August 1, 2016

உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை! வெளிநாட்டு நீதிபதிகளே வேண்டும்: வடக்கு மக்கள் கருத்து!

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம் உள்ளடக்கப்படவேண்டும். கடந்த கால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலேயே, வெளிநாட்டு விசாரணையையும், வெளிநாட்டு நீதிபதிகளையும் கேட்கின்றோம்.


கொல்லப்பட்ட - காணாமற்போன - அங்கவீனமாக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டும். இதனை, போரில் பிள்ளைகளை - உறவுகளைப் பறிகொடுத்த ஒருவனாக உங்களிடம் கேட்கின்றேன்.

இவ்வாறு மல்லாவி - யோக புரத்தில் வசித்துவரும் 62 வயதான அ.அமிர்தலிங்கம் நல்லிணக்கச் செயலணியிடம் தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைப்பது என்பன தொடர்பில் வடக்கில் மக்களிடம் கருத்தறியப்படுகின்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது:

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

நாம் ஆடு, மாடு, கோழி வேண்டும் என்று கேட்கவில்லை. எங்கள் பிள்ளைகள் காணாமற் போய்விட்டார்கள் என்று பரணகம ஆணைக்குழுவில் முறையிட்ட போது, அவர்கள் கோழி வேண்டுமா மாடு வேண்டுமா என்றுதான் கேட்டனர்.

நாங்கள் அதைக் கேட்கவில்லை. குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடியுங்கள். கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டவர்கள் நாங்கள்.

எங்களைப் பட்டினிபோட்டும் சாகடித்தார்கள். 3 இலட்சம் மக்கள் போரின் இறுதியில் அகப்பட்டிருந்தோம். ஆனால், 25 ஆயிரம் பேருக்குரிய உணவைத்தான் மஹிந்த அரசு அனுப்பியது.

இறுதிக் கட்டப் போரை முழுமையாக அனுபவித்தவன் என்ற அடிப்படையில் சொல்கின்றேன், உணவின்றியும் பலர் சாவடைந்தனர். உணவுக்கு கையேந்தி வரிசையில் நின்றபோது கொல்லப்பட்டவர்கள் பலர்.

1977ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே என்பது தெரியாது. இதனால் எங்களுக்கு உள்ளுர் விசாரணையிலும், உள்ளுர் விசாரணையாளர்களிலும் நம்பிக்கையில்லை.

குற்றவாளிகள் இனம் காணப்படவேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கெடுப்புடன் சர்வதேச விசாரணையே தேவை என்றார்.

எங்களைப் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த இடத்தில் இருக்குமாறு தெரிவித்தனர். அங்கு ஒன்றுகூடி இருந்த மக்களில் பலரைக் கொலை செய்தனர்.

எறிகணைகள் எங்கள் மீது தவறி விழவில்லை. இலக்குமாறி விழவில்லை. எங்களைக் கொல்லவேண்டும் என்ற நோக்குடன்தான் எறிகணை வீசினார்கள். திருகோணமலை குமாரபுரம் வழக்கு முடிந்து போய்விட்டது.

இராணுவத்தினர் சுற்றவாளிகள் என்று விடுவித்துவிட்டார்கள். இங்கே உள்ள நீதிபதிகளையும், விசாரணையாளர்களையும்

பயன்படுத்தி வழக்கு நடத்தினால் இப்படித்தான் முடிவு வரும். எனவே, போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும்" - என்றார்அனிஞ்சயன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கந்தையா நவரத்தினராஜா.

No comments:

Post a Comment