April 10, 2014

யாழ். பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடும் ஈபிடிபி !!

யாழ்.நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்களிற்கு சொந்தமான காணிகள் கட்டடங்கள் அபகரிக்கப்படுவதற்கு ஈபிடிபி துணை நிற்பதாக
தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைவரும், யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடனேயே அரச காணிகளும் புலம்பெயர் நாடுகளிலுள்ள உறவுகளது காணிகளும் சுவீகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிசாந்தன் மேலும் தெரிவிக்கையில் யாழ்.நகரிலுள்ள நவீன சந்தை மலசலகூடங்கள் மீது அமைக்கப்படும் கடைகள் பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலென்டினிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அதனை மாநகரசபை உறுப்பினர்களான சுபியான் மற்றும் சரத் உள்ளிட்ட மூவருக்கு வழங்கியுள்ளார். இதனை தடை செய்வதாக யாழ்.மாநகரசபை தடைவிதித்து அறிவிப்புக்களை ஒட்டியுள்ள போதும் அதையும் மீறி நகரில் சட்டவிரோதமாக இப்புதிய கடைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அமைச்சரின் அனுசரணையுடனான இத்தகைய நடவடிக்கைகளினை கண்டுகொள்ளாத  யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா கொழும்பில் ஒழித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். நவீன சந்தைக்கடைத் தொகுதியில் புதிய கடைகள் இரவோடு இரவாக அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து இதனை நிறுத்துமாறு அறிவுறுத்தி மாநகர ஆணையாளரினால் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்ந்தும் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனை யாரும் தடுக்க முடியாதென்று கடைகளை அமைக்கின்றவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மாநகர சபையின் இத்தகைய செயற்பாட்டினால் நகர வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாநகர நிர்வாகத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வர்த்தகர்களது ஆதரவுடன் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் நிசாந்தன் மேலும் தெரிவித்தார்.
நிசாந்தனின் குற்றச்சாட்டு தொடர்பில் ஈபீடீபீ பதில் அளிக்குமாயின் அந்தப் பதில் முழுமையாக பிரசுரிக்கப்டும்.

No comments:

Post a Comment