August 10, 2016

யாழில் மகனைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தார் தந்தை!!

களவெடுத்து திரிந்த தனது சொந்த மகனைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தார் தந்தை!! யாழில் சம்வம் மகன் திருடன், திருத்தி தருமாறு பொலிஸில் ஒப்படைத்தார் தந்தை -மகன் வழங்கிய தவலில் மேலும் மூவர் கைது-


சுழிபுரத்தில் உள்ள கடையொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்ட குழுவில் தனது மகனும் இடம்பெற்றிருந்தை அறிந்த தந்தை ஒருவர் குறித்த மகனான சிறுவனைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்ததுடன் அவனைத் திருத்தி தருமாறும் பொலிஸாரைக் கேட்டுக்கொண்டார்.

குறித்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவன் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த திருட்டுக் குழுவில் இருந்த ஏனைய மூன்று சிறுவர்களையும் அந்த சிறுவர்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறுவனின் பெற்றோரையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பொன்னாலையில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பொன்னாலையில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் தனது மகனான, பாடசாலை செல்லும் சிறுவன் திருட்டில் ஈடுபட்டமையால் அவனை பலமுறை தண்டித்தார். ஆனால், அவன் அங்குள்ள ஒரு இளைஞனின் தூண்டுதலின் பேரில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டான்.

இதனையறிந்த தந்தை இன்று மாலை அவனைப் பிடித்து வட்டுக்கோட்டை பொலிஸில் ஒப்படைத்ததுடன் எப்படியாவது அவனைத் திருத்தி, அவன் பூரணமாக திருந்திய பின்னர் தன்னிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இவன் திருந்திய பின்னர் இவனைத் திருட்டுக்கு தூண்டிய இளைஞனும் ஊரில் உள்ள ஏனைய திருட்டுச் சிறுவர்களும் சேர்ந்து அவனை மீண்டும் திருடனாக்குவர் என்று கருதியதால் அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கோரினார்.

இந்த நிலையில், குறித்த சிறுவனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, ஊரில் உள்ள இளைஞர் ஒருவனும் தானும் ஏனைய சில சிறுவர்களும் சேர்ந்தே திருட்டில் ஈடுபட்டதாக அவன் தெரிவித்தான்.

இதில் ஒரு சிறுவன் கொழும்புத்துறையைச் சேர்ந்தவன் என்றும் அவனும் பொன்னாலையில் வந்து நின்று இவர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதாகவும் அவன் கூறினான். மேலும், கொழும்புத்துறையைச் சேர்ந்த அந்தச் சிறுவன் கஞ்சா பயன்படுத்துபவன் என்றும் சிறுவன் கூறியதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து களத்தில் இறங்கிய பொலிஸார் ஏனைய சிறுவர்களைப் பிடிக்க இன்றிரவு 7 மணியளவில் பொன்னாலைக்குச் சென்றபோது, அவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து இரகசிய முறையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, அங்குள்ள வீடொன்றில் பெற்றோர் தனது மகனுடன் சேர்;த்து ஏனைய சிறுவர்களையும் மறைவாக தங்க வைத்திருந்தமை தெரியவந்தது.

உடனடியாக அங்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுவர்களைக் கைது செய்ததுடன் அவர்களை மறைத்து வைத்திருந்தமைக்காக அந்த பெற்றோரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனது மகனைத் திருத்தி தருமாறு பொலிஸில் ஒப்படைத்த தந்தையை பலரும் பாராட்டியுள்ளனர். இதுபோன்று ஏனைய பெற்றோரும் முன்மாதிரியாக செயற்பட்டால் திருடர்கள் உருவாகுவதைத் தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment