August 15, 2014

கிளிநொச்சியில் வரலாறு காணாத வரட்சி - விவசாயம் நாசம், குடிதண்ணீருக்காக அலையும் மக்கள்

தமிழர் தாயகத்தின் பொருளாதார மாவட்டமான கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு
காணாத வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு விவசாயச் செய்கையும் விவசாய உற்பத்திகளும் அடியோடு நாசமாகியுள்ளன. குடிதண்ணீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலையேற்பட்டுள்ளது. இந்த நிலையில் இம்மக்களின் வாழ்வாதார, பொருளாதார இழப்பிற்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிளிநொச்சி மக்களின் இந்த அவலம் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேற்படி அமைச்சருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த நாற்பது வருட காலங்களில் என்றுமில்லாதவாறு கிளிநொச்சி மாவட்டம் வரலாறு காணாத வரட்சி நிலையைக் கொண்டுள்ளதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டத்தின் திருவையாறு, சாந்தபுரம், கனகாம்பிகைக்குளம், ஆனந்தபுரம், தொண்டமான்நகர், பொன்நகர், பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், விவேகானந்தநகர், ஜெயந்திநகர், உருத்திரபுரம், வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு, தர்மபுரம், பிரமந்தனாறு, முரசுமோட்டை, கண்டாவளை, தட்டுவன்கொட்டி, ஜெயபுரம், விநாயகபுரம், முழங்காவில், பூநகரி உட்பட்ட கிராமங்களில் வரட்சியால் ஏற்பட்ட அழிவுகள் சொல்லிலடங்காதவை.
இக்கிராமங்களில் உள்ள பல்லாண்டுப் பொருளாதாரப் பணப் பயிர்களான தென்னை மரங்கள் முற்றாக அழிந்துள்ளன. 2009 களில் யுத்தத்தால் மீள்குடியேறி நாட்டிய சிறிய தென்னம்பிள்ளைகளும் முற்றான அழிவை அடைந்துள்ளன. ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில்  2012 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிறுபோக நெற்செய்கை அழிவு, அதன் பின்னர் 2012 இன் இறுதியில் பெய்த கடும்மழை காரணமாக  2013 ஆம் ஆண்டின் ஆரம்பகால காலபோக அறுவடையும் முற்றாக இழந்த நிலையில், இந்த நெல் அழிவுக்கு எந்த வெள்ள நிவாரணமும் வழங்கப்படாத சூழலில் 2013 ஆம் ஆண்டின் இறுதியில் இல்லாமல் போன மழை 2014 இன் இன்றுவரை இம்மக்களைச் சொல்லொண்ணாத் துன்பத்திற்குத் தள்ளியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெருங்குளமான இரணைமடு வற்றி வரண்டு போன நிலையில் சிறிய அளவு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய அக்கராயன், வன்னேரிக்குளம், கல்மடுக்குளம், பிரமந்தனாறுக்குளம், புதுமுறிப்புக்குளம், கரியாலை, நாகபடுவான்குளம் என்பனவும் அடியோடு வற்றிவிட்டன. இதைவிட கிளிநொச்சி மாவட்டத்தின்  நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய குளங்களெல்லாம் வற்றி நிலம் வெடித்து வானம் பார்க்கிறது. இந்தச் சூழலில் மக்கள் குடிநீருக்காக மாவட்டம் முழுவதும் அலையாய் அலைகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் நெல்லுக்கு அடுத்த பொருளாதார சீவியப் பயிரான இலட்சக்கணக்கான தென்னைமரங்கள் வரட்சி தாங்க முடியாமல் வட்டோடு சாய்ந்து கருகியுள்ளன.
பயன்தரு வாழை மரங்கள் அடியோடு நாசமாகியுள்ளன. பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள் வரட்சி காரணமாக குடி தண்ணீர் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் தாங்கள் விரைந்து செயற்பட்டு இம்மக்களின் வாழ்வாதார இழப்பிற்கு நிவாரணம் கிடைக்க ஆவன செய்வதுடன், பொருளாதார இழப்பினை ஈடுசெய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment