February 9, 2015

சிறிசேன இந்தியா வருகைக்கு முன் தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க இலங்கை முடிவு!

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இந்தியப் பயணத்திற்கு முன்பாக தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
படகு உரிமையாளர்கள் இலங்கை கோர்ட்டில் நேரில் ஆஜராகி படகுகளை பெற்றுக்கொள்ளும் முறையை அமல்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியிலிருந்து கடந்த ஆண்டு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விடுதலை செய்த இலங்கை அரசு, மீனவர்களின் ரூ.40 கோடி மதிப்புள்ள 87 மீன்பிடி படகுகளை விடுவிக்கவில்லை. இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரி தமிழகத்தில் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து படகுகள் குறித்து நல்ல செய்தி வரும் என்று மீனவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வரும் 15ம் தேதி இந்தியா வருகை தர உள்ளார். இவரது வருகைக்கு முன்பாக தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நடந்து முடிந்த தேர்தலில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபால சிறிசேன, இந்தியாவுடனான நட்புறவைப் பேணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இதன் ஒரு பகுதியாக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் இரு நாட்டு மீனவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்ப்பது, இலங்கை கடற்படையால் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிப்பது உள்ளிட்ட பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியா வருகையின்போது பிரதமர் மோடியிடம் இருநாட்டு மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்னைகளை தீர்ப்பது குறித்தும் பேசுவார் என்று இலங்கை தரப்பில் கூறப்படுகிறது. 

அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியா வருவதற்கு முன்பாக தமிழக மீனவர்களின் 87 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 87 படகுகளும் தற்போது தலைமன்னார், காங்கேசன்துறை கடற்படை முகாம்களில் கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் பல படகுகள் கடல் காற்றினால் சேதமடைந்துள்ளன.இந்த படகுகள் அனைத்தையும் விடுவிக்கவும், படகு உரிமையாளர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜராகி, விடுவிக்கப்படும் தங்களது படகுகளை எடுத்து செல்லும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கையில் இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் இந்தியாவில் கைப்பற்றப்பட்ட இலங்கை மீனவர்களின் 18 படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

-dinakaran-

No comments:

Post a Comment