August 25, 2016

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பிணையில் விடுதலை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்ட மாணவர் ஒன்றியத்தலைவர் சி.சிந்திரனின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் ஒத்திவைத்துள்ளார்.


கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஏற்பட்ட முரண்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் பாரிய பிரச்சினை ஏற்பட்டது.

குறித்த பிரச்சினையின் போது தாக்குதலுக்கு இலக்காகிய சிங்கள மாணவர் தன்னைத் தாங்கியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் என அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவரை கைதுசெய்ய முயன்ற வேளை மாணவ தலைவர் நீதிமன்றில் சரணடைந்தார்.

மேற்படி வழக்கினை இன்றைய தினம் வரை ஒத்திவைத்த நீதிபதி மீண்டும் குறித்த வழக்கினை இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். மேற்படி வழக்கில் கோப்பாய் பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய 3 தமிழ் மாணவர்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

மேற்படி வழக்கில் 3 மாணவர்களும் தலா 60 ஆயிரம் ருபா பெறுமதியான தலா ஒரு ஆள்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை ஏனைய சிங்கள மாணவர்களின் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment