August 7, 2016

முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள் - இனஅழிப்பின் ஒரு வடிவமே! - ஜனாதிபதிக்கு கடிதம் !

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீரென மரணிக்கின்றனர். இவர்களின் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது.
எனவே, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

 
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடச்சியான உயிரிழப்பு பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. கடந்த காலத்தில் அரசால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் சிலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் புற்றுநோய் காரணமாகவே உயிரிழப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே, தமக்கு இரசாயன உணவும் சந்தேகத்துக்கிடமான மருந்தும் ஏற்றியதாக புனர்வாழ்வில் இருந்து விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் பகிரங்கமாகவே மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியிடம் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் மிக மோசமான அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு இவ்வாறான மரண பயம் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, இவர்களுடைய அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுத்த தரம் வாய்ந்த மருத்துப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்களின் தார்மீகக் கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஆனால், வழமைப்போல் இதனையும் அரசியலாக புறந்தள்ளி விடாதீர்கள். எனவே, இவ்வாறான நிலை கட்டமைக்கப்பட இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது. வெறுமனே நல்லாட்சி அரசு என நீங்களே உங்களுக்கு கூறிக்கொள்வதை விடுங்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நல்லெண்ண முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திலும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே, மனங்கள் வெல்லப்படாத வரை நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை.

சிங்கள மேட்டிமை வாதப் போக்கு உள்ளவரை நல்லிணக்கம் என்பது கானல் நீர்தான். இவற்றை ஏன் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் இல்லை என்பதே வேதனையுள்ளது. எனவே, முன்னாள் போராளிகளின் அச்சத்தைப் போக்க வழிவகுப்பீர்கள் என நம்புகின்றோம்" - என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் ஜ.நா. தூதரகம், அமெரிக்கத் தூதரகம், இந்தியத் தூதரகம், சுவிஸ்சர்லாந்து தூதரகம், பிரிட்டன் தூதரகம் ஆகியவற்றின் தூதுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment