February 26, 2015

ஈபிடிபி கொலைகாரக் கட்சியல்லவாம்! விளக்கமளிக்கின்றார் டக்ளஸ்!

ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் என்பது எமது கட்சியின் கொள்கைகள் அல்ல. அதற்காக எமது கட்சியினர் ஒருவரும் குற்றமற்றவர்கள் அல்ல எனவும் நான் வாதிடவில்லை. தனிப்பட்ட சில
குற்றச்செயல்களுடன் அவர்கள் தொடர்புபட்டிருக்கலாமெனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

உதாரணமாக கமலேந்திரன் செய்தது தனிப்பட்ட குற்றச்செயல். அதற்காக அவரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலுவான பொது கூட்டணி ஒன்று இணையுமாக இருந்தால் தமது முடிவு தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் சம்மந்தமாக முற்போக்கு சக்திகள், பொது அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தற்போது ஆட்சி அமைத்துள்ள புதிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொன்ன தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்திற்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது.
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாக்களிக்க சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடையத்தில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

எமது கட்சியினைப் பொறுத்தவரையில் நாம் நீண்ட கால அரசியல் போராளிகள். எனவேதான் மாற்றத்தினை விரும்பும் மக்களுக்கு மாற்றுத் தலமையினைக் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் தமிழ் மக்களின் விடிவுக்காக போராட முன்வந்துள்ளோம்.

எங்களுடன் கைகோர்ப்பதற்கு பல முற்போக்கு கட்சிகள், பொது அமைப்புக்கள் தயாராக உள்ளன. அவர்களுடைய விபரங்களை தற்போது வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது.
மேலும் கடந்த 1970 ஆண்டில் இருந்து இன்றுவரை இங்கு நடைபெற்ற அரசியல் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் முடுமையான விசாரணைகளை நடத்த வேண்டும். அதற்கு தேவையான அழுத்தங்களை வழங்குவதற்கும் நாம் தயாராக உள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment