August 16, 2014

தமிழரின் உள்ளத்தில் எரியும் நெருப்பை விசாரணைக்குழுவிடம் கொட்டிய மன்னார் ஆயர்!


இலங்கை அரச ஆயுதப்படைகளினதும், இனவாத பிக்குகளினதும் பயங்கரவாதக்குறியில் இருக்கும் ஒரு மதத்தலைவரென்றால், அது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களாகத்தான் இருப்பார்.

தமிழ்மக்கள் துன்பப்படும் போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்கள் படும் இன்னல்களுக்கு குரல் கொடுத்ததோடு, தாயக மண்ணில் இருந்தபடியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிய வணக்கத்துக்குரிய சர்வமதக் குருமார், பாதிரிமார்கள் போன்றோரை கடந்த காலங்களில் நாம் இழந்துள்ளோம்.

அவர்களது அர்ப்பணிப்புகளை தமிழர்கள் என்ற வகையிலும், ஜாதி மதங்களை கடந்த நிலையில் வணக்கத்தோடு நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்.

நீதி, நியாயம், தர்மம் என்பவற்றின் அடிப்படையில் மன்னார் ஆயர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதை தமது கடமைகளில் ஒன்றாக கருதி, அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஒருவராக நம் மக்களிடையே வலம் வருகிறார்.

அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட இலங்கை அரசின் சிங்கள மயமாக்கல், பௌத்த நாடாக மாற்றுதல் போன்ற வல்லாதிக்க முயற்சிகள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் இடம்பெற்று வருகின்ற போதும், கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இலங்கை அரசுக்கு தயக்கம் இருக்கவே செய்கிறது.

சர்வதேச மட்டத்தில் மிகவும் உயர்வான தளத்தை கொண்ட மதமாக அது கருதப்படுவதால், அதற்கு எதிரான நடவடிக்கைகள் அரசின் அத்திவாரத்தையே ஆட வைக்கும் என்பது இலங்கை அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது.

அதோடு, கரையோர சிங்கள மக்கள் பலரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பதால், உள்நாட்டு அரசியல் ரீதியாக தேர்தல்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் அரசுக்கு தெரிந்தே இருக்கிறது.

ஆனாலும், தாங்களே இலங்கையின் பெரும்பான்மையினர் என்ற மிதப்பில், ஏனைய மதங்களை பந்தாட நினைக்கும் கூட்டமாக பௌத்த மதவாதிகள் ஏனைய வணக்க தலங்களை அடியோடு அழிக்க முயல்வதோடு, கிறிஸ்தவ மதத் தலங்ளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாக்கி வருகிறார்கள்.

அதை பலரும் கண்டிக்கின்ற போதும், தமிழர் தாயகத்தில் தேவாலயங்கள் தாக்கப்பட்டு தமிழ் கிறிஸ்தவ மக்கள் கொல்லப்பட்டபோது சிங்கள கிறிஸ்தவ மக்கள் குரல் கொடுக்கவுமில்லை, அனுதாபம் தெரிவிக்கவுமில்லை என்பது மதத்துக்குள் இருக்கக்கூடிய இனமுரண்பாடாகவே பார்க்க வைத்தது.

சர்வதேசத்தின் பார்வைக்கு இலங்கையில் இடம்பெற்ற தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் பெரிய அளவில் சென்றடைந்ததாக தெரியவில்லை. ஆனாலும் சர்வதேச விசாரணைக் குழு அதனை கவனத்தில் எடுத்திருக்கும் என்றே கருதலாம். இலங்கையின் பல பாகங்களிலும் இந்து கோவில்கள் நூற்றுக் கணக்கில் தாக்கி அழிக்கப்பட்டபோது சர்வதேசம் அதை கண்டு கொள்ளவே இல்லை.

பெரும்பான்மை இந்துக்களின் நாடான இந்தியாவும் பொருட்படுத்தவில்லை. அரபு நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்று தெரிந்தும் இலங்கையில் முஸ்லிம் பள்ளி வாசல்கள் தாக்கப்பட்டன. அது மத ரீதியிலான ஒரு தாக்கத்தை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தாலும், அதன் உடனடி விளைவுகள் அதிகம் பெரிதுபடுத்தப்படவில்லை.

