August 28, 2016

அரசியல்கைதிகளின் விடுதலை குறித்து புதன்கிழமைக்கு முன் முக்கிய அறிவிப்பு!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினரை விடுவிப்பது குறித்து எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
சிறு சிறு குற்றசாட்டுக்களை கொண்ட சந்தேக நபர்கள், இதுவரையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாது சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு விடுதலை அளிப்படவுள்ளது.

 
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விஷேட கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றிருந்தது. இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சட்ட ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி,சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது வழக்கு தாக்கல் செய்யப்படாதுள்ள அரசியல் கைதிகள் சிறு குற்றச்சாட்டுக்களை கொண்ட சந்தேக நபர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து விடுதலை அளிப்பது,சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள கோப்புக்களை முன்னகர்த்துவது விஷேட மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை துரிதப்படுத்துவது புணர்வாழ்வு செயற்பாட்டுக்குட்படுத்துவது,பொது மன்னிப்பளிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment