புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் தயாராக இருப்பதாக 2009 மே 18இற்குப்
பின்னர் உலக அரங்கில் பறைதட்டி வந்த சிங்களம், கடந்த வாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் மறு முக அமைப்புக்கள் எனக்குற்றம் சுமத்தப்படும் பதினைந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், நானூற்று இருபத்துநான்கு புலம்பெயர் தமிழர்களையும் தடை செய்திருப்பதன் மூலம் சமரசப் பேச்சுக்களுக்கும், நல்லிணக்கத்திற்குமான கதவுகளை இறுக மூடிவிட்டது.
நான்காம் கட்ட ஈழப்போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தும், காணாமல் போகச்செய்தும் சிங்களம் இழைத்த இனவழிப்பை நன்கு தெரிந்து கொண்ட பொழுதும், சமரசப் பேச்சுக்கள் பற்றியும், நல்லிணக்கம் பற்றியும் பேசி வந்த மேற்குலகின் முகத்தில் ஓங்கி அறையும் விதத்திலேயே இத் தடையைச் சிங்களம் கொண்டு வந்துள்ளது. தடை இருக்கும் வரை பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் எப்பொழுதுமே உறுதியாக நின்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ‘கற்பித்த’ பாடங்களிலிருந்து புடம்பெற்றவர்கள் என்ற வகையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும், அவற்றின் செயற்பாட்டாளர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளோர் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் வரை, சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை, நல்லிணக்கம் என்ற பேச்சுக்களுக்கே இடமில்லை என்பதை மேற்குலகிற்கு உணர்த்துவதற்கான வாய்ப்பையே சிங்களத்தின் தடைப் பட்டியல் ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சிங்களம் வெளியிட்டிருக்கும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களை நான்கு வகையாக நாம் பகுக்கலாம். இதில் முதலாவது பிரிவினரில் நீண்ட காலமாகப் புலம்பெயர் தேசங்களில் தாயகப் பணிகளில் ஈடுபட்டு வரும் மனிதநேயச் செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமைவாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் போர் ஓய்வுக் காலப் பகுதியில் வன்னி சென்று வந்தவர்கள். இவர்களின் தனிப்பட்ட விபரங்களை எவ்விதம் சிங்களம் பெற்றுக் கொண்டது என ஆராய்வது எமது நோக்கமல்ல.
வன்னி சென்று திரும்பிய ஒவ்வொரு தமிழர்களும் புளியங்குளத்திலும், அதன் பின்னர் கிளிநொச்சியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பதிவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறையன்றைக் கைப்பற்றும் பொழுது புலம்பெயர் தமிழர்களின் விபரங்களை உள்ளடக்கிய கோவைகளை சிங்களப் படைகள் கைப்பற்றியிருக்கலாம் என்பதையிட்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிப் படகுகள் உட்பட பல்வேறு போர்க் கலங்களையும், ஆவணங்களையும் கைப்பற்றிய சிங்களப் படைகள், புலம்பெயர் தமிழர்களின் விபரக் கோவைகளைக் கைப்பற்றியிருப்பது என்பது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் அல்லவே.
அடுத்தது சிங்களத்தின் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் இரண்டாவது பிரிவினர். இவர்கள் அனைவரும் இறுதிப் போர் உக்கிரமடைந்த காலப் பகுதிகளில் அல்லது இறுதிப் போருக்குப் பின்னரான காலப்பகுதிகளில் தமிழ்த் தேசிய ஞானோதயம் பெற்றுப் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் தாயகப் பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள். இவர்களில் கணிசமானோர் மேற்குலக ஊடகங்களில் அடிக்கடி தோன்றுபவர்கள். எனவே இவர்களும் தடைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதையிட்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.
சிங்களத்தின் தடைப்பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது பிரிவினரில் அனைவரும் மே 18இற்குப் பின்னரான சூழமைவில் தாயகப் பணிகளில் இருந்து தம்மை முழுமையாக விலக்கிக் கொண்டவர்கள். இவர்களில் உதாரணமாக நோர்வேயில் வசிக்கும் நெடியவன் என்பவரைக் குறிப்பிடலாம். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவின் உதவியாளர்கள் குழுவில் அங்கம் வகித்த இவர், பின்னர் நோர்வேயிற்குப் புலம்பெயர்ந்து மே 18இற்குப் பின்னர் தாயகப் பணிகளில் இருந்து முற்றுமுழுதாக ஒதுங்கிக் கொண்டவர். சிங்கள ஊடகங்கள் கூறுவது போன்று ‘நெடியவன் குழு’ என்ற பெயரில் புலம்பெயர் தேசங்களில் குழுவெதுவும் இயங்குவதில்லை. இது சிங்களத்தின் கற்பனையில் உதித்த ஒரு கற்பனைக் குழுதான். தடைப்பட்டியிலில் உள்ள இந்த மூன்றாவது பிரிவில் இறந்து போன புலம்பெயர் தமிழர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது வேறு விடயம்.
இங்கு சர்ச்சைக்குரியவர்கள் சிங்களத்தின் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நான்காவது பிரிவினர்தான். இவர்கள் அனைவரும் ஒன்றில் ‘நாடுகடந்த அரசாங்கம்’ என அழைக்கப்படும் கே.பியால் உருவாகப்பட்ட விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லது அதே கே.பியைத் தலைவராகக் கொண்டு ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட கும்பலையும், அதன் மறு முக அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள். அதிலும் இக்கும்பல்களின் தலைவர்களாக விளங்கும் உருத்திரகுமாரன், விநாயகம் ஆகியோரின் பெயர்கள் தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழீழத் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தையும், அசைவியக்கத்தையும் வலுவிழக்கச் செய்யும் நோக்கத்துடன் இவ்விரு குழுக்களையும் கே.பி உருவாக்கினார் என்பது இன்று ஒவ்வொரு தமிழரும் அறிந்த விடயம். இப்படிப்பட்ட இரு கும்பல்களைச் சேர்ந்தவர்களைத் தடைப்பட்டியலில் ஏன் சிங்களம் உள்ளடக்கியது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இக்கும்பலின் முக்கிய பிரமுகர்கள் பலரது விபரங்கள் ஏன் இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. அதிலும் குறிப்பாக இப்பட்டியலில் உள்ளடக்கப்படாத இக்கும்பல்களின் பிரமுகர்கள் பலர் பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் தோன்றுபவர்கள். தமது நிழற்படங்கள் இணையத்தளங்களில் வரவேண்டும் என்பதில் இந்தப் ‘பிரமுகர்கள்’ மிகுந்த கரிசனை கொண்டவர்கள்.
இதில் உதாரணமாக இரண்டு நபர்களை நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒருவரது பெயர் மனோ. பிரான்சில் வசிக்கும் இவர் 1997ஆம் ஆண்டின் முதற்கூறிலிருந்து 2003ஆம் ஆண்டின் முதற்கூறு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் பொறுப்பாளராக கே.பி பதவி வகித்த பொழுது அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக விளங்கியவர். இவரைக் கே.பியின் இரண்டு கைகளில் ஒன்று எனக் குறிப்பிடலாம். மற்றையவரின் பெயர் சர்வே. நோர்வேயில் வசிக்கும் இவர், இதே காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளராக விளங்கியவர். இவரை கே.பியின் வலதுகை என்று குறிப்பிடலாம். அக்காலப் பகுதியில் பெயரளவில் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக மனோ விளங்கினாலும் நடைமுறையில் அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக சர்வே அவர்களே விளங்கினார். இவர்கள் இருவரும் 2003ஆம் ஆண்டு தனித்தனியான வன்னிக்கு அழைக்கப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுப் பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
இவர்களில் சர்வே என்பவரை வன்னியில் தங்கியிருந்து சமாதான செயலகத்தில் பணிபுரியுமாறு கேட்கப்பட்ட பொழுது, தனது மனைவி நோர்வேயில் வசிப்பதாகவும், அவருக்கு வன்னிக்கு வரும் விருப்பம் இல்லை என்பதால் தன்னால் வன்னியில் தங்கியிருக்க முடியாது என்று சாக்குப் போக்குக் கூறி நோர்வேயிற்கு ஓடிச் சென்றவர். எனினும் இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக கே.பி நியமிக்கப்பட்டதை அடுத்து, கே.பியுடன் இணைந்து இவர் இயங்கினார்.
தற்பொழுது நோர்வேயில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வாளராகக் கடமையாற்றும் இவர், நாடுகடந்த அரசாங்கம் என்ற கும்பலை கே.பி உருவாக்கிய பொழுது முக்கிய பாத்திரத்தை வகித்ததோடு, இப்பொழுதும் கூட உருத்திரகுமாரனின் ஆலோசகராகக் கடமையாற்றுகின்றார். மலேசியாவில் கே.பியின் கைது நாடகம் அரங்கேற்றப்பட்ட பொழுது தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரிடம் கருத்துக் கூறிய இவர், உருத்திரகுமாரனும், தானுமே நாடுகடந்த அரசாங்கத்தை இயக்குபவர்கள் என்றும், நாடுகடந்த அரசாங்கம் ஒரு தொடருந்து வண்டி என்றால், அதனை இழுத்துச் செல்லும் இரண்டு இயந்திரங்களாகவே தானும், உருத்திரகுமாரனும் இயங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் உருத்திரகுமாரன் எனும் முன் இயந்திரம் நாடுகடந்த அரசாங்கம் என்ற தொடருந்து வண்டியை இழுத்துச் செல்லத் தவறினால், சர்வே என்ற பின் இயந்திரம் அதனைத் தடத்தின் வழியே நகர்த்தி இறுதி இலக்கிற்குக் கொண்டு செல்லும் என்றும் கூறியிருந்தார்.
அப்படிப்பட்ட இவரது பெயர் சிங்களத்தின் தடைப்பட்டியலில் இடம்பெறவில்லை. அப்படி அவரது பெயர் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் நோர்வேயில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனது வேலையை இவர் இழக்க நேரிட்டிருக்கும். இவரைப் போன்று நோர்வேயில் பலர் உள்ளார்கள். ஆனால் மனோ என்பவரின் நிலை அப்படி அல்ல. சர்வே அவர்களைப் போன்று பிரான்சில் உள்ள எந்தவொரு பொது நிறுவனங்களிலும் மனோ பணிபுரிவதில்லை. அவர் சுயதொழிலில் ஈடுபடுகின்றார். எனவே மனோ அவர்களைத் தடைப்பட்டியலில் உள்ளடக்குவதால் சிங்களத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி உள்ளடக்குவதால் சிங்களத்திற்குத்தான் நிறைய அனுகூலங்கள் உள்ளன.
2010ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த ஐலண்ட்’ நாளேட்டின் செய்தியாளரான சமீந்திர பேர்டினான்டோ என்பவருடன் உரையாடும் பொழுது பேச்சுவாக்கில் வெளிநாட்டில் தனது பிரதிநிதியாக மனோ இயங்குகின்றார் என்று கே.பி தெரிவித்திருந்தார். கே.பியின் அனுமதியின்றி இச் செய்தியை ‘த ஐலண்ட்’ நாளேடு வெளியிட்டதால் மனோவின் நிலை தர்மசங்கடத்திற்கு உள்ளாகியது. கே.பியின் முகவராக மனோ இயங்குவது அதன் மூலம் பட்டவர்த்தனமாகியது. இந்நிலையில் தடைப்பட்டியலில் மனோ அவர்களை இணைத்திருப்பதன் மூலம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ‘த ஐலண்ட்’ நாளேடு புரிந்த தவறை இப்பொழுது சிங்களம் சீர்செய்துள்ளது என்று கூறலாம். அதாவது மனோ மீது இப்பொழுது புலி முத்திரை குத்தப்பட்டதன் மூலம் அவரது சிங்களச் சாயம் மீது வெள்ளையடிக்கப்பட்டு, அவர் புலிப்புனிதராக மறுஅவதாரம் பெற்றுள்ளார்.
இப்பொழுது சிங்களத்தின் நோக்கம் புலனாகின்றது. மனோ மீது புலிமுத்திரை குத்துவதால் அவர் மீண்டும் புலித்தோல் அணிந்து புலம்பெயர் தேசங்களில் நடமாட முடியும். சுயதொழிலில் ஈடுபடுபவர் என்ற வகையில் இதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் சர்வேயின் நிலை அப்படியல்ல. அவர் மீது புலி முத்திரை குத்தப்படுவதால் தனது வேலையை அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். சர்வேயைப் போன்று கே.பியின் மற்றுமொரு முகவராக விளங்கும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜோய் மகேஸ்வரன் அவர்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான தூதுக் குழுவின் உதவியாளர்கள் குழுவில் அங்கம் வகித்த இவர், 2009ஆம் ஆண்டு மலேசியாவில் நோர்வே அரசாங்கத்துடன் கே.பி மேற்கொண்ட பேச்சுவார்த்தைககளில் உருத்திரகுமாரனுடன் இணைந்து கலந்து கொண்டவர். நாடுகடந்த அரசாங்கம் என்ற கும்பல் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் முக்கிய பாத்திரத்தை வகித்த இவர், பன்னாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணிபுரிகின்றார். தடைப்பட்டியலில் இவரது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் தனது வேலையை இவரும் இழக்கும் நிலை நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.
இதிலிருந்து ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். உருத்திரகுமாரன், விநாயகம், மனோ போன்றவர்களின் பெயரைத் தடைப்பட்டியலில் இணைப்பதால் சிங்களத்திற்கும் சரி, இவர்களுக்கும் சரி எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதுதான் அது. தடைப்பட்டியல் மூலம் வெள்ளையடிக்கப்படடு புலித்தோல் அணிவிக்கப்பட்டிருக்கும் இவர்களைப் பயன்படுத்திப் புலம்பெயர் தேசங்களில் இன்னும் இலகுவதாகக் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்பதே சிங்களத்தின் நோக்கமாக இருக்கின்றது என்பதை நாம் அடித்துக் கூறலாம்.
ஆனால் சர்வே, மகேஸ்வரன் போன்றவர்களின் நிலை அப்படியல்ல. இவர்ளுக்குப் புலித்தோல் அணிவிக்காமலே இவர்களைப் பயன்படுத்திப் புலம்பெயர் தேசங்களில் குழப்பங்களை விளைவிக்கலாம் என்பது சிங்களத்திற்கு நன்கு தெரியும். சரி. இப்பொழுது ஒரு கேள்வி எழக்கூடும்.
புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் முக்கிய செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் பெயர் விபரங்களைத் தனது தடைப்பட்டியலில் சிங்களம் உள்ளடக்கவில்லை. அப்படியென்றால் சர்வே, மகேஸ்வரன் போன்று இவர்களும் சிங்களத்தின் பின்னணியில் இயங்குகின்றார்களா? இது ஒரு நியாயமான கேள்விதான்.
ஆனால் யதார்த்தம் அதுவல்ல. புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புக்களின் முக்கிய செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரைத் தனது தடைப்பட்டியலில் இன்னமும் சிங்களம் உள்ளடக்கத் தவறியிருப்பதற்கு நான்கு முக்கிய காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம் இவர்களில் பலரது விபரங்கள் சிங்களத்திடம் இல்லாமல் இருக்கக்கூடும். இதன் காரணமாகவே இவர்களின் பெயர் விபரங்கள் சிங்களத்தின் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.
