January 12, 2015

சம்பந்தன் - மைத்திரியின் ''எழுதா மறையும்'' ஈழத்தமிழர்களின் இதயங்களில் உள்ள 'பேசாப்பொருளும்' - மாணிக்கவாசர்!!

பிளவுபடாத இலங்கைக்குள் நேர்மையானதும், நியாயமானதும், நடைமுறைச் சாத்தியமானதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஒரு அரசியல் தீர்வினை
ஆட்சிமாற்றத்துடன் காணப்போவதாக நீட்டிமுழக்கிய சம்பந்தன் ஐயா மைத்திரிபாலா சிறிசேனாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை வேண்டிக் கொண்டார். தமிழீழ தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு (TNA) ஈழத்தமிழர்களின் 'அரசியல் விடுதலைக்கான' சரியான பாதையையே தேர்ந்தெடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அதன் தலைமை காட்டிய சி(அ)ன்னத்திற்கு புள்ளடிபோட்டு வெற்றியீட்ட வைத்துள்ளார்கள் எமது மக்கள்.


ஆரோக்கியமான விமர்சனங்கள் , பிராந்திய,உலக வல்லரசுகளின் உள்நோக்கம் குறித்த சந்தேகங்கள் , சர்வதேச விசாரணையை மந்தமாக்கக்கூடிய எதிர்விளைவுகள் எல்லாவற்றையும் தாண்டி முழு இலங்கையின் நன்மைக்காகவும் ஒரு வரலாற்று மாற்றத்தை நிகழ்த்த ஜனநாயக ரீதியாக கைகொடுத்துள்ளார்கள் ஈழத்தமிழர்கள். அன்று பிரித்தானியர்களிடம் இருந்த ஜனநாயகம் தான் காந்தியால் இந்திய சுதந்திரத்தை மீட்கமுடிந்தது, அதே ஜனநாயகம் இந்தியாவிடம் கூட இல்லாததால் தியாகி திலீபனை நாம் இழக்கவேண்டி வந்தது.21ம் நூற்றாண்டில் இன்னமும்கூட மகாவம்ச மன அமைப்பிலிருந்து விடுபடாத எமது எதிரிகளிடம் எப்படி நவீன ஜனநாயகத்தை அவ்வளவு விரைவாக எதிர்பார்ப்பது?
கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள், முற்றாக நடைமுறைப்படுத்தப்படாத பகுதியான அர்த்தமற்ற அரசியல் சீர்திருத்தங்கள் என வரலாற்றின் வழிநெடுக தமது விரலை சுட்டுக்கொண்ட கசப்பான அனுபவங்களின் மத்தியில் சம்பந்தர் ஐயா மீண்டும் 'தீக்குள் விரலைவைத்தால் நந்தலால ' என்று வெறும் கையால் முழம் போட்டால் நம்புவதற்கு சிரமப்படுகிறார்கள் நமது மக்கள்.

பூட்டிய அறைகளில் பேசப்பட்ட சம்பந்தன் - மைத்திரியின் 'எழுதா மறை' என்ன? தேர்தலில் தமிழருடன் செய்யப்படும் உடன்பாடுகளை சிங்கள- பௌத்த இனவாதிகள் எதிர்பிரச்சாரத்துக்கு உபயோகித்து குறுக்குவழியில் லாபம் பெறும் இராஜதந்திரத்தை புரிந்துகொண்டால் கூட , இந்த இரகசியத்தை அடுத்த நாடாளுமன்ற தேர்தல்வரை அடைகாக்கப்போகிறதா கூட்டமைப்பின் தலைமை?
தமது தீர்வை பின் கதவால் அல்ல பாராளுமன்றத்தின் முன்கதவாலேயே பெறப்போவதாக சூளுரைக்கும் தலைவர்கள் ஏன் தமது தீர்வுதிட்டத்தை பாராளுமன்ற தேர்தலின் முன் தமிழ்மக்கள் முன் வைத்து அமோக அங்கீகாரம் பெறக் கூடாது?

மாறும் மைத்திரி ஆட்சியும் சாக்குபோக்கு சொல்லி காலத்தை இழுத்தடித்து தமது ஆட்சிகாலத்தில் ஏற்றுக் கொள்ளாக்கூடிய 'அரசியல் தீர்வை' வழங்காது தமிழ் தேசிய அரசியலை சலிப்புறச்செய்து சூனிய அரசியல் ஆக்குவதை தடுக்க என்ன மாற்று வழியை வைத்திருக்கிறது தமிழ்த் தலைமை?

குறைந்த பட்சம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆவது முஸ்லீம் மக்களுடன் இணைந்து சுயாட்சிக்கான பிரகடனத்துடன் மூன்றாவது அணியொன்றை கட்டி எழுப்பும் திராணி கூட்டமைப்பிற்கு உண்டா?

தமிழர் தாயகத்தின் கோட்டைக்குள் சிங்கள கட்சிகள் வந்து பிரச்சாரம் செய்வது போல், விக்கிரம பாகு கருணாரட்ன, அசாத் அலி போன்ற அதிகாரப்பகிர்வுக்கு ஆதரவானவர்களை இணைத்து சிங்கள பகுதிகளில் புதிய அரசியல் அமைப்பொன்றிற்கான அறிவூட்டும் செயற்பாடுகளை சம்பந்தன் , சுமந்திரன், மாவை முன்னெடுப்பதற்கான தலைமைத் திறன் அவர்களிடம் உண்டா?

