September 14, 2014

"தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவோம்" ஒன்றுபட்ட தமிழராய் எம்பணிகள் தொடர்வோம்!! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு!!

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இன அழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெறுவதற்கு வலுச்சேர்க்கும் என்ற
நம்பிக்கையுடன் தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவதற்கான சாட்சியங்களைச் சேகரிக்கும் பணி அனைத்துலக நாடெங்கும் இயங்கி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களாலும், மனிதநேயப் பணியாளர்களாலும், இளையோர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தாங்கள் அறிந்ததே.

எமது இடைவிடாத  போராட்டங்களின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையால் சேகரிக்கப்படுகின்ற தமிழினப் படுகொலைக்கான ஆதாரங்களைச் சாட்சியங்கள் ஊடாக வழங்கும் பணிக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் எம்மாலான அனைத்து வழிகளிலும் பலம் சேர்க்க வேண்டும் என்ற உறுதியோடு செயற்படுகிறது. எனவே, எம் அன்பிற்கும், மதிப்புக்கும் உரிய உறவுகளே! இந்த மாபெரும் வரலாற்றுக் கடமையை உணர்ந்து உங்களாலான அனைத்து சாட்சியங்களையும் எதிர்வரும் 30.10.2014ற்கு முன்னதாக வழங்கி, சிங்கள இனவெறி அரசின் கபட முகத்திரையைக் கிழித்து, தமிழின அழிப்பிற்கு நீதி பெற வலுச்சேர்க்கும் வண்ணம் உரிமையுடன் வேண்டுவதுடன், சாட்சியாளர்களின் விபரங்கள் யாவும் இரகசியத்தன்மையுடன் பேணப்படும் என்பதையும் தங்களுக்கு உறுதியுடன் தெரிவிக்கின்றோம். 

அத்தோடு, 15.09.2014 திங்கள் 14:00 – 17:30 மணிக்கு ஜெனீவா ஐ.நா முன்றலின் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்கும் பேரணிக்கு அனைவரும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற அகிம்சைத் தீ வளர்த்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவையொட்டி தமிழ்நாடு உட்பட அனைத்துலக நாடுகள் எங்கும் எதிர்வரும் 26.09.2014 அன்று நடைபெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கும் அடையாள உண்ணா நோன்புப் போராட்டம் சுவிஸ்சிலும் 26.09.2014 (வெள்ளி) அன்று 10:00 – 17:00 மணி வரை ஜெனீவா ஐ.நா முன்றலின் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள ஏற்பாடாகியுள்ளது. இதிலும் கலந்து கொண்டு எமது உரிமையை வென்றெடுக்கக் குரல் கொடுக்கும் வண்ணம்  அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

பல கோடி பணச்செலவில் எமது முயற்சிகளைத் தடுத்து, சிதைக்க நினைக்கும் இலங்கை அரசின் சதித்திட்டங்களைத் தகர்த்தெறிந்து எங்கள் உரிமையை நிலைநாட்டி, தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஒன்றுபட்ட தமிழராய் எம்பணிகள் தொடர்வோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: 
078 662 93 06 / 078 882 05 96 
மின்னஞ்சல்: vannimurram@gmail.com

                                                           நன்றி                                                                   

                                          "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

No comments:

Post a Comment