March 6, 2015

சோரம் போகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ்மக்கள் தெரியவேண்டிய புதிய தலைமையும்.!

சம்பந்தனும் சுமந்திரனும் அவர்களுக்கு இணக்கமான கூட்டாளிகளும் நடத்தும் தனியார் நிறுவனமாகவே மாறிக் கொண்டிருக்கிறது,உட்கட்சிக்குள்ளேயே சனநாயகம் இல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. சம்பந்தன் ரூ கோ என்று
பெயர் மாற்றம் செய்யவேண்டியது மட்டும் தான் பாக்கி. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் கூட ஒட்டுமொத்தத் தமிழினத்தின் நம்பிக்கைக் கீற்றாக ஒளிர்ந்த கூட்டமைப்பு, மேற்குலகத்துக்குப் பின்போ இந்தியாவுக்குப் பின்போ ஓடி ஒளிந்து கொள்வதையே வழக்கமாக்கிக் கொண்டு வருவதைப் பார்க்கிற போது பரிதாபமாக இருக்கிறது.
புவிசார் அரசியலில் இந்தியாவின் அரசியல் ஏக்கங்கள் வேறு. மேற்குலகத்தின் அரசியல் நோக்கங்கள் வேறு. என்றாலும் பொது எதிரி சீனாவின் பெயரால் அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். சீனாவைத் தனிமைப் படுத்துவதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை அவர்களுக்கு! இந்துமாசமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையினூடாக வளர்ந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் துல்லியமாகச் செயற்பட்டு வருகின்றன. ஆகவே சீனாவின் பிடியில் ஒரு கம்பளிப்பூச்சி இருந்தால்கூட அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ளத் துடிக்கிறார்கள். அவர்களின் இந்த பலவீனத்தைத்தான் தனது பலமாக இன்று வரை காட்டிக் கொண்டிருக்கிறது சிங்களம்.
ஈழ மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் என்பதும், சிங்கள பௌத்தர்கள் வந்தேறிகள் என்பதும், பூர்வகுடிமக்களை வந்தேறிகள் வேட்டையாடும் கொடுமை தொடர்வதும் மேற்குலகத்துக்கும் இந்தியாவுக்கும் தெரியாததா? தெரிந்தே இந்த இன அழிப்பை வேடிக்கை பார்த்தார்கள். வேடிக்கை பார்த்ததுடன் நின்றார்களா? இனப்படுகொலை செய்யும் இலங்கைக்கு சீனா உதவுவதற்குள் தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்று அவசர அவசரமாக ஆயுதங்களையும் உதவிகளையும் ‘மனிதநேயம்’ பொங்கிவழிய அள்ளிக் கொடுத்தார்கள்.
சிங்கள இலங்கையைப் போல, அந்நியர்களின் இடுப்பில் அமர்ந்துகொண்டு சவாரி செய்ய கூட்டமைப்பும் விரும்புகிறது. இதைச் சாதிக்க, பெரிய ராஜதந்திரமெல்லாம் தேவையில்லை. சொந்த மக்களுக்குத் துரோகம் செய்தால் போதும், அந்த அந்நிய சக்திகளுக்கு அனுசரணையாக இருந்தால் போதும். ஆனால், அடுத்தவர் இடுப்பிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால், என்றாவது ஒருநாள், இடுப்புக்குக் கீழிருக்கிற உடுப்புகூட உருவப்பட்டுவிடும் என்பதை, சம்பந்தன் கம்பெனி மறந்துவிடக் கூடாது.
ஈழத் தாயகத்தின் அரசியல் அபிலாஷைகள் பற்றிய அறிவோ, ராணுவ முற்றுகைக்குள் முடங்கிக் கிடக்கும் எம் இனத்தின் வலிகள் குறித்த தெளிவோ இல்லாத இந்தியாவும் மேற்குலகமும் எம்மைக் கட்டியணைத்துக் காப்பாற்றும் என்று சம்பந்தன் கம்பெனி நம்புவது எந்த அடிப்படையில் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நடந்த இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளிகளான அந்த அந்நிய சக்திகளின் செல்ல நாய்க்குட்டியாக மாறிவிட்டிருக்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம்மைக் காப்பாற்றும் சக்தியை, எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தகுதியை இழந்துவிட்டது.
அடுத்தவர் தயவிலேயே இயங்குகிற ஓர் அமைப்பு, அண்டை வீட்டுக்காரனின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கிற ஓர் அமைப்பு, எமது சுயமரியாதையையும் சுய உரிமையையும் எப்படி நிலைநாட்ட முடியும்?
இன்றைக்கு எமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற மாபெரும் சக்தியாக மாறியிருப்பது, எழுபதாயிரம் வீரமறவர்களின் உயிர்தியாகமும் முள்ளிவாய்க்கால் என்கிற புனித மண்ணில் நின்று மூச்சை நிறுத்திக் கொண்ட எம் ஒன்றரை லட்சம் மக்களின் உயிர்த் தியாகமும் மட்டும்தான். எம் தாயகத்தின் எதிர்காலம் என்ன என்பதைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தங்கள் உதிரத்தால் எழுதி வைத்துவிட்டு உயிர் நீத்திருக்கிறார்கள் அவர்கள். தங்கள் உயிர் வழி அவர்கள் எழுதி வைத்திருக்கும் உயில் வழியில்தான் இனி இந்த இனம் நடந்தாக வேண்டுமே தவிர, மேற்குலகத்தின் இடுப்பிலோ இந்தியாவின் மடியிலோ சொகுசாக அமர்ந்திருக்கும் துரோகிகளின் வழியில் அல்ல!
தங்களது சொந்த நலன்களுக்காக, புவிசார் அரசியல் நலன்களுக்காக, இனப்படுகொலை நடக்கவும் துணைசெய்துவிட்டு, இனப்படுகொலையை மறைக்கவும் உடந்தையாக இருக்கின்றன மேற்குலகமும் இந்தியாவும்! தத்தமது தாய்நாட்டின் நலன்கருதி, அப்படியெல்லாம் முடிவெடுக்கிறார்கள் அவர்கள். இதற்காக அவர்களை நாம் குற்றஞ்சாட்டவில்லை. இதற்காக அவர்களை நாம் வெறுக்கவில்லை. எம் ஒன்றரை லட்சம் உறவுகளின் உயிர்த் தியாகத்தைக் காட்டி இலங்கையை ‘பிளாக் மெயில்’ செய்தார்களே, அந்த அராஜகத்தைத்தான் வெறுக்கிறோம்.
சீனத்தின் பிடியிலிருந்து இலங்கையை எப்படியாவது விடுவிக்கவேண்டும் என்பதா முள்ளிவாய்க்கால் வரை உயிர்நீத்த எம் ஒன்றரை லட்சம் உறவுகளின் லட்சியம்? இல்லை. பௌத்த சிங்களப் பேரினப் பூதத்தின் பிடியிலிருந்து தங்கள் தாய்மண்ணை மீட்க வேண்டும் என்பதுதான் அவர்களது கனவு. தங்களது ஆதிக்கக் கனவுக்காக மட்டுமே எம் இனத்தின் இழப்பைப் பயன்படுத்தத் துடிக்கும் அந்நிய சக்திகளுக்கு, எம் தாயகக் கனவு குறித்து விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? அவர்களிடம் எம் இனத்தை அடமானம் வைக்க, சம்பந்தன் கம்பெனிக்கு என்ன உரிமை இருக்கிறது?
நடந்தது இனப்படுகொலை தான் – என்பது தெரிந்தே தெரியாததைப் போல் நயவஞ்சக நாடகமாடும் சுமந்திரனை கங்காருபோல மடியிலேயே தூக்கிச் சுமக்கும் சம்பந்தனையும், அந்த சம்பந்தனை மடியில் தூக்கிச் சுமக்கும் மேற்குலகத்தையும் இந்தியாவையும் தூக்கியெறியாமல் எந்த லட்சியத்தையும் நம்மால் எட்ட இயலாது. இது நாம் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டிய காலகட்டம். நமக்கான தலைமை எது என்பதை எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் நாம் தீர்மானித்தாக வேண்டும்.
தந்தை செல்வா முதல் தலைவர் பிரபாகரன் வரை, நமக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராயிருந்த தலைவர்களை மட்டுமே வழிகாட்டிகளாக ஏற்றவர்கள் நாம். ஆய்வாளர் நிலாந்தன் ஒரு மேடைப்பேச்சில் கூறியது போல எம்மக்கள் சாதி, சமயம், பிரதேசம், ஏழை, பணக்காரன் பார்த்துத் தலைவர்களைத் தெரிவுசெய்வதில்லை. றிஸ்க் எடுக்கும் தலமைக்குப் பின்னால் எம் மக்கள் என்றும் நிற்பார்கள். ஆகவே சம்பந்தன் – சுமந்திரன் போன்ற அற்ப அரசியல்வாதிகளை நம்பி ஏமாறும் நிலையில் நாம் தொடர்ந்தும் இருக்கப்போகின்றோமா? அல்லது அழிக்கப்பட்ட ஓர் இனத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய நிலையில், அழித்தவர்களின் ஊதுகுழலாக ஒலிக்கும் அவர்களைத் தூக்கியெறிந்துவிட்டு, தகுதியான தலைமையைத் தெரிவு செய்யும் வேலையை இந்த நொடியிலேயே தொடங்கப்போகின்றோமா? சிந்தப்போம் செயற்படுவோம்.
ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நீதி கேட்கத் தவறினோமென்றால், உலகில் ஒரு புழு பூச்சி கூட இந்த இனத்தை மதிக்காது. இதற்காக, எந்த அந்நிய சக்தியிடமும் மண்டியிட்டு பிச்சை கேட்க வேண்டிய அவசியமில்லை.
இழந்த உயிர்களையும் உடமைகளையும் நாம் கேட்கவில்லை. பறிக்கப்பட்ட உரிமைகளையும் உடமைகளையுமே (பூர்வீக நிலங்கள்) கேட்கிறோம். இன அழிப்புக்கு நீதி கேட்கிறோம். இதையெல்லாம் கேட்கத் துணியாத காக்கை வன்னியன்களை முதலில் தூக்கியெறிவோம். சங்கிலி மன்னன், பண்டாரவன்னியன் முதல் பிரபாகரன் வரை எத்தனையோ காக்கை வன்னியர்களைச் சந்தித்த இனம் இது. தந்தை செல்வா முதல் தலைவர் பிரபா வரை வகுத்துக் கொடுத்த பாதையில் நம்மை வழிநடத்தக் கூடிய தடம்மாறாத தலமையைத் தேர்ந்தெடுப்போம். தகுதியான தலைமையை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே, நமக்கான நீதியை நாமே பெறமுடியும், இந்த இனத்தைக் கொன்ற இனத்தின் அரசியல் சதிகளை வேரறுக்க முடியும், சொந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கும் அரசியல் சகதிகளிலிருந்து விடுபட முடியும்.
தமிழினத்தின் குரலாக தமிழகத்தில் இருந்து ஒலித்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் சொன்னதைப் போல, தாமதிக்கப்படும் நீதி அநீதிக்குச் சமம். அந்த அநீதி எம் இனத்துக்கு இழைக்கப்படுவதை இனிமேலும் வேடிக்கை பார்க்க இயலாது. களையெடுத்தால் மட்டுமே, நாம் தலையெடுக்க முடியும். நம் உறவுகளின் உதிரத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் என்கிற புனித மண்ணை மனத்தில் நிறுத்தி மனசாட்சியுடன் ஒரு முடிவுக்கு வருவோம். நீதிக்காக தன் இன்னுயிரை நீத்த புலத்துத் தமிழன் தியாகி முருகதாசனின் உயிர்க்கொடைக்குப் பரிகாரமாக உலகின் எந்த சக்தியாலும் விலை பேச முடியாத உன்னத சக்தி என்கிற வடிவினைப் பெறுவோம்.
தமிழ்ப்பற்றுடன்
ஸ்ரீவன் புஸ்பராஜா க
நோர்வே

No comments:

Post a Comment