அடுத்த காரணம் இவ் அமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவற்றுக்குள் ஆழ ஊடுருவியிருக்கக்கூடிய, அல்லது இவ் அமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவற்றுடன் தொடர்பைப் பேணி வரும் சிங்கள உளவாளிகளைப் பாதுகாப்பது. மே 18இற்குப் பின்னரான சூழமைவில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவற்றுக்குள் பல சிங்கள உளவாளிகள், தொழிலதிபர்களாகவும், மருத்துவர்களாகவும், பூகோள அரசியல் சித்தாந்தவாதிகளாகவும் வேடமிட்டுப் புகுந்துள்ளார்கள். இவர்களிடம் இருந்து பெறப்பட்ட விபரங்களை வெளியிடுவது, இவ் விபரங்கள் எவ்வாறு வெளியில் சென்றன என்பதைச் சம்பந்தப்பட்ட அமைப்புக்களும், ஊடகங்களும் மோப்பம் பிடிப்பதற்கு வழிகோலும் என்பதும், இதனால் இவ் உளவாளிகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் நிலை தோன்றும் என்றும் சிங்களத்திற்கு தெரியும். இதன் காரணமாகவும் இவ் அமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் விபரங்களை சிங்களம் வெளியிடவில்லை என்று நாம் உறுதியாகக் கூறலாம்.
மூன்றாவது காரணமும் இவ் அமைப்புக்கள், ஊடகங்களுக்குள் ஊடுருவியிருக்கக்கூடிய சிங்கள உளவாளிகளுடன் தொடர்புடையது. இவ் உளவாளிகள் ஊடுருவியிருக்கும் அமைப்புக்கள், ஊடகங்கள் போன்றவற்றில் அங்கம் வகிக்கும் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் விபரங்களை சிங்களம் வெளியிடும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உளவாளிகளின் விபரங்களையும் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடாத பட்சத்தில் இவ் உளவாளிகள் மீது சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கும், ஊடகங்களுக்கும் சந்தேகப்படக்கூடும்.
தவிர இவ்வாறு தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்குள் ஊடுருவியிருக்கும் சிங்கள உளவாளிகளில் கணிசமானோர் தத்தமது நாடுகளில் மருத்துவர்களாகப் பணிபுரிபவர்கள். இவர்கள் மீது புலிமுத்திரை குத்தப்படுவதால் தமது வேலைகளை இவர்கள் இழக்கும் நிலை ஏற்படும். இதனை இவர்களோ அன்றி சிங்கள அரசோ விரும்பப் போவதில்லை.
இந்த நான்கு காரணங்களுக்காகவே பல செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் விபரங்களைத் தனது தடைப்பட்டியலில் சிங்களம் உள்ளடக்கவில்லை. ஆனால் இது பற்றி இப்பத்தியில் சந்தேகம் எழுப்பப்பட்டிருப்பது போன்று தமிழ் மக்களிடையே ஐயம் வலுவடையும் பொழுது ஒப்புக்குப் புதிய பட்டியல் ஒன்றையும் சிங்களம் வெளியிடலாம். அவ்வாறு நடந்தாலும் அதனையிட்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.
எது எப்படியிருந்தாலும் சிங்களம் வெளியிட்டிருக்கும் தடைப்பட்டியல் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் விடுதலைக் கனலை அணைத்துவிடப் போவதில்லை. இப்பட்டியலை வெளியிட்டதன் மூலம் வேண்டுமென்றால் இதில் உள்ளடக்கப்பட்டிருப்போரின் உறவினர்களுக்குச் சிங்களம் அச்சுறுத்தல்களை விடுக்கலாம். அதுவும் தாயகத்தில் வசிக்கும் இவர்களின் உறவினர்களின் உடமைகளை சிங்களம் சுவீகரிக்கலாம்.
ஆனால் அது சிங்களத்திற்கு எதிரான ஆக்ரோச உணர்வை அதிகரிக்குமே தவிர நல்லிணக்கத்திற்கோ, சமரசத்திற்கோ வழிகோலப் போவதில்லை. குழவிக்கூட்டுக்கு இப்பொழுது சிங்களம் கல்லெறிந்துள்ளது. அதற்கான விளைவை அனைத்துலக இராசரீக அரங்கிலும், அரசியல் உலகிலும் இனிமேல் சிங்களம் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.
நன்றி: ஈழமுரசு
No comments:
Post a Comment