July 25, 2016

பயங்கரவாத தடைச்சட்டத்தை தமிழ் மாணவர்கள் மீது திணிக்க முயற்சி! - விக்கிரமபாகு குற்றச்சாட்டு !

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலை பயன்படுத்தி, தமிழ் மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திணித்து அவர்களை ஒடுக்கும் சதித் திட்டமொன்று அரங்கேற்றப்பட்டு வருவதாக நவசமசமாஜ கட்சிகட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.


 
தென்பகுதியைச் சேர்ந்த இனவாதிகளின் இந்த முயற்சிக்கு அரசாங்கம் துணை போனால் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவோ, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவோ முடியாது போய்விடும்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. தமிழ் மாணவர்களுக்கு எதிரான தென்பகுதியில் உள்ள ஒருசில சிங்களவர்கள் அந்த மோதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இராணுவம் உட்ட யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள ஆயுதப்படைகளுக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்புகள் உள்ளன.

இதனால் இந்த சம்பவத்துக்கான உண்மை கண்டறியப்பட வேண்டியது அவசியம். இதனை பக்கச்சார்பின்றி மேற்கொள்ள வேண்டும். அதேவேளை தமிழ் மாணவர்கள் தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம்சாட்டி, அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆரம்ப புள்ளியாக விஞ்ஞானபீட மோதலை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் அரசாங்கம் இந்த சம்பவம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து சதி நடவடிக்கைக்கு காரணமானவர்களை கண்டறிய வேண்டும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தென்பகுதி இனவாதிகளை கண்டறிய வேண்டும். எந்தவொரு நிலையிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறக்கூடாது. ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். அந்த பயங்கரமான சட்டத்தை நீக்குதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது.

இந்த சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்ட பலர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், 160ற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிறையில் வாடுகின்றனர். தற்போதைய சூழ்நிலையிலும் யாழ்ப்பாணத்தில் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது தொடர்கிறது. கஅதனால் யாழ். பலக்கலைக்கழக சம்பவத்தையும் ஒரு பயங்கரவாத செயற்பாடாக பார்க்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு பார்க்கப்பட்டால் அது பாரதூரமான பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment