August 12, 2014

பல்கலைக்கழக மாணவன் மீதான தாக்குலுக்கு முன்னணி கண்டனம்!

சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் (வயது 21) என்ற மாணவன் மீது கடந்த 3.8.2014
அன்று அதிகாலை 2.30 மணியளவில் மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவதினம் பல்கலைக்கழக விடுதியிலுள்ள கழிப்பறைக்கு சுதர்சன் சென்றபோது அங்கு காத்திருந்த ஐந்து நபர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மண்டையில் தாக்கப்பட்டதுடன், கழுத்தில் கயிறுபோட்டுத் திருகப்பட்டுமுள்ளார்.
பல்கலைக்கழக விடுதிக்குள் வைத்து தாக்குதலை நடாத்தியவர்கள் கொச்சைத் தமிழிலும், சரளமான சிங்களத்திலும் பேசியவாறு தாக்குதல் நடாத்திவிட்டு யாருடைய கண்ணிலும் படாமல் தப்பியும் சென்றுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவ மாணவிகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் அவ்வாறில்லாவிடில் மாணவர்கள் கொல்லப்படுதுடன், மாணவிகள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் கொச்சைத் தமிழில் எழுதப்பட்ட எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் குறித்த பல்கலைக்கழக விடுதிச் சூழலில் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள பௌத்த தேசியவாதமானது இலங்கை ஓர் சிங்கள பௌத்தநாடு, அதில் சகல அதிகாரங்களும் சிங்கள பௌத்தர்களுக்கே உரியதென்ற கருத்து நிலையை கொண்டுள்ளது. அந்த அதிகாரத்திற்கு சவால் விடக்கூடிய ஆற்றலுள்ளவர்களாக வேறு எந்த இனத்தவரோ மதத்தவரோ வளர்ந்து விடக்கூடாது என்ற சிந்தனை அதனிடம் மேலோங்கி வருகின்றது. அத்தகைய சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாகவே மேற்படி சம்பவங்கள் அமைகின்றது.
உண்மை நிலை இவ்வாறிருக்க தாக்கப்பட்ட மாணவன் தன்னைத் தானே தாக்கினார் என்று உயர்கல்வி அமைச்சர் கூறியிருப்பதானது இனவாத்தின் குரூர முகத்தினை மூடிமறைப்பதுடன், இச்சம்பவத்தின் உண்மையான பின்னணியையும் திசைதிருப்புவதாகவும் அமைந்துள்ளது. உயர்கல்வி அமைச்சரின் இத்தகையை செயற்பாடானது சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாத்துள்ளதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அரசின் முழுமையான ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இருக்கும் என்ற சமிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது.
சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இத்தகைய மனோநிலையோடு தமிழ்த் தேசமானது நல்லிணக்கத்திற்க வரவேண்டுமென வலியுறுத்தும் சர்வதேச சமூகத்திற்கு இத்தகைய சம்பவங்கள் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
மிலேச்சத்தனமான மேற்படி தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பக்கபலமாக நாம் எப்போதும் நிற்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்                              செல்வராசா கஜேந்திரன்
தலைவர்                                                        பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment