August 30, 2016

பத்து தடவைகள் எங்கள் சொத்துக்களை அழித்தார்கள் ஒரு தடவை கூட நட்டஈடு தரவில்லை - சிறீதரன் எம்.பியிடம் செல்வாநகர் மக்கள் ஆதங்கம்!

இதுவரை பத்து தடவைகள் எங்கள் சொத்துக்களை அழித்தார்கள். ஆயினும் ஒரு தடவை கூட நஷ்ட ஈடு தரவில்லை என கிளிநொச்சி செல்வாநகர் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.


மக்களின் தேவைகள், சமகால அரசியல் நிலைமைகள் குறித்து மக்களுடன் கருத்துப்பகிரும் கலந்துரையாடல் ஒன்று நேற்று செல்வாநகர் பொது நோக்கு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

சமூக சேவையாளர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற நடைமுறை நெருக்கடிகள் குறித்து ஆராயப்பட்டது.

இங்கு கருத்துரைத்த பொது அமைப்புக்கள்,1977, 1983 ஆம் ஆண்டு வன்செயல்களின் போது அனைத்துச் சொத்துக்களையும் இழந்தே கிளிநொச்சிக்கு வந்தோம். பின்னர் யுத்தம் நிகழ்ந்தபோது 10 தடவைகளுக்கு மேற்பட நாம் குடியிருந்த இப்பிரதேசத்தை விட்டு வெளியேறினோம்.

இதன் போதெல்லாம் எங்களுடைய வீடுகளை உடைத்தார்கள், மரங்களைத் தறித்தார்கள், ஆடுமாடுகள் கோழிகள் என வாழ்வாதாரங்களை இழந்தோம்.நாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த அத்தனை சொத்துக்களையும் பல தடவைகள் இழந்திருக்கின்றோம்.

சொத்திழப்பைத் தருவதாக அரசாங்கம் பலதடவைகள் பல படிவங்களை நிரப்புவதும் நாங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு போட்டோப் பிரதிகளை அடித்துக் கொடுத்தும் தான் மிஞ்சியது.

எங்களை அரசியலுக்காக பலரும் ஏமாற்றிவிட்டு போய்விட்டார்கள். நாங்கள் நம்பியிருப்பது உங்களைத்தான்.எனவே அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்து எமது சொத்தழிவுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுத்தர முயற்சியுங்கள் எனக்கோரிக்கை விடுத்தனர்.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மேனாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான குமாரசிங்கம், மற்றும் இராஜசிங்க சேதுபதி, கணேசபுரம் வட்டார இணைப்பாளர் திவாகர், கிராமிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment