வடமராட்சியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்
போது ஊடகவியலாளர் செல்வதீபன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு அவரைப் பின்தொடர்ந்து சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் அவர் மீது இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.செல்வதீபன் வலம்புரி, தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளின் வடமராட்சி பிரதேச செய்தியாளராக பணியாற்றி வந்தார். தமிழ் மக்களது குரல்வளையை நசுக்கவும், அவர்கள் மீதான அடக்கு முறை தொடரவும் முனையும் தரப்புக்களால் செல்வதீபன் கடந்த சில மாதங்களில் பலதடவை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் படையினரும், காவல்துறையினரும், உளவுத்துறையினரும் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இத் தாக்குதலானது அரசுக்குத் தெரியாத வகையில் ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது.
எனவே இத்தாக்குதலுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
அரச அடக்குமுறைக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் தமிழ் மக்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வதும், சித்திரவதை செய்வதும் அவற்றை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை தாக்குவதும் கொலை செய்வதும், ஊடக நிலையங்களை எரியூட்டுவதும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
செல்வதீபன் மீதான கோழைத்தனமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஊடகங்கள் மீதும் உடகவியலாளர்கள் மீதும் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
No comments:
Post a Comment