ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டுமென்ற கோசம் மீண்டும் தமிழ் தரப்புக்களிடையே முனைப்பு பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின்
முக்கிய பிரச்சினைகளுக்கு இரண்டு பிரதான வேட்பாளர்களும் தீர்வுத் திட்டங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் அன்றாட பிரச்சினைகளுக்கு மஹிந்த ராஜபக்ஸவோ, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ காத்திரமான தீர்வுத் திட்டங்கள் எதனையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை நம்பியிருக்கப்போவதில்லை என்ற ஓர் நிலைப்பாட்டை ஆளும் கட்சி கொண்டுள்ளதாகவும், வடக்கு கிழக்கு தமிழ் தொடர்பிலான பாதக நிலைப்பாட்டைக் கொண்டுள்ள சில சமிக்ஞைகள் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரிடம் தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பிலான திட்டங்கள் எதுவும் முன்வைக்க்பபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள கடும்போக்குவாத தரப்பினர் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து வருவதனால் அவர்களது கோரிக்கைகளை மைத்திரிபால சிறிசேன அங்கீகரிப்பதாகவே தோன்றுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் மட்டுமன்றி அன்றாட பிரச்சினைகளுக்கே உரிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment