இலங்கைக்கு மீண்டும் வந்து மறுபடியும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருமான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில் அவர் மீண்டும் இலங்கை வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ஒருசிலர் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
எனினும் இந்தத் தகவலை பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்துள்ளன.
இது தொடர்பாக பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவரிடம் விசாரித்தபோது, மீண்டும் இலங்கை திரும்பி அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு அறவே இல்லை என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் முன்னர் வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளதாகவும் அவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment