திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திருப்பதி வந்தடைந்தார்.
இலங்கை அதிபர் ராஜபக்ச தனி விமானம் மூலம் இன்று மாலை
5 மணியளவில் தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா வந்தடைந்தார். அவருக்கு ஆந்திர காவல்துறையினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அலப்ரி சென்ற ராஜபக்சே, அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார்.
இன்று இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் ராஜபக்சே நாளை (10ஆம் தேதி) அதிகாலை 2.45 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் சுப்பரபாத சேவையின்போது, ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் அலிபிரி பகுதியில் ராஜபக்சேயின் வருகையை படம்பிடிக்க சென்ற தமிழக பத்திரிகையாளர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். சிலரது கேமராக்களையும் ஆந்திர போலீசார் பறித்து வைத்துக் கொண்டுள்ளனர்.
கொடும்பாவி எரிப்பு
ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவதற்காக நூற்றுக் கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் சென்ற போது ஆந்திரா எல்லையில் அம்மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதற்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் கூட்டமைப்பின் தலைவர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் ஒரு மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் நடத்திய சாலை மறியலால் தமிழகம்- ஆந்திரா இடையேயான போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இரு பகுதிகளிலும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த சாலை மறியல் போராட்டம் ஒரு மணிநேரம் நீடித்தது.
இந்தப் போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ், தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி, தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் ஆயிரக்கணக்கான கூட்டமைப்பு தோழர்களும் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின் போது ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment