விடிந்தும் விடியாத அதிகாலையில் எழும்பி மருத்துநீர் தலையில் தெளித்து தோய்ந்து புத்தாடை உடுத்தி ஆலயங்கள் போய் அதன்பின் உற்றார்,
உறவினர் என்று குதூகலித்து ஒரு புத்தாண்டு வழமைபோலவே எங்கள் எல்லோருக்கும்..
ஆனால் விபூசிகா என்ற அந்த சிறுமிக்கு.....
சிறைச்சாலைக்குள் வாடிக்கொண்டிக்கும் விபூசிகாவின் தாய்க்கு...
இன்னும் சிங்கள தடுப்பு முகாம்களுக்குள்ளும், கொடும் சிறைகளுக்குள்ளும், ராணுவ வேலிகளுள்ளும் வாடிக்கொண்டிருப்பவர்களுக்கு...
தமிழீழம் என்ற உன்னதமான தாயக மீட்புக்காக முயற்சிகளில் இந்தியாவின் தமிழ்நாட்டு சிறைச்சாலைகளிலும் செங்கல்ப்பட்டு, திருச்சி, மதுரை தடுப்பு முகாம்களில் வருடக்கணக்காக வாடிக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு..
வெளியில் இருக்கும் அவர்களின் சொந்தங்களுக்கு புதுவருடக்கொண்டாட்டங்கள் எப்படி..?
எங்கள் அனைவரதும் வீடுகளும், பாரம்பரியமான நிலங்களும், முற்றங்களும் எமக்கே எமக்காக என்றென்றும் நிலைக்க வேண்டும் என்பதற்காக குரல்கொடுத்த இவர்களை மறந்துவிட்டு நாம் மட்டும் எப்படி ஒரு தமிழ் புத்தாண்டில் குதூகலிக்க முடியும்... அப்படி முடியுமானால் நாம் எம்மை எப்படி அழைத்துக்கொள்ள முடியும்...
காணாமல் போனோர்க்காக தளர்வின்றி குரல்கொடுத்த எம் தேசத்து சிறுமி ஒருத்தி எங்கோ ஒரு காப்பகம் என்ற பெயருடனான தடுப்பு முகாமில் யாருமற்று தேம்பும் போது அவளை மறந்து எப்படி எல்லோரும் குதூகலமாக புதுவருடத்து வாழ்த்துகளை குறுஞ்செய்திகளிலும் தொலைபேசி குரல்வழியும் அனுப்பி கொண்டாட முடியும்....
புதுவருடத்தில் ராசிபலன் எப்படி இருக்கும் என்று பார்ப்பதில் நாம் எல்லோரும் காட்டும் அதீத ஆர்வத்தை ஏன்தான் விபூசிகா என்ற சிறுமியின் எதிர்காலம் பற்றி சிந்திப்பதில் நாம் காட்டவில்லை..
எங்கள் எல்லோரினதும் ராசிபலன்களை அண்டவெளியின் கிரகங்கள், கோள்கள் தீர்மானிக்கும்போது அந்த சிறுமியின் தலைவிதியை மட்டும் ராஜபக்சே என்ற காட்டுமிராண்டிகள் சிங்கள பேரினவாதத்தின் பெயரால் தீர்மானிக்கிறார்களே அது ஏன் எங்களுக்கு உறைக்கவில்லை....
ஒரு செல் வீழ்ந்து அடுத்த செல் நிமிடத்தில் அதே இடத்தின் அருகில் வீழும் என்று தெரிந்தும் அடுத்தவனை காப்பாற்ற உயிரை மதியாமல் ஓடிச்சென்று காப்பாற்றிய ஒரு இனம் இப்படி ஒரு சுயநல ஓட்டுக்குள் முகம் இழுத்த ஆமைகள்போல வாழ்வது ஏன்..?
ஒரு கூட்டு எண்ணமும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற ஓர்மமும் இல்லாதுவிட்டால் எம்மை ஒரு இனமாக, ஒரே தேசியஇனமாக எப்படி அழைத்துக்கொள்வது..? வெறுமனே ஒரு மொழியை பேசும் மக்கள் கூட்டம் என்ற வரையறையுடன் மட்டுமே வாழ்ந்து போய்விட போகின்றோமா..? தாமும் தங்கள் குடும்பமும் நன்றாக வாழவேண்டும் என்று நினைத்திருந்தால் சந்தியநாதன் முதல் இத்தனை ஆயிரமாயிரம் மாவீரர்கள் எழுந்திருப்பார்களா..? அவர்கள் எல்லோரும் எழுந்த அதே மண்ணில்தானே நாமும் பிறந்தோம்... அவர்கள் பேசிய அதே மொழியை, அவர்கள் நேசித்த அதே தேசியத்தையே நாமும் பூண்டவர்களாக இருக்கிறோம்... பிறகு எப்படி.? கொண்டாட்டங்களும்,சம்பிரதாயங்களும் கூடாது என்பதல்ல.. ஆனால் பக்கத்தில் எமது வேலியுடனான வீடு பற்றி எரிகையில் ஏதும் நடக்காத மாதிரி பாவனை செய்வது இருக்கிறதே அதுதான் கொஞ்சம் வலிக்கிறது...
அறைக்குள்ளோ, இல்லை வாகனத்தினுள்ளோ கொஞ்சம் வேர்த்தாலே காற்று வருகிது இல்லை என்று சாளரம் திறப்பதில் அவசரம் காட்டும் நாம் எல்லோரும் சிறைச்சாலைக்குள் வெந்து கொண்டிருக்கும் எம் உறவுகளுக்காக எம் மனச் சாளரங்களை எப்போது திறக்க போகின்றோம்...
ஏதோ ஒரு சித்திரவதை முகாமில் தனது கருவை இழந்துவிட்டு இன்னும் கொடுமைக்குள் இருக்கும் அந்த சகோதரியை இந்த புத்தாண்டில் மறந்தே போனோம் இல்லையா..?
இது எமக்கான புத்தாண்டு.. இந்த நாளில் ஏதாவது சங்கற்பம் ஏற்க வேண்டும் என்று நாம் யாராவது நினைத்தால் ஒன்றை உறுதி எடுக்க வேண்டும்... இந்த புத்தாண்டு நாளில் இருந்து சம்பிரதாயங்களுக்கான போராட்டமுறைகளில் இருந்து கொஞ்சம் முன் சென்று நாம் வாழும் நாடுகளுக்கே உரிய சட்டங்களுக்கு உரிய முறையில் இன்னும் வீரியமான போராட்ட முறைகளுக்குள் கால் பதிக்க வேண்டும்... தனது அண்ணாவின் புகைப்படத்தை ஏந்தியபடி கதறி அழுத அந்த சிறுமியை இப்போது மறந்தே போனோம் நாம் எல்லோரும்... அவளை பிடித்த முதல் நாட்களில் எமக்குள்ளிருந்த அந்த கோபமும் எதிர்ப்பு உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி வற்றி இப்போது வரண்டே போய்விட்டது இல்லையா..?
ஏதோ ஒரு சம்பிரதாயத்துக்காக முதல் நாட்களில் தெருவில் கூடினோம். கோசமிட்டோம்.. மகஜர் கொடுத்தோம்.. கொஞ்சம் முன்னேறி தெருவில் இறங்கினோம்... பின் மீண்டும் ஓரத்தில் ஏறினோம்.. இப்போது எதுவுமே செய்யாது ஓய்ந்து கிடக்கின்றோம்...
யாருக்கோ அறிக்கை கொடுப்பதற்காக செய்யும் சடங்குகள் போலவே போராட்டங்களை நடாத்துவதும் வேறு யாராவது அறிவிப்பதற்கு முதலே போராட்டத்தை நடாத்துவதிலும் காட்டும் அவசரங்களை ஏன்தான் தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்துவதில் நாம் அனைவரும் காட்டவில்லை..
இப்போதும் ஒன்றும் காலம் எம்மைவிட்டு கடந்துவிடவில்லை..
எங்கள் தாயகம்...
அது வெறுமனே மண்அல்ல... வெறும் கல்லும் அல்ல..
ஆயிரமாயிரம் மாவீரர்களின் கனவுகள், அவர்களின் வலிகள்.. அவர்களின் இறுதிநேரத்து உணர்வுகள் கலந்த இந்த தாயகத்தை இப்போது காப்பாற்றாமல் போனோமானால் இனி எப்போதும் முடியாது...
ஒற்றைதேசம் என்ற வரையறைக்குள் முகம் புதைத்திருக்கும் சர்வதேச தீக்கோழிகளோ, இலங்கைத்தீவின் ஒருமைப்பாட்டுக்குள் எதனையோ எடுத்து நீட்டும் ராஜதந்திர எசமான்களும் எமக்கான நீதியை ஒருபோதும் மீட்டு தரமாட்டார்கள்...
நாம்தான்... நாமேதான் போராட வேண்டும்..
இன்று பிறந்திருக்கும் புத்தாண்டு எதனையாவது தரவேண்டும் என்று வேண்டுவதிலும் பார்க்க இந்த புத்தாண்டில் நாம் எதனை நோக்கி இன்னும் ஆழ்ந்த உணர்வுடனும், எழுச்சியுடனும் போராடவேண்டும் என்பதையே பார்ப்போமாக..
நீதி மறுக்கப்பட்ட எமது இனத்துக்காக, கொடுஞ்சிறைகளில் வேகும் உறவுகளுக்காக, அபகரிக்கப்படும் என் தேசத்து நிலத்துக்காக, மாவீரர்களின் கனவுகளுக்காக நாம் போராடியே தீரவேண்டும்..
இந்த பிரதிக்ஜையுடனே கொண்டாடும்போதுதான் புத்தாண்டு இன்னும் வீரியமும் சிறப்பும் பெறும்.
No comments:
Post a Comment