August 12, 2014

இன்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் பிறந்த தினம்!!!

குமார் பொன்னம்பலத்தின் நினைவில் 12.08.2000ஆம் திகதியன்று சண்டே லீடர் பிரதம பதிப்பாசிரியர் காலஞ்சென்ற லசந்த விக்கிரமதுங்க ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கத்தை வெளிப்படுத்துவது சாலப்பொருத்தம் என்று எண்ணி வெளிப்படுத்துகின்றோம்.


லசந்த விக்கிரமதுங்க ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு;
“”குமார் பொன்னம்பலம் ஒரு மாமனிதர் என்பதற்காக மட்டுமல்ல, எப்போதெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டும் உண்மை நண்பனாக அவர் இருந்தார் என்பதற்காகவும் அவரை கௌரவப்படுத்த வாய்ப்புக்கிடைத்தமையை ஓர் அரிய பேறாக நான் கருதியதாலும் அவரைப்பற்றி இந் நினைவுரையை நிகழ்த்துவதில் பூரண திருப்தி அடைகின்றேன். என்னைப் பொறுத்தமட்டில் அவர் வெறுமனே ஒரு அரசியல்வாதியாக அல்ல, ஆனால் எனது சொந்த வாழ்வாகட்டும் அல்லது எனது தொழில்சார் வாழ்வாகட்டும் எப்போது ஒரு தேவை எழுகிறதோ அப்போதெல்லாம் அவரது ஆலோசனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் பெரிதும் மதிப்பளித்து அவற்றை நான் நாடிச் செல்லும் வகையில் திகழ்ந்த ஒரு அருமையான நண்பனாகவே எனக்கு தோன்றினார். இன்று குமாரோடு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் குறித்து பேசி எவ்வகையான ஒரு மானிடப்பிறவியாக அவர் விளங்கினார் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’.
“”சண்டே லீடர்’ பத்திரிகையை நான் ஆரம்பித்த போது அதை நாம் சிறிதாகவே தொடங்கினோம். அக் கருத்திட்டங் குறித்து நான் கலந்துரையாடிய முதல் நபர்களுள் குமாரும் ஒருவர். ஆரம்ப கட்டங்களில் அதில் பத்தியொன்றை எழுதுவதன் மூலம் பங்களிப்புச் செய்யமுடியுமாவெனக் குமாரை நான் கேட்ட போது அவர் அதற்கு உடனே இணக்கம் தெரிவித்தார். பத்திரிகை அதன் குழந்தைப் பருவத்தில் இருந்தபடியால் நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் நிறையவே இருந்தன. வரவேண்டிய சட்ட இடர்பாடுகள் பல இருந்தன. பத்திரிகையையும் என்னையும் பிரதிநிதித்துவப்படுத்தி எங்களுக்காக பத்திரிகை கவுன்சிலுக்கு ஓடித்திரிந்து ஆவன செய்வதற்கு அங்கே எப்போதும் குமார் தயாராயிருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு சதம் கூட எம்மிடம் அறவிடவில்லை. வெறுமனே நான் அவரின் ஒரு நண்பர் என்றதால் அல்ல. ஆனால் உண்மைக்காகவும் நீதிக்காகவும் போராடுவதில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாகவே அவர் எமக்காக அதைச் செய்தார்.
விடயங்கள் எதுவாயினும் உள்ளதை உள்ளவாறு பார்க்க பெரும்பாலான மக்களுக்கு விருப்பம் இல்லாததால் இலங்கையின் வெகுஜன ஊடகங்களில் தன் கருத்தை ஒலிக்கச் செய்வதற்கான ஒரு வாய்ப்பு தனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லையென்று குமார் எப்போதும் என்னிடம் வந்து கூறுவார். அவர்களுக்கு தேவைப்பட்டதோ இனிப்பு பூசப்பட்ட ஒரு கசப்பான மாத்திரையே. ஆனால் குமாரோ உள்ளதை உள்ளவாறே கூறும் ஒரு மனிதராகவே விளங்கினார்.
