April 10, 2014

கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் படைக்கு ஆட்சேர்ப்பு கல்லூரிப் பணிப்பாளரும் உடந்தை கல்வி கற்க மாணவர்கள் அச்சம்!

யாழ். கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியில் படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடு இடம்பெற்று வருவதால் இங்கு கல்வி கற்கின்ற பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இங்கு படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கல்லூரிப் பணிப்பாளர் கலாநிதி ந.யோகராஜனின் அனுசரணையுடனேயே படையினர் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
கடந்த சனிக்கிழமை சீருடையணிந்தவாறு இங்கு சென்ற படை அதிகாரிகள் மாணவர்களுடன் கலந்துரையாடலை நடத்தினர். இக் கலந்துரையாடலுக்கு மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று யோகராஜன் அறிவித்திருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய படை அதிகாரி இது படையினருக்கான ஆட்சேர்ப்பு அல்ல என்று கூறியதுடன் விரிவுரையாளர்கள், சாரதிகள், தொழில்நுட்பவியலாளர்கள் உட்பட இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தாங்கள் தாங்கள் எந்தத் துறைகளில் கல்வி கற்கின்றார்களோ அந்த துறையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இணைந்துகொள்பவர்களுக்கு படைப் பயிற்சி இல்லையெனவும் மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வேதனம், உடைகள், தங்குமிடம், உணவு இலவசம், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே வேலை என்று பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டிருக்கின்றன.
கற்கை நெறியைப் பூர்த்தி செய்யாத மாணவர்களும் இதில் இணைந்துகொள்ள முடியும் என்று படை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதனால் மாணவர்கள் குழப்பமும் அச்சமும் அடைந்தனர்.
யாழ்.மாவட்டம் மற்றும் வன்னி ஆகிய இடங்களில் படைக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது மேற்கூறப்பட்டவாறு படைக்கு அல்ல, வேலைக்கு என்று கூறியே ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றது. இதேபோன்றே கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறுகின்றது. இதனால் இங்கு கல்வி கற்பதற்கு மாணவ, மாணவியர் அச்சமடைந்துள்ளனர்.
இந்தக் கல்லூரியின் பணிப்பாளர் யோகராஜன் சிங்கள அடிவருடியாவார். யுத்தம் தீவிரமடைந்துகொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அனைத்து சிங்கள அதிகாரிகள், மற்றும் அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்து மாப்பிள்ளைகள் ஆக்குவதில் யோகராஜன் முன்னின்று உழைத்தவர்.
முன்னாள் நீதியமைச்சின் செயலாளர் சுகத ஹம்லத் யாழ்ப்பாணம் வந்தபோது அவரை கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு அழைத்த யோகராஜன் அவருக்கு தலைப்பாகை அணிவித்து மாப்பிள்ளைக் கோலமாக அலங்கரித்ததன் மூலம் சிங்களவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் தலைப்பாகை கட்டும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் இந்த யோகராஜன் என்று மாணவர்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த யோகராஜனின் அனுசரணையுடனேயே இன்று தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் படையில் சேர்க்கும் முயற்சிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment