April 16, 2014

நீதி கேட்டு யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டம்!

யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம்யுவதியின்; சடலத்துடன் அவரது உறவுகள் மற்றும் ஊர்மக்கள் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.குறித்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயது மதிக்கத்தக்க யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் சடலத்துடனேயே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.


மண்டைதீவினை சொந்த இடமாக கொண்ட அவர் இடம்பெயர்ந்த நிலையினில் குருநகரினில் வசித்து வந்திருந்த நிலையினில் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.இவரை தற்கொலைக்கு தூண்டியதாக சில இளம் மதகுருமார்கள் மீது குடும்பத்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.அவர்கள் வழங்கிய வாக்குமூலப்பிரகாரம் குறித்த மதகுருமாரை பொலிஸார் கைது செய்யவில்லையெனவும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டும் குடும்பத்தவர்கள் இதனை கண்டித்தே இன்று காலை சடலத்துடன் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.


குறித்த இரண்டு இளம் மதகுருமாரே அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருந்த நிலையினிலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தவர்கள் வாதிட்டுவருகின்றனர்.முன்னதாக ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் பிரதான வீதியிலுள்ள குருமடம் முன்பதாகவும் ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டது.எனினும் அவர்கள் அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தனர்.


பின்னர் அவர்கள் சடலத்துடன் மண்டைதீவிற்கு பயணமாகியிருந்தனர்.

No comments:

Post a Comment