July 31, 2014

முத்தையன்கட்டு இடதுகரை மக்கள் எமது குடியிருப்புகளுக்கு அனுமதி தாருங்கள் என ரவிகரனிடம் கோரிக்கை!

28 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்துவருகிறோம். எமது குடியிருப்புகளுக்கு அனுமதி தாருங்கள் என முத்தையன்கட்டு இடதுகரை வாழ் தமிழ் உறவுகள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

1986ம் ஆண்டுக்குமுன்னர் காடுகளாய் கிடந்த காணிகளை வெட்டி அங்கு குடியேறி வாழ்ந்துவரும் தமக்கு இன்று வரை காணி அனுமதி பத்திரம் வழங்கப்படவில்லை என வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
கடந்த வாரம் முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் 18 ஏக்கர் திட்டத்தில் வாழும் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படாதது தொடர்பிலான வாய்மொழி, எழுத்துமூல முறைப்பாடுகள் ரவிகரனிடம் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் மக்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த ரவிகரன் இது தொடர்பிலான மக்களின் முறைப்பாடுகளை கேட்டிருந்தார்.
1986ம் ஆண்டுக்கு முன் காடுகளாய் இருந்த காணிகளை வெட்டி துப்பரவாக்கி அங்கு சுமார் 28 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் நிலையில் இன்னும் தமக்கு காணி அனுமதிப்பத்திரம் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தனர். மேலும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவைகள் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை எனவும் இக்காணி அனுமதிப்பத்திரம் கிடைக்காததால் அதனை காரணம் காட்டி தற்காலிக வீடு (6 மாத கால உத்தரவாதம்) தவிர்ந்த வேறு எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் ரவிகரனிடம் முறையிட்டு இருந்தனர்.
யுத்தகாலப்பகுதியில் தம்முடன் இருந்தவைகள் அனைத்தையும் இழந்து திரும்பவும் வந்து குடியேறிய போதும் ஒவ்வொரு குடும்பத்திலும் 3, 4, 5, 6 என குடும்ப அங்கத்தவர்கள் இருந்தும் காணி அனுமதிப்பத்திரம் இல்லாததால் வீட்டுத்திட்டம் தரப்படவில்லை எனவும் மேலும் முறையிட்டிருந்தனர்.
இவை தொடர்பில் ரவிகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கிட்டத்தட்ட 34 குடும்பங்கள் காணி அனுமதிப்பத்திர இழுத்தடிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களாலும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டவண்ணம் உள்ளனர். இவ்வாறான இடர்பாடுகள் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியிலும் சுதந்திரபுரத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் பகுதியிலும் (68 குடும்பங்கள்) காணப்படுகிறது.
கொக்குத்தொடுவாயில் எமது மக்களின் பெயரில் உள்ள காணியை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்குகிறார்கள். கேப்பாப்பிலவு உட்பட பல இடங்களில் மக்களின் காணிகளை இராணுவ தேவைக்கென அபகரித்துள்ளார்கள். இங்கு என்னவென்றால் தாங்களே காடுகளை வெட்டி துப்பரவு செய்து பல வருடங்களாக (யாருமே உரிமை கோராத நிலையில்) வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு மட்டும் மேற்படி தடைகளும் தாமதங்களும்.
இதே காணி தமிழர் தவிர்ந்த வேறு யார் என்றாலும் அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டிருக்கும். சலுகைகளும் வழங்கப்பட்டிருக்கும். தமிழர்கள் என்ற அடையாளமே இவர்கள் மீதான புறக்கணிப்புக்கு காரணமாகிறது. அவர்களிடம் இருந்த ஆதாரங்களை சேகரித்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்து மக்கள் சந்திப்பை நிறைவு செய்திருந்தேன். அவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் கிடைப்பது முதற்கொண்டு புறக்கணிப்புகள் இன்றி அவர்களுக்கான உதவித்திட்டங்கள் வழங்கப்படும் வரை அவர்களோடு இணைந்ததாக எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment