August 14, 2014

மாணவன் தொடர்பிலான பொலிஸ் பேச்சாளரின் அறிக்கைக்கு அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் எதிர்ப்பு!

“சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையை
நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தமிழ் – சிங்கள பல்கலைக்கழக மாணவர்களிடையில் மோதலை உண்டுபண்ணுவதற்காக அரசினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மூடிமறைக்கவே, தன்னைத் தானே மாணவன் தாக்கிக் கொண்டார் என வாக்குமூலம் வழங்கினர் எனப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.” – இவ்வாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுதர்ஷன் என்ற மாணவன் கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தினுள் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காயிருந்தார். இதன் பின்னர் கடந்த வாரம் தாக்குதலுக்குள்ளான மாணவன் கைதுசெய்யப்பட்டிருந்தார். மேற்படி மாணவன் தன்னைத்தானே தாக்கிக் கொண்டார் எனப் பொலிஸ் பேச்சாளர் நேற்றுமுன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் – “பொலிஸ் பேச்சாளரின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம். இலங்கை அரசினால், பல்கலைக்கழக தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதலை உண்டுபண்ணுவதற்காகவே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதற்கு முன்னோடியாகவே அங்கு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் சுதர்ஷன் என்ற மாணவன் 27 ஆம் திகதி அதிகாலையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். ஒருவர் தனக்கு தானே எப்படித் தாக்க முடியும்? அதுவும் அவரது வாயை மூடிக்கட்டி, கழுத்தை வயறினால் நெரித்து, தனக்குத்தானே எவ்வாறு தாக்கிக் கொள்ள முடியும்? எனவே, அவர் தனதுக்குத் தானே தாக்கிக் கொண்டார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பதன் மூலம் அரசின் மோதல் முயற்சிகளை மூடிமறைக்க முயல்கின்றார்.
மேலும், குறித்த மாணவன் தாக்கப்பட்ட பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் பயின்ற மற்றுமொரு தமிழ் மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து எம்மால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பையும் நாம் நடத்தியிருந்தோம். இதன் பின்னர் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளராகிய எமது ஒவ்வொருவரது வீட்டுக்கும் இனந்தெரியாத நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தப் பின்னணிகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, தமிழ் மாணவன் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெளிவாகின்றது. இதனடிப்படையில் நாம் பொலிஸ் பேச்சாளரின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்” – என்றனர்.

No comments:

Post a Comment