சமீபத்தில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக
குழுவின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் நோக்கிலேயே காணமற்போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விஸ்தரிக்கப்பட்டதாகவும் சர்வதேச நிபுணர்குழு நியமிக்கப்பட்டதாகவும் தான் கருதுவதாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
காணமற்போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவருக்கு தான் ஏன் அந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க விரும்பவில்லை என்பதை தெளிவு படுத்தி சமர்ப்பித்துள்ள கடிதத்திலேயே இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
யுத்தத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அநீதிகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் உள்ளுர் பொறிமுறைகளின் பங்களிப்பு குறித்து நான் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்.
கடந்த காலங்களில் உங்களது ஆணைக்குழுக்கள் போன்று பல ஏற்படுத்தப்பபட்டன ஆனால் எவையும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் விடயத்திற்கு தீர்வு கண்டதற்கான அறிகுறிகள் இல்லை. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அரசியல் உறுதிப்பாடின்மையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து நான் பல வருடங்களாக அறிந்திருந்தும்- நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி சாட்சியமளித்தேன். தமிழ் மக்களும் நானும் சாட்சியமளித்த அந்த விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
இந்த அனுபவம் காரணமாக உங்கள் ஆணைக்குழு முன்னிலையில் தோன்ற எனக்கு முடியவில்லை.
இந்த ஆணைக்குழு காணமற்போனோர் ஆணைக்குழு என அழைக்கப்படுகிறது. இவர்கள் காணமற்போகவில்லை. பலவந்தமாக காணமற்போகச் செய்யப்பட்டுள்ளனர். ஆகவே இது கூட உண்மையை மறுதலிக்கும் செயலாகவே எனக்கு தோன்றுகிறது.
வடக்கு கிழக்கில் தங்களது குடும்பத்தினரை இழந்த பலர் உங்கள் முன்னிலையில் தோன்றி தங்கள் துயரங்களை முன்வைத்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களை கண்டுபிடிப்பதற்கு உங்கள் ஆணைக்குழு உதவும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பே அதற்கு காரணம், அவ்வாறு செயற்படுவதன் முலமாக அவர்கள்எதனையும் இழக்கப் போவதில்லை.
இதனை செய்வதால் தங்களுக்கு எந்த பலாபலனும் கிடைக்கப்போவதில்லை என அறிந்திருந்தும் அவர்கள் எங்கெல்லாம் சென்று தங்கள் துயரங்களை முறையிட முடியுமோ அங்கெல்லாம் செல்கின்றனர். இதுவே இந்த நாட்டின் தமிழ் மக்களின் பரிதாப நிலையாகும்.
இதேவேளை இந்த ஆணைக்குழுக்கள் காணமற்போனவர்களை கண்டுபிடித்து கொடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளாமல் அவர்களின் பொருளாதார நிலை குறித்து அறிவதிலேயே ஆர்வமாக இருப்பதாக அறிந்துள்ளேன். இதேவேளை காணமற் போனவாகளின் குடும்பத்தினரை மரணச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு ஊக்குவிக்கும் செயற்பாடொன்றை அராங்கம் முன்னெடுத்து வருகிறது. உங்கள் ஆணைக்குழுக்களின் அமர்வுகளிற்கு சமாந்திரமாக இது இடம்பெறுகின்றது.
உங்களது ஆணைக்குழுவின் ஆணை சமீபத்தில் விஸ்தரிக்கப்பட்டதற்கும், சர்வதேச நிபுணர்குழு நியமிக்கப்பட்டதற்கும் சமீபத்தில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையக குழுவின் செயற்பாடுகளை பலவீனப்படுத்துவதே நோக்கமாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன்.
உண்மைக்கும் நீதிக்குமான தீவிரமான அர்ப்பணிப்பு இல்லாத பட்சத்தில் நல்லிணக்கம் ஒரு போதும் ஏற்படாது சமாதானம் கானல்நீராகவே தோன்றும்.
No comments:
Post a Comment