இவை சேதமாக்கப்பட்டதை போன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் பெரிதாக தாக்கப்பட்டால் சர்வதேச மட்டத்தில் விளைவுகள் விபரீதமாகவே அமையும் என்பதை இலங்கை அரசு உணரவே செய்கிறது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு இருக்கும் சர்வதேச மத அந்தஸ்த்தையும் இலங்கை அரசு உணர்ந்தே இருக்கிறது. அதனால்தான் வெள்ளை வான் இன்னமும் அவரை நெருங்க முடியவில்லை என்று தெரிகிறது.

மதக்கோட்பாடுகளைத் தாண்டி, எமது இனத்துக்கு ஆயர் அவர்கள் அவசியமான ஒருவராக எப்போதுமே தெரிகிறார். அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

இலங்கை அரசானது, மன்னார் ஆயாரை நோக்கி வெளிப்படையாக சொல்ல முடியாத எச்சரிக்கையை மதவாதப் பிக்குகளின் வாயிலாக சொல்லி வருகிறது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச மனித உரிமை பேரவையின் ஆணைக்குழுவுக்கு ஏட்டிக்கு போட்டியாக தொடங்கப்பட்ட இலங்கை ஜனாதிபதியின் காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு, கடந்தவாரம் தமது விசாரணையை மன்னாரில் நிகழ்த்தியிருந்தது.

அங்கு சென்ற ஆயர் அவர்கள், விசாரணைகளில் பங்குகொள்ளவில்லையானாலும், இலங்கை அரசின் தில்லுமுல்லுகள் பலவற்றை ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியதோடு, பத்திரிகையாளரிடமும் பல தகவல்களை பரிமாறியிருந்தார்.

அவர் கூறிய சில விடயங்கள் நிச்சயம் இலங்கை அரசுக்கும், அவர்களது ஆணைக்குழுவுக்கும் நெருப்பை கொட்டியதுபோல் இருந்திருக்கும் என்பது உண்மை. அதனால்தான் பொதுபல சேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரரின் மூலம் ஆயரை கைதுசெய்யும்படியான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“குற்றவாளிகளே நீதிபதிகளாக இருக்கும் ஒரு நாட்டில் நீதி கிடைக்கும் என்றோ, சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்குமென்றோ எதிர்பார்க்க முடியாது!” என்று குறிப்பிட்ட ஆயர் அவர்கள்,“நாட்டிலுள்ள மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளளோம் என்பதை அரசு உணரவேண்டும். ஆனால், அதற்கான ஆயத்தம் எதிலும் அரசு ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இராணுவத்தின் பலத்தை தமிழர் தேசத்தில் பெருக்குவதிலேயே அரசு குறியாக இருக்கிறது” என்றும் ஆயார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பலவிடயங்கள் அவரால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன. அத்தனையும் இலங்கை அரசினதும், அரசின் விசாரணைக்குழு சம்பந்தமான விமர்சனங்களாகவும், விசாரணைக்குழுவின் பலவீனம் பற்றிய தகவல்களாகவுமே இருந்தன. அவரது கருத்துக்கள் யாவும் இலங்கை அரசுக்கு கசப்பாகவே இருந்திருக்கும் என்பது உண்மை.

உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும். பத்தோடு பதினொன்றாக என்றுமே தீர்வை காணாத விசாரணைக்குழுக்களை அமைத்து காலத்தையும், மக்கள் பணத்தையும் விரயமாக்குவதைவிடுத்து, அபிவிருத்தி என்ற திரைக்குள் மறைந்துகொள்ளாமல், மன்னார் ஆயர் சொல்வதுபோல் மக்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நாட்டை நல்வழிப்படுத்துதையே முன்மாதிரியான கொள்கையாக அரசு கடைப்படிக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

க.ரவீந்திரநாதன்

No comments:

Post a Comment