அப்படியாயின் அதுவே மாறும் இன்றைய அரசாங்கத்திற்கு விடுக்கும் கால எல்லைக்கான எச்சரிக்கையாகவும், அடுத்து வரும் தேர்தல்களில் தமிழ் பேசும் மக்களின் வாக்கு சுயாட்சியுடன் கூடிய தமிழர்களின் அரசியல் உரிமைக்கே அன்றி புளித்துப்போன பௌத்த - சிங்கள இனவாதிகளுக்கு அல்ல என்பதும் உள்ளூரில் இருந்து சர்வதேசம் வரை தெளிவாக பறைசாற்றப்படும்.

ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை ஒழிக்க கைகொடுக்கும் தமிழ் கூட்டமைப்புக்கு நன்றி கூறும் JHU, JVP போன்ற பேரினவாத கட்சிகளுக்கு, தமிழர்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய ஏகாதிபத்திய ஒற்றையாட்சி அமைப்பை மாற்றி இலங்கையின் நீண்ட தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ் கூட்டமைப்புக்கு கைகொடுக்கும் கடப்பாடு உண்டு. இதில் தமிழர்கள் இளிச்சவாயர்களாக இருந்து கோட்டை விடக்கூடாது. முக்கியமாக உடைந்த பண்டார நாயக்கர்களின் சுதந்திரக் கட்சிக்கும் , 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான ' ரணிலின் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வரலாற்று கடமையே உண்டு. ஏனெனில் இந்தப்பிரச்சினைகளின் மூலகாரணமாக இருந்ததே இவ்விரு கட்சிகளின் கடந்த காலம் தான்.

சரி, ராஜபக்சக்களின் (சு)தந்திரக்கட்சியை என்ன செய்வது ? தமிழரையும் கொன்று தமிழில் பேசி தமிழையும் கொல்லும் மகிந்த மீண்டும் எதிர்கட்சித் தலைவராகி அடுத்த வாய்ப்புக்கு காத்திருப்பதை அனுமதிப்பதா? பௌத்த- சிங்கள இன வாதத்தை உசுப்பி ஆட்சிக்கட்டிலேறி நிறுவனமயப்படுத்தப்பட்ட 'சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின்' துணையுடன் உச்சக்கட்ட இன அழிப்பை செய்து முடித்த மனித குலத்திற்கெதிரான போர்க்குற்றவாளியை எப்படி தண்டிப்பது?
தேர்தல் தோல்விகளினாலா? அல்லது உள்ளூர் விசாரணைகளினாலா? இல்லை, சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதன் மூலமே திரைமறைவில் எந்த நீதியுமின்றி கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஒரவஞ்சனை அற்ற நீதியினை வழங்க முடியும். அந்த சர்வதேச நீதியே ஈழத்தமிழர்களின் இருப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கவசமாக இருக்கும். புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் தலையாய பணி இது.

வடகிழக்கு பாரம்பரிய தாயகத்தில் ஈழத்தமிழர்களின் இருப்பு என்ற அத்திவாரத்தின் மேலேயே 'அரசியல் விடுதலை' எனும் கட்டடத்தை கட்ட முடியும். ஆகவே அந்த இருப்பின் அத்திவாரத்திற்கு பலம் சேர்க்கும் சர்வதேச நகர்வுகளையும் , தலை நிமிர்வுக்கான சுயசார்பு பொருளாதார பலத்தையும் வழங்கும் வலிமை புலம் பெயர் தமிழர்களிடமே உடனடியாக உண்டு. அலைந்துழல்வு வால்வின் சுமைகளை தாண்டி வேகமாக தம்மை நிலைநிறுத்திகொள்ளும் புலம்பெயர் சமூகம் இதன்மூலம் நாளை அந்நிய தேசங்களின் கலாச்சாரங்களுடன் கலந்தழிந்து தம் சந்ததியை தொலைப்பதை தவிர்த்து தம்மை பெருமை மிக்க ஈழத்தமிழினதுடன் நெருக்கமாக அடையாளப்படுத்திக் கொண்டு தாயகத்துடனான உறவுகளை தொடருவதுடன் புலத்திலும் தமது தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியும்.
முடிவாக ஈழத்தமிழர்களின் இதயங்களில் 'பேசாப்பொருளாக இருக்கும்' விடுதலை உணர்வு அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என பல பரிணாமங்களை கொண்ட முழுத்தேசத்தின் ஆன்ம விடுதலை நோக்கியதென்பதை ஆழமாக புரிந்துகொள்வதன் மூலமே மாறாத அந்த புனித இலட்சியத்தை அடைய ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட போராட்ட வடிவங்களிலும் செயல்புரிந்து சாதனைகளை நிகழ்த்த முடியும். நாங்கள் நிகழ்த்துவோமா?

-மாணிக்கவாசர்-

No comments:

Post a Comment