August 27, 2016

பலாலித் தளத்தைச் சுற்றியுள்ள காணிகள் விடுவிக்கப்படாது! - யாழ். படைகளின் தளபதி !

குடாநாட்டில் படையினர் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகள் அனைத்தும் 2017 ஆம் ஆண்டு நிறைவுக்குள் விடு விக்கப்படும்.
எனினும் பலாலி படைத்தளத்தை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்பட மாட்டாது என்று யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

 
நேற்று பலாலியில் நடந்த காணி இல்லாதவர்களுக்கான காணி உரிமம் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது-

பலாலி படைத் தளத்தை சூழவுள்ள விடுவிக்கப்பட முடியாத காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இழப்பீடுகள் காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த உறுதிமொழிகள் விரைவில் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து வடிவில் வழங்கப்படும். யாழ். குடாநாட்டில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் நலன் கருதி மூன்று விதமான தீர்வுகளை கண்டுபிடித்துள்ளோம்.

முதலில் முகாம்களில் இருக்கும் சொந்தக் காணிகள் அற்ற மக்களுக்கு காணிகளை அடையாளம் கண்டு வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பது. இந்தத் திட்டத்திற்கு அமைய காணிகள் அற்ற முகாம் மக்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். அந்த காணி மற்றும் வீடுகளுக்கான பத்திரங்களே வழங்கப்படுகின்றன.

அதற்கமைய இந்த சான்றிதழ் மக்களுக்கான அரசு வழங்கும் உறுதிப்பத்திரமாக இருக்கும். அதேவேளை விரைவில் இராணுவத்தினரான எமது கடமையைான வீடு கட்டிக்கொடுக்கும் கடமையை நாம் விரைவில் பூர்த்திசெய்து கொடுப்போம். அடுத்ததாக காங்கேசன்துறையில் இராணுவம் மேலும் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு இருப்பது தவிர்க்க முடியாதது. எனினும் காங்கேசன்துறை துறைமுகத்தை சூழவுள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு உட்பட காணிகளில் இரு கிராம சேவகர் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய காணிகளை கூடிய விரைவில் விடுவிக்கவுள்ளோம்.

இது மக்களுக்கு நல்லதொரு தீர்வாக அமையும் என நான் நம்புகின்றேன். மூன்றாவதாக பலாலி இராணுவத் தளத்தை சூழவுள்ள காணிகள் தொடர்பானது. அவற்றை தற்போதைய நிலையில் இராணுவத்தினரால் விடுக்க முடியாது. ஆனால் அவற்றின் உரிமையாளர்களுக்கு கவர்ச்சிகரமான இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

அதேபோல் இதற்கும் நாம் எழுத்துமூலம் ஒரு உறுதிமொழியை வழங்கவுள்ளோம். ஏனெனில் யார் இருந்தாலும் யார் இடமாற்றம் பெற்று சென்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. அதற்காகவே எழுத்துமூலம் உறுதிப்பத்திரம் வழங்குகின்றோம். இதற்கமைய 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதி உயர் பாதுகாப்பு வலய காணிப் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment