March 3, 2015

வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நான் கட்டாயம் நிறைவேற்றுவேன்! யாழில் ஜனாதிபதி பேச்சு!

வடக்கு மக்களின் பேராதரவுடன் நான் இன்று ஜனாதிபதியாகி உங்கள் முன்வந்துள்ளேன். வடக்கில் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கான எனது உறுதிமொழிகளை நம்பியே மக்கள் வாக்களித்தார்கள். எனவே மக்கள் விருப்பத்தை நான் ஏற்படுத்துவேன். வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களை மனங்களால் ஒன்றிணைப்பதே எனது நோக்கம். எனவே அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதன்மூலம் நாம் அனைவரும் இந்த நாட்டில் பயம், சந்தேகம் இன்றி ஒற்றுமையாக வாழமுடியும். இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.



வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராக களமிறங்கியபோது நான் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வந்தேன். இன்று ஜனாதிபதியாக உங்கள் முன்வந்திருக்கிறேன். என்னை வெற்றியடையச் செய்தமைக்கு வடக்கு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நாட்டில் மக்கள் அனைவரும் இன,மத பேதங்கள் இன்றி வாழ்வதையே நான் விரும்புகிறேன். இலங்கையில் நிலவும் நீண்டகால பிரச்சினைகளைப் பேச்சுக்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். நாம் நாடாளுமன்றம் ஊடாகவும், மாகாண சபை ஊடாகவும் எமது பிரச்சினைகளை அணுகி தீர்க்கமுடியும்.
இராணுவத்தினர் காணிகளை வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல கொழும்பிலும் கையகப்படுத்தியுள்ளனர். எனவே அவற்றை விடுவிக்க நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன். வடக்கு மாகாணத்துக்கு சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு எட்டப்படும். எமது நாட்டில் நூற்றுக்கு ஆறு வீதமானவர்கள் வேலை இன்றி உள்ளனர். கடந்த 3 வருட காலமாக பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் நான் அறிவேன். அவர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கடந்த 5 வருட காலமாக நான் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காரணத்தினால், வைத்தியசாலைகளில் நிலவும் பதவி வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பேன். வடக்கு விவசாயிகள் எமது நாட்டுக்கு முன் உதாரணமானவர்களாக உள்ளனர்.
தேசிய வருமானத்தில் வடக்கு விவசாயிகள் பங்கு கணிசமானதாக உள்ளது. எனவே விவசாயத்துறை சார் குறைபாடுகளும் விரைவில் பூர்த்தியாக்கப்படும். வடபகுதியில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சினைக்கும், தீர்வு காணப்படும். போர் காரணமாக 80 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் உள்ளன என்று எனக்கு அறிக்கை இடப்பட்டுள்ளது. இது போல தெற்கிலும் உள்ளனர்.

 இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த விசேட செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் பற்றி வாராந்தம் கலந்துரையாடி வருகிறோம். அரசியல் தலைமைத்துவங்களும், வடக்கு மாகாண சபை, உள்ளூராட்சி சபையினரும் இங்குள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். -என்றார்.

No comments:

Post a Comment