தற்போதய அரசின் நிலைமை தொடர்கிறது இதை சர்வதேச நாட்டின் தலைவர்களும் இராஜதந்திரிகளும் புரிந்து கொண்டு இலங்கை அரசுக்கு இவ்வாறான நிலைமைகள் தமிழர்களுக்கு ஏற்படாவண்ணம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மேலும் கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment