August 2, 2016

பொதுமக்களுக்கு அவஸ்தையைக் கொடுத்ததைத் தவிர மஹிந்த அணியினரின் ஐந்து நாள் பாதயாத்திரை சாதித்தது எதுவுமேயில்லை!

பேராதனை தொடக்கம் கொழும்பு வரை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு அவஸ்தையைக் கொடுத்ததைத் தவிர மஹிந்த அணியினரின் ஐந்து நாள் பாதயாத்திரை சாதித்தது எதுவுமேயில்லை.


பேராதனையில் கடந்த 28ம் திகதியன்று பெரும் ஆரவாரங்களுடன் ஆரம்பமான இப்பாதயாத்திரை நேற்றுப் பிற்பகல் கொழும்பை வந்தடைந்த வேளையில் குறிப்பிடும்படியான ஆர்ப்பரிப்பைக் காண முடியவில்லை.

மஹிந்த அணியினர் இப்பாதயாத்திரைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அவர்களது ஆதரவாளர்கள் கொடுக்கவில்லையென்பது தெளிவாகத் தெரிந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வருட காலப் பகுதி அவருக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவரது கணிப்புகள், எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றும் பிழைத்துத்தான் போகின்றன.

யுத்த வெற்றியை வைத்துக் கொண்டு ஐந்து வருட காலத்துக்கு தென்னிலங்கை மக்களை ஏமாற்றி வந்த அவர், படிப்படியாக தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவதை உணர்ந்தார்.

யுத்த வெற்றியைத் துரும்பாக வைத்துக் கொண்டு எக்காலமும் அதிகாரத்தில் வீற்றிருக்கலாமென்று நம்பியிருந்தமை அவரது கணிப்புக்குக் கிடைத்த முதலாவது ஏமாற்றம்.

செல்வாக்கு முற்றாக வீழ்ந்து போவதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக் கொள்வதன் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாமென அடுத்த கணக்குப் போட்டார் மஹிந்த ராஜபக்ச.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக தேர்தலை நடத்தி வெற்றி பெறுவதன் மூலம் 2022ம் ஆண்டு வரை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதவியைத் தொடரலாமென்பதே அவரது கணிப்பு.

ஆனாலும் 2022ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்கலாமென்ற அவரது கனவு கலைந்து போனது மாத்திரமன்றி, 2016ம் ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆட்சியைத் தொடருவதற்கான வாய்ப்பையும் பறிகொடுத்து நின்றார்.

இரு வருடங்களை வீணாகப் பறிகொடுத்தது சாதாரண ஏமாற்றமல்ல.

கணிப்புக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் கிடைத்த ஏமாற்றங்களின் பின்னரும், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் எதிர்கொண்ட பாராளுமன்றப் பொதுத் தேர்தலை வைத்து மற்றொரு கணக்குப் போட்டார்.

பாராளுமன்றத்தில் தனது அணி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் பட்சத்தில், பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொள்ளலாமென்பது மஹிந்தவின் திட்டமாக இருந்தது.

தனது சொந்த மாவட்டத்தையே கைவிட்டபடி குருநாகல் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட்டதற்கான உள்நோக்கம் அதுதான்.

இராணுவத்தில் கடமையாற்றுவோரில் பெருந்தொகையானவர்கள் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

புலிகளுடன் யுத்தம் நிலவிய காலப் பகுதியில் மரணமானோர் மற்றும் ஊனமுற்றோர் பலர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இவற்றையெல்லாம் வைத்து கணிப்பீடு செய்த மஹிந்த ராஜபக்ச, மிகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றவராக தன்னால் வர முடியுமென நம்பினார்.

கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெறுவதன் மூலம் பிரதமர் பதவியைக் கோரி வற்புறுத்தலாமென்பது மஹிந்தவின் திட்டம்.ஆனாலும் அடுத்தடுத்து அவரது திட்டங்கள் தோல்வியியிலேயே முடிவடைந்தன.

கடந்த இரு வருட காலமாக கால் பதிக்கும் இடங்களிலெல்லாம் தோல்வியையே சந்தித்து வருகிறார் முன்னாள் ஜனாதிபதி.ஐந்து நாள் பாத யாத்திரையில் கிடைத்ததும் அவ்வாறானதொரு தோல்வியே ஆகும்.

பாதயாத்திரையின் பின்னால் மக்கள் அலையலையாகத் திரளுவரென்றும், மக்கள் அலை மூலம் அரசாங்கத்தையே திக்குமுக்காடச் செய்து விடலாமென்றும் மஹிந்த அணியினர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு நேற்றுக் கிடைத்திருப்பது பெரும் ஏமாற்றம்!

தோல்விகளின் பட்டியலில் பாதயாத்திரையையும் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.நினைவு நல்லதாக இல்லாமல் நெருங்கிய பொருள் கைப்படப் போவதில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னரான காலப் பகுதியில் மஹிந்த அணியினரின் அரசியல் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்குவோமானால் ஒரு உண்மை நன்கு புலப்படவே செய்யும்.

அவர்களது அரசியல் பாதை வெளிப்படையானது அல்ல. அவர்களது திட்டங்கள் அரசியல் தர்மங்களுக்கு உட்பட்டவையல்ல.

மக்களுக்கு தவறான விம்பங்களைக் காண்பித்து மக்களைப் பிழையாக வழிநடத்தும் செயற்பாடுகளையே அவர்கள் தங்களது அரசியலாக்கிக் கொண்டுள்ளனர்.

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதே அவர்களது ஒரே நோக்கம். அந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக மஹிந்த அணியினர் எந்தப் பாதையிலும் செல்லத் தயாராக உள்ளனர்.

இனவாதம், மொழிவாதம், மதவாதம் மாத்திரமன்றி அரசியல் நியாய தர்மங்களுக்குப் புறம்பாகச் செல்லவும் அவர்கள் தலைப்படுகின்றனர்.அவர்கள் விடயத்தில் அதிகாரம் என்பது ஏறக்குறைய போதை போன்று ஆகிவிட்டது.

அதிகாரத்துக்குப் போதையாகிப் போனவர்களால் தோல்விகளை ஜீரணிக்க முடிவதில்லை. அதிகாரம் இன்றி அரசியலில் உயிர் வாழ்வதென்பது அவர்களால் இயலாத காரியமாக உள்ளது.

அவர்களது இன்றைய செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது அதிகாரம் என்பது எத்தனை தூரம் அவசியமாகியுள்ளதென்பது புரிகிறது.

ஆனாலும் ஜனநாயகத்தைக் கேலிக்குரியதாக்குவதற்கு இடமளிக்கலாகாது.

ஆட்சியைக் கைப்பற்றவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக் கொள்ளவும் ஆடுகின்ற நாடகங்கள் அதிக காலத்துக்கு நீடிக்க முடியாது.

No comments:

Post a Comment