குமார் ஒரு கிளர்ச்சிக்காரராக தமிழ் மக்களின் உய்வை முன்னிறுத்திப் பாடுபடும் ஒரு கிளர்ச்சிக்காரராக விளங்கினார். எங்கே அநீதி இருந்ததோ தமிழ் மக்களுக்கெதிரானதாயிருந்தாலும் சரி முஸ்லிம் மக்களுக்கெதிரானதாயிருநந்தாலும் சரி அல்லது சிங்கள மக்களுக்கெதிரானதாயிருந்தாலும் சரி அங்கே குமார் போராடத் தயாராய் இருந்தார். காலத்தினதும் பதவியில் இருந்த அரசாங்கத்தினதும் சூழ்நிலையில் மக்கள் குமாரை ஓர் எல்.ரி.ரி.ஈ. அனுதாபி என முத்திரை குத்தினர்.
ஒரேயொரு நோக்கத்திற்காக குமார் உண்மையாயுழைத்தார். அது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கமாகும். ஓர் உதாரணத்தை உங்களுக்கு நான் தருகின்றேன். 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அநேக கட்சிகளுடன் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டு ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு என்னும் அமைப்பை உருவாக்கியது. இதற்கென அயரா முயற்சியெடுத்து ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த குமார் அதில் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வையும் உள்ளடக்கியிருந்தார்.
இத் தீர்மானத்திற்கு வந்த கையோடு தமிழீழ விடுதலைப் புலிகளை இச் செயன்முறைக்கு கொண்டு வராவிடில் எந்தத் தீர்வும் சாத்தியமாகாது என்ற நிலைப்பாட்டையும் எடுத்திருந்த அவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவியாய் இருந்த திருமதி பண்டாரநாயக்கவிடம் என் முன்னிலையில் “”இத் தீர்வுப் பொதியை நான் எல்.ரி.ரி.ஈ.யிடம் எடுத்துச் செல்லட்டுமா? அப்படியாயின் தீர்வினை ஏற்படுத்துவதில் தாங்கள் உண்மையான அர்ப்பணிப்போடிருந்தால் உங்கள் மகனை என்னோடு அனுப்பி வைக்க வேண்டும்’ எனக் கேட்டார்.
அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த திருமதி பண்டாரநாயக்கா அம்மையாரும் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்தார். வன்னி நோக்கிய கடினமான ஒரு பயணத்தை நாம் மேற்கொண்டோம். குமார் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அத் தூதுக் குழுவில் நானும் இணைந்திருந்தேன். ஏனெனில் பேச்சுகள் பயனளித்தால் மட்டுமே ஊடக உள்ளடக்கல் வழங்கப்படும் என்ற ஒரு புரிந்துணர்வுடன் சம்பவங்கள் குறித்த அறிக்கை செய்யும் ஓர் ஊடகவியலாளராக பணியாற்றுமாறு குமார் என்னை வலியுறுத்தியிருந்தார்.
அனுருத்த ரத்வத்த, அனுர பண்டாரநாயக்க, காலஞ்சென்ற தர்மசிறி சேனநாயக்க, குமார் பொன்னம்பலம் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் அத்தூதுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். கொழும்பிலிருந்து விமானம் மூலம் பயணித்து அநுராதபுரம் சென்றோம். அங்கு எங்களுக்காக ஒரு வாகனம் காத்திருந்தது. அதன் முலம் அங்கிருந்து வவுனியா சென்றோம். அது இந்திய அமைதி காக்கும் படை(ஐ.பி.கே.எப்.) நிலைகொண்டிருந்த காலமாகும். ஐ.பி.கே.எப். இன் ரோந்துகளைத் தவிர்க்குமுகமாக வெவ்வேறு மார்க்கங்கள் வழியாகச் சென்று இறுதியாக சேரவேண்டிய இடத்தை அடைந்தோம். தினேஷ் என்று அடையாளம் காணப்பட்ட எல்.ரி.ரி.ஈ. தலைவர்களுள் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அவரைச் சந்தித்தபின் அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டு அப்போதைய எல்.ரி.ரி.ஈ. யின் அரசியல் பிரிவுத் தலைவர்களுள் ஒருவரான திலீப் யோகி என்பவரைச் சந்தித்தோம்.
அந்தச் சந்திப்பின் போது குமார் பொன்னம்பலம் இந்த ஆவணத்தின் பிரதியொன்றை அவரிடம் சமர்ப்பித்து பரிசீலனை செய்யுமாறும் திருமதி பண்டாரநாயக்கா தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அதையடுத்து வரும் பொருத்தமான ஒரு நேரத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொண்டார். அத்தீர்வினால் குமார் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவ்வளவு தூரம் சிரமப்பட்டுப் பயணித்து இந்த ஆவணத்துடன் நாம் இங்கு வந்திருப்பது தமிழ் மக்களுக்கான இந்தப் பிரச்சினையை என்றென்றைக்குமாக தீர்த்து வைப்பதற்கேயாதலால் தமது நிலைப்பாட்டை மிகவும் அவதானமாக பரிசீலனை செய்யுமாறு அவர்களைக் கோரினார். குமாரை ஓர் எல்.ரி.ரி.ஈ. அனுதாபி என்று அக்காலத்தில் யாரும் கூறவில்லை. அவர் ஒரு குறிக்கோளுக்காகப் போராடினார். காலத்தின் கட்டாயத்தினாலேயே அவர் தன் குறிக்கோளை முன்னெடுத்தார்.
1994 இல் நிகழ்வுகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. அரசியலமைப்பு பற்றி அரங்கேறிய நாடகமெல்லாம் பொதுமக்கள் பணத்தைச் செலவிடுவதற்கான ஒரு நாடகமேயன்றி வேறில்லை என்பதைக் குமார் தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார். ஏனெனில் என் நினைவினை மீட்டிப் பார்க்கையில் “”கலந்துரையாடல்களுக்காக வடக்கிற்கு நீங்கள் அனுப்ப விரும்பும் தீர்வுப் பொதிதான் என்ன?’ என்று அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருந்த அஸ்ரப் அவர்களைக் குமார் கேட்டபோது “”அப்படிப்பட்ட எந்த தீர்வுப் பொதியும் கிடையாது’ என அவர் கூறியதாக தீர்வொன்று இல்லாமை பற்றிக் குமாருடன் பேசியபோது அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. குமார் தனது போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அவர் பகிரங்கமாகவே பேசினார். குமார் கூறியவற்றோடு நான் எப்போதும் இணங்கிப் போகவில்லை. ஆனால் அவர் எப்போதும் என்னிடம் கூறுவார், “”லசந்த இவ்விடயங்கள் குறித்து நாம் எப்போதும் வாதம் புரியலாம். ஆனால் அதற்கு முன் நாம் என்ன கூறுகிறோம் என்பதற்கு முதலில் செவிகொடுங்கள்’ என்று ரி.என்.எல். நிகழ்ச்சியொன்றில் குமார் தோன்றும் போதெல்லாம் அதைக் கேட்பதற்கு மிகப் பெரிய கூட்டம் திரண்டது என்று என்னால் கூறமுடியும். குமார் கூறியவற்றுடன் இணங்காதவர்கள் அவரை வெறுக்கத் துடித்தனர். ஆனாலும் அவர் கூறுவதற்கு எப்போதும் செவிமடுத்தனர். உறுதிப்பாட்டில் அவர் வெளிப்படுத்திய தைரியத்தை அவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அதை அவர்கள் வியந்தனர்.

நன்றி : நம்தேசம்

No comments:

Post a Comment