July 19, 2016

சிங்கள மக்களிடத்தில் காணப்படும் அர்ப்பணிப்பு தமிழ் மக்களிடத்தில் இல்லை! யாழ். பல்கலைக்கழக மோதலின் எதிரொலி!

நல்லிணக்கத்திற்கு சிங்கள மக்கள் தேவைக்கு அதிகமாகவே அர்ப்பணிப்பு செய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் அர்ப்பணிப்பினையோ முன்னுதாரணத்தையோ வழங்கத் தவறியுள்ளனர்.


ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இனவாத பயங்கரவாதத்திலிருந்து மீட்ட போதிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இன்னமும் இனவாத பிடியிலிருந்து மீட்க முடியவில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் மிகவும் வருந்ததத்தக்க சம்பவமாகும்.

மாணவர் வரவேற்பு நிகழ்வில் கலாச்சார அம்சங்களை உள்ளடக்கியமையே இந்த மோதல் வெடிக்கக் காரணமாகியுள்ளது.

கலாச்சார சுதந்தரத்திதை ஏற்றுக்கொள்ள முடியாத இனவாத, கோத்திரவாத, மதவாத சக்திகளே இந்த சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளன.

சிங்கள சமூகத்தின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தரப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் இருக்கின்றது என்பது புலனாகின்றது.

இந்த சம்பவத்தை இனவாத அடிப்படையில் விபரிக்க வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. எனினும் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

30 ஆண்டு கால போரின் போது சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டனர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

எனினும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் உரிமைகள் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலைமை ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் எழுந்தது கிடையாது.

தமிழ் மாணவர்கள் தங்களது புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகளுக்கு நாம் யாரும் எதிர்ப்பை வெளியிட்டதில்லை.

கை கால்களை உடைத்தோ இரத்தத்தை சிந்த வைத்ததோ கிடையாது. அவ்வாறானால் ஏன் யாழ். பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்த கோத்திரவாத இனவாத குழப்பங்கள் ஏற்படுகின்றன?

பல்வேறு காரணிகளுக்காக பல்கலைக்கழகங்களில் மோதல்கள் ஏற்படுகின்றன. எனினும் யாழ். பல்கலைக்கழகத்தில் கலாச்சார நிகழ்வு ஒன்றின் அடிப்படையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

தேசிய நல்லிணக்கத்திற்கு சிங்கள மக்கள் வேண்டியளவு அர்ப்பணிப்புக்களை செய்துள்ளனர். எனினும் தமிழ் மக்கள் அந்த அர்ப்பணிப்புக்களையோ முன்னுதாரணங்களையோ வழங்கவில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மீட்கப்படாத வலயமாக மாற்றமடைய இடமளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment