August 30, 2016

அனைத்துலக காணாமற்போனோர் தினம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

வல்லாதிக்க சக்திகளும், பெரும்பான்மை இனவாதிகளும் தங்கள் அரசியல்,பொருளாதார, கேந்திர நலனுக்காக சிறுபான்மை இனங்களை அழித்தொழிக்கும் வதை மிகுந்த வடிவங்களில் ஒன்றுதான் காணாமற் போகச் செய்தலாகும்.


போர் நடைபெற்ற தேசங்களிலெல்லாம் சட்டத்துள் அடங்காமல் என்றும் கேள்விக்குறியாகவே நிற்கப்போகும் காணாமற் போகச் செய்தலென்ற இனஅழிப்பு வடிவத்தை காலங்காலமாக இந்தச்சக்திகள் கைக்கொண்டு வருகிறார்கள்.

இலங்கைத் தீவில் சிங்கள அரச இயந்திரமானது  ஈழத்தமிழர்களை அழித்து அவர்கள் வளங்களையும், உளவியலையும் சிதைக்குமுகமாக ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கு முன்னான காலத்தில் இருந்தே காணாமற் போகச் செய்தலென்ற இன அழிப்பின் நுண்ணியவடிவத்தைக் கைக்கொண்டு வருகிறார்கள், மகாவலி திட்டத்தின் பெயரால் சிங்கள அரசால் பறிக்கப்பட்ட தமிழீழத்தின் வளம் செறிந்த எல்லைக்கிராமங்களில் இனந்தெரியாத நபர்கள் என்று சொல்லப்படுகின்ற சிங்கள அரசின் பாதுகாப்புப் பிரிவினரால் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட முன்னரான காலத்தில் இருந்தே தமிழர்கள் காணாமற் போகச்செய்யப்பட்டர்கள்.

முக்கியமாக கிழக்கின் எல்லைக்கிராமங்களில் காட்டுக்கும்,வயலுக்கும் தொழிலுக்கெனப் போன நூற்றுக்கணக்கானோர் காணாமற் போகச்செய்யப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழர்கள் மீதான சிங்கள அரசின் காணாமற் போகச்செய்தலென்ற இன அழிப்புப் பொறிமுறை தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை தொடர்கிறது.

ஜே.ஆர் ஜெயவர்த்தன காலத்தில் சிங்கள இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட பலரில் இருவர் முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் சென்ற வருடம் தன்னிலை அற்று வெளியே வந்தபோதுதான் எங்கெங்கென்றே தெரியாத இரகசிய இராணுவ முகாம்களில் இன்னமும் தமிழர்கள் சட்டவிரோதமாக, அடிமைக் கூலிகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆயினும் எப்போதுமே தமிழர்களுக்கெதிரான நீதிமுறைமையைக் கைக்கொள்ளும் சிங்கள நீதிமன்றிடம், ஊடகங்களும், சர்வதேச தலையீடும் உள்ளதாகச் சொல்லப்படுகின்ற இன்றைய காலத்திலும் இழக்க வைக்கப்பட்ட அவர்களின் இத்துணை ஆண்டுகால வாழ்க்கை குறித்து எந்தவொரு சட்ட ரீதியான முன்னெடுப்பையும் தமிழர் தரப்பினால் முன்னெடுக்க முடியவில்லை.

தொண்ணூறுகளில் கிழக்கிலும், வடக்கிலும் முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட வளம் செறிந்த முப்பதிற்கும் மேற்பட்ட எல்லைத் தமிழ்க்கிராமங்களில் காணாமற் போகச்செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோர் குறித்து இரெண்டு தசாப்தங்களாகியும் இன்றுவரை எந்தப் பதிலும் இல்லை.

நிகழ்கால இலங்கை அரசை ஆட்சி செய்கின்றவர்களில் முக்கியமானவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால மற்றும் இப்போதுள்ள முக்கிய அமைச்சர்கள் பதவியில் இருந்த காலத்தில் காணாமற் போனோர் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் எந்தவொரு கேள்வியையும் எழுப்புவதில்லை.

செம்மணிப்படுகொலை உட்பட பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சந்திரிகா ஆட்சியில் இருந்த காலத்தில் தான் காணாமற் போகச்செய்யப்பட்டர்கள். இன்றுவரை அவர்களின் இருப்பு குறித்து எந்தப்பதிலும் இல்லை.

மகிந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் போனோர் குறித்தும் முள்ளிவாய்க்காலின் பின் சரணடைந்து காணாமற் போன பல்லாயிரக்கணக்கானோர் குறித்தும் மகிந்தவின் நிதி மோசடி பற்றியும், குடும்ப ஆட்சி பற்றியும் பேசிகின்ற நிகழ்கால சிங்கள அரசு காணாமற்போன தமிழ் மக்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை.

அவர்கள் மகிந்த என்ற தனி மனிதனை சாட்டுக்கு குற்றம் சாட்டும் ஊடகப் பரபரப்பை தினமும் செய்வதற்குக் காரணமே அந்தப் பரபரப்புள் தமிழர்களது இனப்பிரச்சனை மறக்கடிக்கப்பட்டு விடும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொருமுறை ஆட்சிமாறும் போதும் அடுத்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் முன்னர் எமக்கு என்ன செய்தார்களென்பதை மறந்து அவர்களிடமே தமிழ் அரசியற் தலைவர்கள் நீதிவேண்டி நிற்கிறார்கள்.

காலங்காலமாக எம்மை அழித்தவர்களே மாறிமாறி ஆட்சிக்கு வருவதும் அவர்களிடமே நாம் போய் நீதிவேண்டி நிற்பதுமான நிலை இன்றுவரை தொடர்கிறது.

தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான யுகப்பிரிகோடு வரையப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை 65000 க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் சிங்கள, இந்திய, மற்றும் ஒட்டுக்குழுக்களால் காணாமற் போகச் செய்யப் பட்டிருக்கிறார்கள்.

காணாமற்போனோர் குறித்து பல்வேறு போராட்டங்களும்,ஆவணங்களும், சாட்சிகளும் சர்வதேசத்தின் முன்னால் வைக்கப்பட்டும் பாதிக்கப்படவர்களுக்கான எந்தவொரு நீதியையும், சிங்கள அரசும் சர்வதேசமும் முன்வைக்கவில்லை.

ஒவ்வொருமுறையும் நாம் சர்வதேசத்தின் முன்னால் நாம் நீதிவேண்டி நிற்கும் போது காலத்தை இழுத் தடித்து நினைவுகளை மறக்கடிக்கச் செய்வதற்கான ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதும் பின்னர் அவை கிடப்பில் போடப்படுவதுமான நிலையினை நாம் கண்ணூடு பார்த்துவருகிறோம்.

இத்தனை ஆண்டுகால தாக்குப்பட்டறிவின் அனுபவத்தில் எந்தவொரு சிங்கள அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கான நியாமான நீதியை ஒருபோதும் வழங்கமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஆயினும் ‘நடந்து விடாதென்பதையும் நடத்துவித்துக் காட்டுதலே உடைந்தும் உயிர் கொள்ளும் உயிர்த் தினவு செறிந்தவொரு திடம் மிகுந்த விடுதலைப் போராட்டத் திருக்கீதை’என்பதற்கிணங்க காணாமற் போகச் செய்யப்பட்டோர் தினமான இன்று அவர்களுக்கான நீதிக்காகவும், அவர்களது குடும்பங்களின் எதிர்கால சுபீட்சத்துக்காவும் மக்களவையினராகிய நாம் எந்தச் சமரசமுமின்றி நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடுவோமென உறுதி கொள்வோமாக.

No comments:

Post a Comment